தேசிய அமைப்புகளில் தனது தனிப்பட்ட முத்திரையைப் பதிப்பதற்காக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரரான அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் முன்னெப்போதும் இல்லாத பிரச்சாரத்தின் சமீபத்திய நடவடிக்கையாக, அவரது முகம் பொறிக்கப்பட்ட 1 அமெரிக்க டாலர் நாணயங்களை அமெரிக்க கருவூலம் நேற்று வெளியிட்டது.
இந்த ஆண்டு கொண்டாடப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் நிறுவப்பட்டதன் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நாணயங்கள் அச்சிடப்பட்டன.
5 ஒரு டாலர் நாணயங்கள் கொண்ட ஒரு சுருள், 144 சதவிகித லாபத்துடன், 61 அமெரிக்க டாலருக்கு விற்பனைக்குக் கிடைத்தது; மேலும் 100 நாணயங்கள் கொண்ட பை 154.50 அமெரிக்க டாலருக்குக் கிடைத்தது.
கருவூலம் இந்தத் திட்டத்தை அறிவித்தபோது, அந்த நாணயங்களுக்குப் பண மதிப்பு இருக்குமா அல்லது அவை முற்றிலும் நினைவு நாணயங்களாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நேற்றுப் புதன்கிழமை அன்று அமெரிக்க அந்த நாணயங்கள் புழக்கத்திலும் உள்ளன என்று கூறியது.
பணமதிப்புள்ள நாணயத்தில் டிரம்பின் முகத்தைப் பொறிக்கும் இந்த நடவடிக்கை, உயிருடன் இருக்கும் எந்தவொரு ஜனாதிபதியும் அமெரிக்க நாணயங்களில் இடம்பெறக்கூடாது என்று கூறும் கூட்டாட்சிச் சட்டத்திற்கு முரணானது.
டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க நிறுவனங்களை மறுசீரமைக்கும் முயற்சியில், முன்னுதாரணங்களையும் சட்டரீதியான சவால்களையும் தீவிரமாக மீறி வருகிறார். கென்னடி கலை மையத்திற்குத் தனது பெயரைச் சூட்டுவது, புதிய நடன மண்டபத்திற்கு இடமளிப்பதற்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
புதிய நாணயத்தின் ஒரு பக்கத்தில் டிரம்பின் முகமும், “சுதந்திரம்” மற்றும் “இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்” என்ற வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், அமெரிக்காவின் சுதந்திரத்தின் 250 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 1776-2026 வரையிலான திகதிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
நாணயத்தின் மறுபக்கத்தில், “250” என்று எழுதப்பட்ட ஒரு கேடயத்தால் சூழப்பட்ட கழுகு, அம்புகளையும் ஆலிவ் கிளையையும் பற்றிக்கொண்டிருப்பது போன்ற அமெரிக்க ஜனாதிபதி முத்திரையின் ஒரு வடிவம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க நாணயத்தில் தனது முகத்தையும் பெயரையும் இடம்பெறச் செய்யும் டிரம்பின் பிரச்சாரத்தின் சமீபத்திய நடவடிக்கை இதுவாகும்.
மே மாதத்தில், கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், டிரம்பின் முகம் பொறிக்கப்பட்ட புதிய 250 அமெரிக்க டாலர் நோட்டை வெளியிடும் திட்டத்தைத் தனது துறை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.
இந்த நடவடிக்கைக்கு, உயிருடன் இருப்பவர்களின் படங்கள் நாணயங்களில் இடம்பெறுவதைத் தடைசெய்யும் சட்டத்தை காங்கிரஸ் மாற்ற வேண்டியிருக்கும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
புதிய 1 அமெரிக்க டாலர் நாணயம் அந்தச் சட்டத்தை மீறுகிறதா என்பது குறித்த கருத்துக்கான கோரிக்கைக்கு அமெரிக்க கருவூலம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
மார்ச் மாதம், அமெரிக்க காகிதப் பணத்தில் விரைவில் டிரம்பின் கையொப்பம் இடம்பெறும் என கருவூலம் அறிவித்தது.
