வாழ்க்கை:ஒரு உணர்ந்த பயணம்
வாழ்க்கை என்பதன் அர்த்தம், அதை நாம் வாழும் தருணங்களில் முழுமையாகப் புரிவதில்லை; அது அனுபவமாக மாறும் போது தான் தெளிவடைகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை நீளும் இந்தப் பயணம், ஒருவரின் தனிப்பயணமாகத் தோன்றினாலும், உண்மையில் அது உறவுகளால் பின்னப்பட்ட ஒரு வாழ்வியல் வலைப்பின்னல்.
ஒரு மனிதன் தனித்து வாழ்வதில்லை. குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரை, யாரோ ஒருவரைச் சார்ந்தே வாழ்கிறான். அந்தச் சார்பு பல வடிவங்களில் தோன்றுகிறது—அன்பு, பாசம், நட்பு, பொறுப்பு, கடமை. ஆனால் இந்த உறவுகளின் மத்தியில், நாம் மறந்துவிடக்கூடாத ஒன்று — நம் சுயம்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே எத்தனை மகிழ்ச்சிகள் கிடைத்தன என்பது விட, எத்தனை போராட்டங்களையும் தேடல்களையும் கடந்தோம் என்பதே வாழ்க்கையின் உண்மையான அளவுகோல். ஒவ்வொரு அனுபவமும், ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுத்தரும் ஆசிரியர்களாக மாறுகின்றனர். வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது பொருள் அல்ல; நல்ல மனிதர்கள், நல்ல நினைவுகள், நல்ல அனுபவங்கள்.
உறவுகளில் சண்டைகள் வருவது இயல்பு. ஆனால் அவை பாசத்தின் எல்லைக்குள் நிற்க வேண்டும். வார்த்தைகள் காயப்படுத்தும் அளவிற்கு செல்லும் போது, அந்த உறவின் அமைதி குலைகிறது. எப்போதும் நம்மை மதிப்பிடும், குறை காணும், எடைபோடும் மனிதர்களிடமிருந்து விலகி நிற்பதே மனநிம்மதிக்கான முதல் படி.
உண்மையான அன்பு என்பது கட்டுப்படுத்துவதல்ல; அது ஏற்றுக்கொள்வது. அது மன்னிக்கும், விட்டுக்கொடுக்கத் தெரியும், ஏற்றத் தாழ்வுகளை எண்ணாது. இங்கு ஓஷோ அவர்கள் கூறும் ஒரு சிந்தனை நினைவிற்கு வருகிறது:
“உண்மையான அன்பு என்பது சொந்தமாக்குவது அல்ல; சுதந்திரம் அளிப்பது.”
இந்த கருத்து உறவுகளின் அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறது. அன்பு ஒருபோதும் கட்டளையிடாது; அது கூடவே நடக்கும்.
வாழ்க்கையின் ஒரு கட்டத்தைத் தாண்டியபின், மனிதர்களுக்கு மிகவும் தேவைப்படுவது அதிகாரமோ, பெருமையோ அல்ல; அது ஆறுதலாக இருக்கும் ஒரு உறவு. புரிதலுடன் இருக்கும் ஒரு உறவு, நூறு உறவுகளுக்குச் சமம். அந்த வரம் நம் சிந்தனையின் தெளிவால் மட்டுமே கிடைக்கும்.
ஒரு உறவு, ஒருவரின் மனநிம்மதியை குலைக்கிறதா? அவரின் தனித்தன்மையை அழிக்கிறதா? அப்படியானால், அந்த இடத்தை விட்டு விலகுவது தவறு அல்ல. அது அந்த உறவிற்கும், அந்த அனுபவங்களுக்கும் நாம் கொடுக்கும் மரியாதை.
நம்மை விமர்சிப்பவர்களுடன் வாதிடாமல், “ஆம், அது என் பிழை” என்று விலகிச் செல்லும் அமைதியான வலிமை, ஒரு பெரிய உள்ளார்ந்த வளர்ச்சி. ஏனெனில் அவர்கள் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தந்திருக்கிறார்கள் — இனி எவ்வாறு வாழ வேண்டும் என்று.
வாழ்க்கை வலியையும் தரும், சோதனைகளையும் தரும். ஆனால் அந்த வலி, நம்மை வலிமையாக்கும். ஒவ்வொரு வீழ்ச்சியும், எழுவதற்கான ஒரு புதிய வாய்ப்பு.
இறுதியில், வாழ்க்கை எவ்வாறு சென்றாலும், நம் பயணம் ஒரு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். நம் இருப்பு ஒருவரின் மனதில் ஒரு நல்ல நினைவாக இருந்தால், அதுவே வாழ்வின் வெற்றி.
இந்த நிமிடமே நம் வாழ்க்கை. அதை நிம்மதியுடனும், தெளிவுடனும், உண்மையுடனும் வாழ்ந்தால் —
நம் இறுதி கூட, நம் தனித்துவத்தின் அமைதியான நிறைவு ஆகும்.
மீண்டுமொரு பிறப்பெடுக்கிறது மனமும் சிந்தையும்.
இறுதிப்பிறப்பாக இதயம் முடிவுசெய்கிறது.
“மதிவதனி”(மதி)