மியூனிக்கில் உள்ள ஒரு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு அருகிலுள்ள கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இதில் அரசியல் நோக்கம் இருக்க வாய்ப்புள்ளதா என புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
மியூனிக்கில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் நடந்த தீ வைப்புத் தாக்குதலைத் தொடர்ந்து , பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் முயற்சியாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக பவேரிய மாநில குற்றவியல் காவல் அலுவலகம் (LKA) வியாழக்கிழமை தெரிவித்தது.
இதில் அரசியல் நோக்கம் இருக்க வாய்ப்புள்ளதா என புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாக எல்.கே.ஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அந்த செய்தித் தொடர்பாளர் உடனடியாக அடையாளம் காட்டவில்லை.
இருப்பினும், யேர்மன் இராணுவத்திற்கான தகவல் தொடர்பு அமைப்புகளைத் தயாரிப்பது உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனமான ரோட் & ஷ்வார்ஸின் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் தீ வைக்கப்பட்டதாக பில்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டது.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் நடவடிக்கையை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதோடு, எங்கள் நிறுவன வளாகம் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தியதாக உள்ளூர் பொது ஒளிபரப்பு நிறுவனமான பி.ஆர். தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை நள்ளிரவு வாக்கில், மியூனிக்கின் பெர்க் ஆம் லைம் பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தின் மீது ஒரு வாகனத்திலிருந்து பல தீமூட்டும் சாதனங்கள் வீசப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
LKA-வின் கூற்றுப்படி, அருகிலுள்ள கட்டிட வளாகத்தில் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் இயங்கி வருகின்றனர்.
குறைந்தது ஒரு தீமூட்டும் சாதனமாவது தீப்பொறியை ஏற்படுத்தியது. அதை காவல்துறை அதிகாரிகள் அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டபோதிலும், பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மியூனிக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இருப்பினும், மற்றொரு தீமூட்டும் சாதனத்தை சிறப்புப் படைகள் செயலிழக்கச் செய்ய வேண்டியிருந்தது.
சிறிது நேரத் தேடுதல் வேட்டைக்குப் பின்னர், 28 வயதுப் பெண் மற்றும் 38 வயது ஆண் ஆகிய இருவரும் அருகிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பல்கேரியக் குடிமக்கள் என LKA அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இன்று வியாழக்கிழமை அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
