இந்தியக் கடற்படையை வலுவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் ஓர் அங்கமாக கடற்படையிலுள்ள போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து, கடற்படையில் புதிய போர்க் கப்பல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன என்றும் இதன்மூலம் சீன கடற்படைக்கு இணையாக இந்தியக் கடற்படை உருவெடுத்து வருகிறது என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு இந்தியக் கடற்படைக்காக ஏழு போர்க்கப்பல்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.45,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ‘புராஜெக்ட் 17ஏ’ என்ற பெயரில் மும்பையில் பணிகள் தொடங்கின.
முதற்கட்டமாக கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐஎன்எஸ் நீலகிரி இந்தியக் கடற்படையில் இணைந்தது. தற்போது ஆறாவது போர்க் கப்பலாக ஐஎன்எஸ் மகேந்திர கிரி உருவாகியுள்ளது.
இது தொடர்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு ஐஎன்எஸ் மகேந்திர கிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
