இன்றைய உலகத்தில் மனிதன் தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கலாம்…
பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கலாம்…
ஆனால் மன அமைதியில் பலர் இன்னும் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றனர்.
இப்போது மனிதன் மனதை கட்டுப்படுத்துவதில்லை…
மாறாக மனமே மனிதனை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டது.
நாம் எல்லோரும் மனத்தின் எஜமானர்களாக வாழ வேண்டியவர்கள்.
ஆனால் இன்று அதன் ஊழியர்களாக மாறிவிட்டோம்.
நீங்கள் உங்கள் மனதை கட்டுப்படுத்தவில்லை என்றால்,
உங்கள் மனமே உங்களை கட்டுப்படுத்தி விடும்.
அது மெதுவாக உங்கள் கவனத்தையும், சக்தியையும், நிதானத்தையும் பறித்து விடும்.
ஒரு நாட்டில் பெரும் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்தார்.
அவரிடம் வாழ்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் இருந்தன.
செல்வம்… புகழ்… அதிகாரம்… வாய்ப்புகள்… எதிலும் குறை இல்லை.
ஆனால் அவரது மனதில் அமைதி இல்லை.
இரவு முழுவதும் எண்ணங்களால் துன்பப்பட்டார்.
“என் வாழ்க்கையில் எல்லாம் இருக்கிறது… ஆனால் நிம்மதி மட்டும் இல்லை” என்று வேதனையுடன் ஒரு ஞானியிடம் சென்றார்.
அப்போது அந்த ஞானி அமைதியாக சிரித்தார்.
“மனம் என்பது அடங்காத காட்டு யானையைப் போன்றது.
அதை பயிற்சி செய்யாவிட்டால் அது உன்னை மிதித்து விடும்” என்றார்.
அவர் முதலில் சொல்லிக் கொடுத்த உண்மை:
“எதுவும் நிலையானதல்ல.”
வாழ்க்கையில் வரும் துக்கங்களும் கடந்து போகும்.
மகிழ்ச்சிகளும் நிரந்தரமல்ல.
மழைக்காலம் என்றும் நீடிக்காது.
கோடையும் என்றும் நிலைக்காது.
அதேபோல் துன்பமும் நிரந்தரமில்லை.
பல நேரங்களில் துக்கம் வந்தால்
“இதற்கு தீர்வே இல்லை” என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால் காலம் பல காயங்களுக்கு மருந்தாகிறது.
சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்த்தால்
நம்மை அழ வைத்த பல சம்பவங்கள் இன்று நினைவுகளாக மட்டுமே இருக்கும்.
அதனால் வசதி வந்தால் கர்வம் கொள்ள வேண்டாம்.
துன்பம் வந்தால் மனச்சோர்வு அடைய வேண்டாம்.
“இதுவும் கடந்து போகும்” என்ற எண்ணம் இருந்தால்
வாழ்க்கையில் எந்த சூழலையும் நாம் சமாளிக்க முடியும்.
மனம் அமைதியடைய மிகப் பெரிய வழி – மூச்சை கவனிப்பது.
மனிதன் பிறந்த நாளிலிருந்து இறக்கும் வரை அவனுடன் இருப்பது மூச்சு.
ஆனால் நாம் அதைக் கவனிப்பதே இல்லை.
அதனால்தான் மனம் எப்போதும் அலைபாய்கிறது.
ஒரு நேரம் கடந்த காலத்தில் துன்பத்தை தேடும்…
மற்றொரு நேரம் எதிர்காலத்தை நினைத்து பயப்படும்…
இதற்கான தீர்வாகத்தான் முனிவர்கள் தியானத்தை கற்றுக் கொடுத்தார்கள்.
அமைதியான இடத்தில் உடலை நேராக வைத்து அமருங்கள்.
கண்களை மெதுவாக மூடுங்கள்.
மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.
உங்கள் மூச்சு உடலுக்குள் எப்படி செல்கிறது என்பதை மட்டும் கவனியுங்கள்.
அப்போது அலைபாய்ந்த மனம் மெதுவாக அமைதியடையும்.
உடலிலும் மனதிலும் ஒரு புதிய சக்தி பிறக்கும்.
நம்மை அதிகமாக காயப்படுத்துவது பல நேரங்களில்
வெளியில் நடந்த சம்பவங்கள் அல்ல…
அவற்றை நாமே மனதில் மீண்டும் மீண்டும் சுமந்து செல்லும் பழக்கம் தான்.
