தந்தை செல்வா அவர்களின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வல்லை – அராலி வீதியில் அமைந்துள்ள தென்னிந்தியத் திருச்சபைக்குச் சொந்தமான இடுகாட்டில் அமைந்துள்ள சமாதியே சேதமாக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் பிதாமகனான தந்தை செல்வாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடுகாட்டில், அவரது நினைவாக இந்த நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
வுலிகாமம் இடப்பெயர்விற்கு முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி படையினரால் இடிக்கப்பட்டிருந்தது.
எனினும் யுத்தம் முடிவடைந்து தெல்லிப்பளைப் பிரதேசம் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2012 ஆம் ஆண்டு தூபி மீளப் புனரமைக்கப்பட்டுக் கடந்த பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது.
அத்தகைய நினைவுத் தூபியே தற்போது இனந்தெரியாத நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டுள்ளது.
