திரையும் உரையும் 2026
கடந்த ஞாயிறு 26.04.2026 அன்று
ஜேர்மனிய நாட்டின் Dortmund நகரில்
தமிழர் அரங்கினில் திரையும் உரையும் நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.
கலைத்துறை சார்ந்தவர்களும், தொழில் நுட்பம் சார்ந்தவர்களும்
மண்டபம் நிறைந்து காணப்பட்டனர்….
குறிப்பாய் இளையோர் அதிகம் நிறைந்திருந்தமை மகிழ்வினைத்தந்தது.
திரு. சபேசனின் வழி நடத்தலில்
திரையும் உரையும் ஆரம்பமானது
நீண்ட காலமாக கலைத்துறையில்
ஈடுபட்டு வரும் திரு. சு. பாக்கியநாதன்
அவர்களின் கலைத்துறை சார்ந்த
பயணத்தை ஆவணப்படுத்தி வெளியிட்டிருப்பது, வாழும் போதே
ஒரு கலைஞனை வாழ்த்துவது
வரவேற்கத்தக்கது.
இதை வெளிக்கொணர்ந்த திரு. சபேசனுக்கு எனது வாழ்த்துகளையும்
பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து குறும்படங்களுக்கு வருகிறேன்.
ஐந்து குறும்படங்கள்
இதில் செயற்கை நுண்ணறிவு
பயன்படுத்தி உருவாக்கப்பட்ட
மூன்று குறும்படங்களும்
உள்ளடங்கும்.
பெருகிவரும் இந்த அறிவியல்
உலகில் வியக்கத்தக்க மாற்றங்களை
நோக்கி பயணம் செய்ய வேண்டிய
நிர்ப்பந்தமா…? அல்லது இதுதான்
உலகமா….? மாற்றங்களை நோக்கி
நகர்வது நல்ல மாற்றமா..? அவை
ஆரோக்கியமான மாற்றத்தோடு
நகருமா என்கின்ற குழப்பமே
நிலவுவது…
உதாரணமாக உலகினில் சிறந்த
ஓவியங்களாக இன்றும் பேணப்பட்டு
பேசப்பட்டு வருகிறது என்றால்
அதன் உழைப்பு என்பது மகத்தானது
மணிக்கணக்காக அமர்ந்திருந்து
தன் மனதிலுள்ள உணர்வுகளை
ஓவியமாக வரைகின்ற போது
அவன் அடைகின்ற ஆத்மார்த்தமான மகிழ்வினை இந்த செயற்கை
நுண்ணறிவுவால் ஈடு செய்ய முடியுமா….?
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவே அகிலத்தை
ஆட்கொண்டு ஆடப்போகின்றது
என்கின்ற நிதர்சனத்தை
ஏற்றுக்கொண்டாலும்..மனித
உணர்வுகள் மழுங்கடிக்க
என்பதையும் மறுத்துவிடமுடியாது.
உனக்கு என்ன வேண்டும்
உன் மொழியில் கேள்
என் பாணியில் தருகிறேன் என
செயற்கை நுண்ணறிவு
முனைப்போடு நிற்கிறது..
அன்று திரை அரங்கத்துனுள்
ஒளிர்ந்த குறும்படங்கள்
வித்தியாசமான கதைக்களத்தை
கொண்டிருந்தாலும் . மனதோடு
ஒன்றிப்போகவில்லை என்பதே உண்மை.
ஒரு வீட்டிற்குள் உயிருள்ள செடியை
வளர்ப்பதும்… உயிர் இல்லா செடியை
வைத்திருப்பதுபோலவே இன்றைய
மாற்றங்களும் திகழ்கின்றது
உயிருள்ளது உணர்வினைத்தருவதுபோல
உயரில்லா செடி தந்த விடுமா…?
பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம்
உணர்வினைத்தரமுடியுமா..?
அன்றைய அரங்கத்துனுள் தொழில்
நுட்பம் சார்ந்த உரையாடல்கள்
வரவேற்றகத்தக்கது. அதே வேளை
ஆற்றல்மிகுந்தவர்களும்… கலைத்துறை சார்ந்தவர்களும்
இணையும் பட்சத்தில்
எல்லாம் சாத்தியமாகும் என்பது
என் எண்ணம்.
படைப்பு என்பது
இரசிகர்கள் கவர வேண்டும்
பேசப்பட வேண்டும்
தவிர நான் என் திருப்திக்காக
படத்தை எடுத்திருக்கிறேன்
நீங்கள் பார்த்தாக வேண்டும் என
திணித்து விடமுடியாது… நாம்
இந்த சமூகத்திற்கும். எம்மொழி மூலம்
எம் திரையை வெளிக்கொணரவேண்டும்
மிளிர வேண்டும்.
பிரமாண்டமான முறையில்
ஆங்கிலப் படங்களுக்கு நிகராக
படம் எடுப்பதல்ல படம்
நம் மொழி சார்ந்து
நம் கதையை சொல்லும்
படங்களில் பயணிப்பதில்தான்
நம் மொழியும்
இனமும் சிதையாது இருக்கும்.
அன்புடன் சிறி.