யாரோ நம்மை விமர்சித்திருக்கலாம்…
நம்பிக்கை துரோகம் செய்திருக்கலாம்…
அவமானப்படுத்தியிருக்கலாம்…
அந்த சம்பவம் ஒரே ஒரு நாளில் நடந்திருக்கலாம்.
ஆனால் அதை பல வருடங்கள் மனதில் வைத்திருப்பது நாம்தான்.
ஒரு ஞானி ஒருவரிடம் தண்ணீர் நிரப்பிய பாட்டிலை கொடுத்து,
“இதை சிறிது நேரம் பிடித்திருங்கள்” என்றார்.
சில நிமிடங்கள் எதுவும் இல்லை.
சில மணிநேரங்கள் கழித்து கை வலிக்கத் தொடங்கியது.
அப்போது ஞானி கூறினார்:
“பாட்டில் கனமானதல்ல…
அதை நீ எவ்வளவு நேரம் பிடித்திருக்கிறாய் என்பதுதான் வலியை உருவாக்குகிறது.”
அதேபோல் தான் மனதிலிருக்கும் கோபம், பழி, துக்கம், வெறுப்பு.
அவற்றை பிடித்து வைத்திருப்பதால் பாதிக்கப்படுவது மற்றவர்கள் அல்ல… நாம்தான்.
மன்னிப்பது அவர்களுக்காக அல்ல.
உங்கள் மன அமைதிக்காக.
பழைய காயங்களை அகற்றும் போது தான்
மனம் சுதந்திரமாக சுவாசிக்கத் தொடங்கும்.
மன அமைதியை பெற வேண்டுமெனில்
உடலையும் கவனிக்க வேண்டும்.
சரியான நித்திரை இல்லாமல்…
சரியான உணவு இல்லாமல்…
உடற்பயிற்சி இல்லாமல்…
மன அமைதி மட்டும் கிடைக்காது.
உடல் சோர்வடைந்தால் மனமும் சோர்வடையும்.
அதனால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
யோகாசனம் செய்யுங்கள்.
ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வீட்டின் அஸ்திவாரம் பலமாக இருந்தால் தான்
அந்த வீடு நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.
அதேபோல் உங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரம் உங்கள் உடலே.
ஆரோக்கியமான உடலில் தான்
ஆரோக்கியமான சிந்தனைகள் உருவாகும்.
மௌனத்தின் சக்தியை புரிந்து கொள்ளுங்கள்.
யாராவது நம்மை தூண்டினால் உடனே பதில் சொல்ல வேண்டும் என்று தோன்றும்.
ஆனால் எல்லா நேரங்களிலும் பதில் சொல்லுவது அறிவல்ல.
சில நேரங்களில் பேசாமல் இருப்பதே மிகப் பெரிய அறிவு.
ஒரு நிமிட கோபத்தில் பேசப்பட்ட வார்த்தைகள்
பல வருட உறவுகளை உடைத்து விடலாம்.
அதனால் பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்:
- இது உண்மையா?
- இது தேவையா?
- இது மற்றவருக்கு காயம் தருமா?
- இது அமைதியை காக்குமா?
மௌனம் என்பது பலவீனம் அல்ல.
அது மன வலிமையின் அடையாளம்.
மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள்.
அவருக்கு பெரிய வீடு இருக்கலாம்.
அவருக்கு கார் இருக்கலாம்.
அவருக்கு புகழ் இருக்கலாம்.
ஆனால் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப் பாதை வேறு.
ஓட்டப் போட்டியில் ஓடும் வீரன்
மற்றவர்களை பார்த்துக்கொண்டே ஓடினால் தோல்வி அடைவான்.
அதேபோல் வாழ்க்கையிலும்
மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்துக்கொண்டே இருந்தால்
நம்முடைய வாழ்க்கையை நாம் இழந்து விடுவோம்.
நேற்றைய உங்களைவிட
இன்றைய நீங்கள் சிறப்பாக இருப்பதே உண்மையான வெற்றி.
எதிர்காலம் பற்றி அளவுக்கு மீறி பயப்பட வேண்டாம்.
இப்போது நீங்கள் வாழும் இந்த நிமிடமே வாழ்க்கை.
எதிர்மறை சிந்தனைகளை அகற்றுங்கள்.
உங்களை நம்புங்கள்.
தியானத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுங்கள்.
பயம் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
மனம் அமைதியானால் வாழ்க்கை அழகாகும்.
மனதை வென்றவன் உலகையே வெல்ல முடியும்.
இந்த உண்மைகளை புரிந்து கொண்டு
வாழ்க்கையை அமைதியாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.
அன்புடன்
கலைஞர் குமாரு யோகேஸ்வரன்
