நவிப்பிள்ளை அம்மையாரை எவ்வாறு நாம் விளங்கிக்கொண்டு பயணிப்பது?_ நிலாந்தன்
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
நோபல் பரிசை பெற்றதால் இப்பொழுது நவிப்பிள்ளை அம்மையாருடைய அந்தஸ்து, அங்கீகாரம் உலக அளவில் அதிகரித்திருக்கிறது.இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் ஈழத்தில் இடம்பெற்றது இன அழிப்புத்தான் என்று கூறுவாராக இருந்தால் அது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும். அவர் ஏன் இதுவரையிலும் அப்படிச் சொல்லவில்லை என்று கேட்டு அவரை நிந்திப்பதை விடவும், விமர்சிப்பதை விடவும், அவரை இப்பொழுதாவது அவ்வாறு சொல்ல வைக்கலாமா என்று தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.உலகப் பரப்பில் உயர்ந்து நிற்கும் ஒரு தமிழ்ப் பெண்ணை நீதிக்கான தமது போராட்டத்தில் எப்படிப் பங்காளி ஆக்குவது என்றுதான் தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டும். அதுதான் ஓர் அரசைப் போல சிந்திப்பது.
பிரான்ஸைச் சேர்ந்த ஹென்றி பி.ககன் இந்த ஆண்டு வேதியல் துறைக்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.சிறுவயதில் நாஜிகளிடமிருந்து ஒழிந்து வாழ்ந்தவர்.இன அழிப்பில் இருந்து தப்பியவர்.இன்று தனது 95ஆவது வயதில் நோபல் பரிசை வென்றிருக்கிறார்.
இன அழிப்பில் இருந்து தப்பிய ஒருவர் வேதியலுக்கான நோபல் பரிசை வென்றிருக்கும் இதே ஆண்டில்,இன அழிப்புக்கு எதிரான துணிகரமான சட்ட நடவடிக்கைகளுக்காக நவிப்பிள்ளை அம்மையாருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
அவருக்கு நோபல் பரிசு கிடைத்த பின், ஈழத் தமிழ் இன அழிப்பு தொடர்பான அம்மையாரின் நிலைப்பாடு மீண்டும் வாதப் பொருளாகியிருக்கிறது. நாலாம் கட்ட ஈழப்போரின் போது நவிப்பிள்ளை அம்மையார் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக இருந்தார். மே 18க்குப் பின் அப்பொழுது ஐநா செயலராக இருந்த பான்கீ மூன் வன்னி கிழக்கின் மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி இறுதிக்கட்டப் போருக்கு பின்னரான போர்க்களக் காட்சிகளைப் பார்த்த போது,நவிப்பிள்ளை அம்மையார் பொறுப்பில் இருந்தார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக அவர் 2013ல் இலங்கைக்கு வருகை தந்தார்.அவருடைய தமிழ் அடையாளம் காரணமாக அப்பொழுது அமைச்சராக இருந்த மேர்வின் டி சில்வா அவரை அவமதித்தார்.அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் கூறினார்.தமிழ்ப் பகுதிகளில் அம்மையார் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டார், கதைத்தார். எனினும் நடந்தது இன அழிப்பு என்று சொல்லவில்லை.அதற்குப் பின்னரும் சொல்லவில்லை. இன்றுவரையிலும் அவர் இலங்கைத் தீவில் இடம்பெற்றது இன அழிப்பு என்று சொல்லவில்லை. ஏன் அவ்வாறு கூறவில்லை?
ஏனென்றால், நடந்தது இன அழிப்பு என்பதனை சட்ட ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று அவர் கூறுவதுதான் காரணமா? அல்லது அவர் இன அழிப்புதான் நடந்தது என்று நன்கு தெரிந்த பின்னரும் அதைக் கூறாமல் விடுவதற்காக வேறு சட்டரீதியான காரணங்களை கூறுகிறாரா?
