மத்திய ரஷ்யாவின் எரிசக்தி வளம் நிறைந்த டாடர்ஸ்தான் பகுதியில் அமைந்துள்ள நிஷ்னெகாம்ஸ்க் நகரின் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 48 பேர் காயமடைந்ததாகவும், திங்களன்று வெளியிடப்பட்ட உள்ளூர் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
ரஷ்ய-உக்ரைன் எல்லையிலிருந்து 1,000 கிலோமீட்டருக்கும் (620 மைல்கள்) அதிகமான தொலைவில் அமைந்துள்ள இந்தப் பிராந்தியத்தில், பல முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இரு தரப்பினரும் உள்கட்டமைப்புகள் மீதான தொலைதூரத் தாக்குதல்களை அதிகரித்து வருவதால், கீவ் தனது சமீபத்திய தாக்குதல்களில் இந்த நிலையங்களைக் குறிவைத்துள்ளது .
இதுபோன்ற தாக்குதல்களால் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
திங்கள்கிழமை நடந்த தாக்குதலில், குறிப்பிடப்படாத தொழிற்சாலை மற்றும் பொதுமக்கள் இலக்குகள் தாக்கப்பட்டதாக நிஷ்னெகாம்ஸ்க் நகர மேயர் ராட்மிர் பெல்யாயேவ் டெலிகிராமில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
டானெகோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தியதாகவும், அவ்விடத்தில் தீ விபத்து பதிவானதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்கள், சில எரிபொருள் பற்றாக்குறைகளுக்கு வழிவகுத்ததோடு, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனையும் குறைத்துள்ளன.
