அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இரு பெண்களின் சடலங்கள், நீதிமன்ற மரண விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காகக் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதமுனை – 06 ஆம் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பெண், செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வுயிரிழப்புத் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களும் சந்தேகங்களும் பரவியதைத் தொடர்ந்து, பெரிய நீலாவணை பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் பல கோணங்களில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணையை மேற்கொண்ட கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான், உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, உயிரிழப்பின் துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலத்தின் சில உயிரியல் பாகங்கள் கொழும்பிலுள்ள அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் கடந்த புதன்கிழமை (22) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம், மல்வத்தை – 03 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய், வியாழக்கிழமை (23) தனது வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், இம்மரணத்திற்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