தென்னாபிரிக்காவில் தொடங்கி ஆபிரிக்கா மற்றும் பலஸ்தீனம் வரையிலும் இன அழிப்புக் களங்களை நேரடியாகத் தரிசித்தவர் அவர். அது தொடர்பான நீதி விசாரணைப் பொறிமுறைகளில் நேரடியாகப் பங்கேற்றவர். இலங்கையில் நடந்தது இன அழிப்பா இல்லையா என்பதனை உணரத் தேவையான எல்லாத் தகமையும் அறிவும் முதிர்ச்சியும் அவருக்கு உண்டு.இலங்கையில் இடம் பெற்றது இன அழிப்பு என்பது அவருக்கு நன்கு விளங்கும்.ஆனால் அவர் அதை வெளிப்படையாகக் கூறத் தயாரில்லை. ஏன் ?
ஏனென்றால், அவர் அப்பொழுது பதவிப் பொறுப்பில் இருந்த ஓர் உலகளாவிய ராஜதந்திரி.ராஜதந்திரிகள் தேவதைகள் அல்ல.தாங்கள் சார்ந்த நாட்டின் அல்லது உலகப் பொது அமைப்பின் ராணுவப் பொருளாதார,அரசியல், ராஜதந்திர இலக்குகளை நிறைவேற்றும் ஆணையைப் பெற்ற ராஜதந்திரிகள் தான். நவிப்பிள்ளை அம்மையாரும் ஒரு ராஜதந்திரிதான். தேவதை அல்ல.
பொறுப்புகளில் இருக்கும்போது அவர் அதை அவ்வாறு கூறமுடியாத ஒரு நிலைமை இருந்திருக்கலாம். குறிப்பாக ஐநாவில் அவர் மனித உரிமைகள் ஆணையாளராக இருந்தபோது அதனை அவர் அவ்வாறு உத்தியோகபூர்வமாக கூறுவதற்கு அவருடைய பதவி அவரை அனுமதிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில் ஐநா இன்றுவரையிலும் இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு என்று கூறவில்லை.இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு என்று கூறுவதற்கு ஏன் ஐநா தயாரில்லை?
ஏனென்றால்,ஐநாவை முகாமை செய்யும் நாடுகள், உலக அளவிலும் பிராந்திய அளவிலும் பலமிக்க நாடுகள்,நடந்தது இன அழிப்பு என்பதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கக்கூடாது என்று ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.போர்குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என்ற வரையறைக்குள் மட்டுமே இலங்கை விவகாரத்தை அணுக வேண்டும் என்பது ஓர் அரசியல் தீர்மானம்.இலங்கைத் தீவில் இடம்பெற்றது மனித உரிமை மீறல்கள் அல்லது மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் என்று கூறுவதன்மூலம் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஓர் அரசியல் தீர்மானம். இன அழிப்பு என்பதை நிரூபிக்கத் தேவையான பரந்துபட்ட,சக்திமிக்க ஒரு விசாரணைப் பொறிமுறையை இன்றுவரை உருவாக்காமல் இருப்பதும் ஓர் அரசியல் தீர்மானம்.2021ஆம் ஆண்டு சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தை(OSLAP) மட்டுப்படுத்தப்பட்ட ஆணையைக் கொண்ட மனித உரிமைகள் பேரவைக்குள் பெட்டி கட்டியதும் ஓர் அரசியல் தீர்மானம்.
இந்துமகா சமுத்திரத்தில் இலங்கைத் தீவை எவ்வாறு கையாள வேண்டும்? இனப்பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும்? அதை எங்கே கொண்டு போய்,எந்தச் சட்டகத்துக்குள் வைக்க வேண்டும்? என்பவை எல்லாம் அரசியல் தீர்மானங்கள்.ஐநாவில் அதை மனித உரிமைகள் பேரவைக்குள் பெட்டி கட்ட வேண்டும் என்பது ஓர் அரசியல் தீர்மானம்.
