இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தால், சவூதி அரேபியாவின் எண்ணெய் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படும் என
யேமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தலைவர் எச்சரித்துள்ளார் .
சவூதி அரேபியா நமது நாட்டிற்கு எதிராக ஒரு முழு அளவிலான ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, பதற்றத்தை அதிகரிக்கும் திசையில் நகர்ந்தால், அதன் அனைத்து எண்ணெய் வசதிகளும் முக்கிய தளங்களும் நமது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் இலக்குகளாக மாறும் என்று அக்குழுவின் தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹூதி தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
Geographic Reference
திங்கட்கிழமை அன்று, ஈரான் ஆதரவு ஹூதிகள், சவூதி அரேபியா சனா விமான நிலையத்தைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியதுடன், அதற்குப் பதிலடியாக அந்நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்தைத் தாக்கினர்.
எங்கள் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் அவர்களின் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். எங்கள் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் அவர்களின் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். முற்றுகைக்கு முற்றுகை என்பதே சமன்பாடு என்று அல்-ஹூதி கூறினார்.
சவூதி ஆதரவு பெற்ற, ஏடனைத் தளமாகக் கொண்ட யேமன் அரசாங்கம், சனாவில் ஒரு ஈரானிய விமானம் தரையிறங்குவதைத் தடுக்கும் நோக்கில் கடந்த திங்கள்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து இரு தரப்பில் எழுந்த பதற்றம் தற்போது மேலும் வலுப்பெற்று வருகிறது.
