இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் 88 வயதியில் காலமாகியுள்ளார்.
தனது இனிமையான மற்றும் தனித்துவமான குரலால் பல தலைமுறை இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த எஸ். ஜானகி, தனது இசைப் பயணத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இந்திய திரையிசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ள அவர், பல தலைமுறை முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு தனது குரலால் உயிரூட்டியுள்ளார்.
தமிழ் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.
காதல், சோகம், பக்தி, நாட்டுப்புறம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை தனது குரலால் வெளிப்படுத்திய அவர், இந்திய இசை உலகின் மிகச்சிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
தனது சிறப்பான இசைப் பங்களிப்புக்காக எஸ். ஜானகி நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
மேலும் பல மாநில அரசுகளின் விருதுகள் மற்றும் ஏராளமான கௌரவங்களையும் பெற்றுள்ளார். எஸ். ஜானகியின் மறைவு இந்திய திரையிசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
அவரது மறைவுக்கு திரையுலகினர், இசைக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