அதனால்,ஐநாவின் அரசியல் தீர்மானங்களை ஓர் ஐநா ஆணையாளராக நவிப்பிள்ளை பின்பற்றினார்.ஐநாவில் அவர் பொறுப்பில் இருந்த காலகட்டங்களில் இன அழிப்பு என்று அவர் சொல்லாமல் விட்டது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்பதை விடவும் ஐநாவின் அரசியல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அவர் பதவியில் இருந்த காலத்திலும் அதுதான் ஐநாவின் முடிவு. இப்பொழுதும் அதுதான் ஐநாவின் முடிவு.அதாவது ஐநா ஈழத் தமிழர்களுக்கு வழங்கக்கூடிய நீதியின் வரையறை அது.அம்மையார் கூறுவதுபோல இன அழிப்பை நிரூபிக்கத் தேவையான விசாரணைப் பொறிமுறைகளை யார் உருவாக்குவது? எப்படி உருவாக்குவது? அதில் ஐநாவுக்கு உள்ள பங்கு என்ன? மனித உரிமைகள் பேரவைக்குள் பெட்டி கட்டப்பட்டிருக்கும்வரை அவ்வாறான ஒரு விசாரணைப் பொறிமுறை சாத்தியமா?
ஆனால் தனக்குரிய உலக மன்றப் பொறுப்புகளில் இருந்து நீங்கிய பின், இன அழிப்பு தொடர்பான உலகளாவிய நீதி விசாரணைப் பொறிமுறைகளில் அவர் வகித்த பதவிகளில் இருந்து நீங்கிய பின்னரான காலகட்டத்திலும்கூட இன்றுவரையிலும்,அவர் இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு என்று சொல்லவில்லை.ஏன் சொல்லவில்லை? இந்தக் கேள்வியைத்தான் ஒரு தார்மீகக் கேள்வியாக ஈழத் தமிழர்கள் அம்மையாரிடம் கேட்க வேண்டும்.
தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா அவருக்குப் பொறுப்புகளை வழங்கியது அவர் ஒரு தமிழ்ப் பெண் என்பதற்காக அல்ல.தொழில்சார் தகமைகள் காரணமாகத்தான்;இன அழிப்புக்கு எதிரான விசாரணைப் பொறிமுறைகளில் அவருக்கு இருந்த முதிர்ச்சி காரணமாகத்தான். தென்னாபிரிக்காவில் இருந்து பாலஸ்தீனம் வரையிலும் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் அவர் தமிழர் என்பதற்காக வழங்கப்படவில்லை.அவருடைய சேவை மூப்பு,சட்டச் செயற்பாடு போன்றவற்றிற்காக வழங்கப்பட்டன. அப்படித்தான் நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது அவர் தமிழர் என்பதற்காக அல்ல.ஆனால் நோபல் பரிசு வென்ற முதலாவது தமிழ்ப் பெண் என்று அடிப்படையில், ஈழத் தமிழர்கள் அவரிடம் கேட்கலாம். இப்பொழுதாவது நடந்தது இன அழிப்பு என்று சொல்லுவீர்களா? அல்லது ஒரு கெட்டிக்கார சட்டத்தரணிபோல சட்டரீதியாக அதை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவீர்களா? என்று கேட்கலாம்.
நோபல் பரிசை பெற்றதால் இப்பொழுது அவருடைய அந்தஸ்து, அங்கீகாரம் உலக அளவில் அதிகரித்திருக்கிறது.இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் ஈழத்தில் இடம்பெற்றது இன அழிப்புத்தான் என்று கூறுவாராக இருந்தால் அது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும். அவர் ஏன் இதுவரையிலும் அப்படிச் சொல்லவில்லை என்று கேட்டு அவரை நிந்திப்பதை விடவும், விமர்சிப்பதை விடவும், அவரை இப்பொழுதாவது அவ்வாறு சொல்ல வைக்கலாமா என்று தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.உலகப் பரப்பில் உயர்ந்து நிற்கும் ஒரு தமிழ்ப் பெண்ணை நீதிக்கான தமது போராட்டத்தில் எப்படிப் பங்காளி ஆக்குவது என்றுதான் தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டும். அதுதான் ஓர் அரசைப் போல சிந்திப்பது.
