அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி எப்போது? பண்ணையாளர்களைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் ஏன் பொறுப்புக்கூற மறுக்கின்றனர்?
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பசுக் கொலைகளும், கால்நடைப் பண்ணையாளர்களுக்கு எதிரான ஆயுத அச்சுறுத்தல்களும் தற்போது மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளன.
கடந்த 14.11.2026 சனிக்கிழமை மயிலத்தமடு–மாதவனை கழிமடு அருளாண்டவெட்டை குளப்பகுதியில் தேவராசா ஸ்ரீதரன் என்பவருக்குச் சொந்தமான பசு, அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்ற பண்ணையாளர்கள், சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மூவரைக் கண்டுள்ளனர். அவர்களில் இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில், மற்றொருவர் துப்பாக்கியுடன் நின்று பண்ணையாளர்களை நோக்கிச் சுடுவதற்கு முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உயிருக்கு அஞ்சிய பண்ணையாளர்கள் அங்கிருந்து தப்பியோடி பொலிஸ் நிலையத்தை நாடி முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியுடன் நின்றவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்காகப் பண்ணையாளர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, பொறுப்பான அதிகாரி வருவார், முறைப்பாட்டைப் பதிவு செய்வோம் எனக் கூறி அவர்களை நீண்ட நேரம் அலைக்கழித்துள்ளதாகவும், 15.11.2026 ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியளவில் பொறுப்பதிகாரி வந்து விடயங்களைப் பார்வையிட்ட பின்னர் மகா ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் பண்ணையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பண்ணையாளர்களைப் பாதுகாக்கவா? அத்துமீறியவர்களைப் பாதுகாக்கவா பொலிஸ் நிலையம்?
மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் என்ன?
நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி, அப்பகுதியின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்து, கால்நடைப் பண்ணையாளர்களின் உயிர், உடைமை மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
ஆனால், இன்று அந்தப் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாகப் பண்ணையாளர்கள் மத்தியில் பாரிய கேள்விகள் எழுந்துள்ளன.
அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த வேண்டிய பொலிஸார், மாறாக அவர்களின் அத்துமீறல்களுக்கு மறைமுகமாக இடமளிக்கும் வகையில் செயற்படுகின்றனர்.
துப்பாக்கியால் பசு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், அதே துப்பாக்கியைக் கொண்டு பண்ணையாளர்களையும் சுடுவதற்கு முயற்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. இது பண்ணையாளர்களின் உயிருக்கு நேரடியாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.
தொடரும் பசுக் கொலைகள்: திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சியா?
மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களின் பசுக்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருகின்றன.
கடந்த 05.11.2026 அன்று மாணிக்கம் வடிவேல் என்பவருக்குச் சொந்தமான பசு துப்பாக்கியால் சுடப்பட்டு, தோல் உரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.
இதற்கு முன்னரும் பல பசுக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் உள்ளன. பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலைமைகளுக்கு எதிராக கடந்த 02.11.2026 அன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து போராட்டம் நடத்தியிருந்தனர்.
இவ்வளவு சம்பவங்கள் இடம்பெற்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருப்பது ஏன்?
பசுக்கள் கொல்லப்படுகின்றன. பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனரா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
எமது கோரிக்கைகள்
- தேவராசா ஸ்ரீதரனின் பசு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- துப்பாக்கியுடன் நின்று பண்ணையாளர்களைச் சுடுவதற்கு முயற்சித்ததாகக் கூறப்படும் நபர் உள்ளிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
- பண்ணையாளர்கள் வழங்கிய முறைப்பாட்டை உடனடியாகப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
- மயிலத்தமடு–மாதவனை பொலிஸ் நிலையம் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும், அப்பகுதி பண்ணையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
- அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தி, பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களைப் பண்ணையாளர்களின் பயன்பாட்டிற்காக உறுதிப்படுத்த வேண்டும்.
- தொடர்ச்சியாக இடம்பெறும் பசுக் கொலைகள் தொடர்பில் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மயிலத்தமடு–மாதவனை என்பது வெறுமனே ஒரு காணிப் பிரச்சினை அல்ல. அது ஆயிரக்கணக்கான கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம், பாரம்பரிய உரிமை மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.
நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையம், நீதிமன்றத் தீர்ப்பை மீறிச் செயற்படுவோருக்கு ஊக்கமளிக்கும் இடமாக மாறிவிட்டது கவலையளிக்கும் விடயமாக உள்ளது.
பசுக்களைக் கொன்று தமிழர்களின் பொருளாதார முதுகெலும்பை முறிப்பதற்கும், பண்ணையாளர்களை அச்சுறுத்தி அவர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களிலிருந்து வெளியேற்றுவதற்கும் இடமளிக்க முடியாது.
பசுக்களைக் கொல்வது வெறும் கால்நடைகளைக் கொல்வதல்ல; அது ஒரு சமூகத்தின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும்,இன அடையாளம் மற்றும் வளங்களையும் அழிக்கும் நடவடிக்கையாகும்.
நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்து!
பண்ணையாளர்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பளி!
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்திடு!
ச. சிவயோகநாதன்
தலைவர்
கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்.
