இந்திய அரசு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள போதும் அத்தகைய உதவிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தாமே முடிவு செய்வதாக அரச அமைச்சர் பிமல் இரட்ணநாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா – இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்வதை விரைவுபடுத்துவதற்காக ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெறறுள்ளது.
துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் இன்று (03) காலை அமைச்சின் வளாகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரே குல்கர்னி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழுவினர், இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளி விவகார அமைச்சின் அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் செயலாக்கத்தை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் ஒரு கூட்டு கண்காணிப்புக் குழுவையும் ஒரு தொழில்நுட்பக் குழுவையும் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
