கிளிநொச்சியில் 9ஆவது வடக்கு கிழக்கு பூப்பந்தாட்டப் போட்டி – NEBT 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை (WTBF) ஏற்பாட்டில் நடைபெறும் இத்தொடரில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த முன்னணி பூப்பந்தாட்ட வீரர்கள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
செப்டெம்பர் 4ஆம் தேதி ஆரம்பமான இப்போட்டித் தொடரின் தொடக்க நிகழ்வு, கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இத்தொடர் செப்டெம்பர் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்வில் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் B. முகுந்தன் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத் தலைவர் B.சுபாஸ்கரன், கிளிநொச்சி மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத் தலைவர் K.அரங்கன் , வவுனியா மாவட்ட விளையாட்டு அலுவலர் T.கமலன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.மேலும், WTBF நிறுவனர் கந்தையா சிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த வீரர்களை ஒரே களத்தில் ஒன்றிணைத்து, அவர்களிடையே போட்டி அனுபவத்தையும் விளையாட்டு ஒற்றுமையையும் வளர்க்கும் வகையில் இத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இத்தொடரில், வீரர்களின் வேகம், திறமை, ஆற்றல் மற்றும் விளையாட்டு மனப்பாங்கு வெளிப்பட்டு வருவதுடன், போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன.
“விளையாட்டால் ஒன்றிணைவோம்; விளையாட்டுக்காக ஒன்றிணைவோம்” என்ற நோக்குடன் நடைபெறும் NEBT 2026, பிராந்திய பூப்பந்தாட்ட வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமைந்துள்ளது.
