பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரத்தில், தன்னை அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலக அதிகாரிகளே தன்னை தவறாக வழிநடத்தியதாக தெரிவித்துள்ள அவர் வழக்கின் தீர்ப்பை ஆராய்ந்தபோது, ஜனாதிபதி செயலகத்தினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்பட்ட தொழில்நுட்பக் கோளாறே நீதிமன்ற முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு தொடர்பாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதி அவசியம் என சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான மேலதிக சிரேஸ்ட செயலாளர் தெரிவித்திருந்த போதிலும், அந்த ஆவணங்கள் அமைச்சுக்கு அனுப்பப்படாமலேயே தன்னிடம் கையொப்பம் பெறப்பட்டது.
தனது ஆட்சிக் காலத்தில் அதிகாரிகள் இழைத்த அந்தத் தவறே, சந்தியா எக்னெலிகொட மற்றும் பாக்கியசோதி சரவணமுத்துவுடன் தொடர்புடைய அமைப்பினால் தொடரப்பட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஞானசார தேரர் மீண்டும் சிறைசெல்லக் காரணமானது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் முழுமையாக ஏற்று மதிப்பதாகக் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன,;தவறுக்காக பௌத்த மதகுருமார்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