இங்கு இஸ்ரேலிய உதாரணத்தைச் சுட்டிக்காட்டலாம்.பலஸ்தீனத்தில் யூதர்களின் தாயகத்தை அங்கீகரிக்குமாறு இந்தியாவிடம் ஆதரவு கேட்டு ஐன்ஸ்டீன் 1947ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். நேரு அந்தக் கோரிக்கையை அப்பொழுது நிராகரித்து விட்டார். எனினும் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்த யூதரான ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்திற்கு அந்த நேரத்தில் ஒரு பெறுமதி இருந்தது.
அப்படித்தான் நவிப்பிள்ளை அம்மையார் இப்பொழுது நோபல் பரிசு வென்றிருக்கும் ஒரு பின்னணியில் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கூறுவாராக இருந்தால்,அல்லது அதற்கு வேண்டிய சுயாதீனமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு உலக சமூகத்தைத் தூண்டுவாராக இருந்தால், அது நீதிக்கான ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் ஒரு முக்கிய அடைவாகக் கருதப்படும்.
எனவே இந்த இடத்தில் அவர் ராஜதந்திரியாக இருந்த பொழுது என்னென்ன சொன்னார்,யாருக்கு எதிராகச் சொன்னார், என்ற விவாதங்களில் ஈடுபடுவதை விடவும் ஓர் ஓய்வு பெற்ற ராஜதந்திரியாக, நோபல் பரிசை வென்ற முதல் தமிழ்ப் பெண்ணாக,அவரை எப்படி நீதிக்கான போராட்டத்தின் பங்காளி ஆக்கலாம் என்றுதான் ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் மத்தியில் நீதிபதிகளாக இருந்தவர்கள் குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதி பரிபாலனக் கட்டமைப்புக்குள் நீதிபதிகளாக இருந்தவர்கள்,ஓய்வு பெற்றபின் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் வருக்கிறார்கள்.உதாரணம் விக்னேஷ்வரன். அவர்கள் பதவிப் பொறுப்புகளில் இருந்தவரை அதாவது நீதிபதிகளாக இருந்தவரை அவர்கள் அரசியலில் என்ன கதைக்கலாம்;செய்யலாம் என்பதில் அடிப்படையான வரையறைகள் இருந்தன.
அப்படித்தான் இப்பொழுது கனடாவில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் உண்டு.பிரித்தானியாவில் ஒரு பெண் அமைச்சர் உண்டு.நோர்வேயில் ஒரு பெண் அமைச்சர் உண்டு.இவர்கள் எல்லாரும் தாங்கள் தமிழர்கள் என்பதற்காக,தமிழ்த் தேசிய அரசியலைக் குறித்து தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியுமா? கனடாவில் இப்பொழுது அமைச்சராக இருக்கும் ஹரி ஆனந்தசங்கரி கனடாவின் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானங்களை மீறி ஈழத் தமிழர்கள் தொடர்பாக முடிவுகளை எடுக்க முடியுமா? லண்டனில் உமா குமரன் அவ்வாறு முடிவெடுக்க முடியுமா? நோர்வேயில் ஹம்சாஜினி அவ்வாறு முடிவெடுக்க முடியுமா? இல்லை. அவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசின் கொள்கைகளைத்தான் பிரதிபலிக்கலாம்; நடைமுறைப்படுத்தலாம். தமிழர்களாக மட்டும் முடிவெடுக்க முடியாது.அவர்கள் எந்த அரசாங்கத்தின் ஆணைக்கு உட்பட்டு இயங்குகிறார்களோ அதன் வெளியுறவுத் தீர்மானங்களைதத்தான் பிரதிபலிப்பார்கள்.தமிழர்களின் இன உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது. இது நவிப்பிள்ளை அம்மையாருக்கும் பொருந்தும்.
எனவே பதவிப் பொறுப்பில் இருந்தவரை அவர் உத்தியோகபூர்வமாக தெரிவித்த கருத்துக்களைக் குறித்து தமிழ் மக்கள் உணர்ச்சி வசப்படத் தேவையில்லை. அதற்காக அவரைப் பகைவரை நோக்கித் தள்ளத் தேவையில்லை. மாறாக ஓர் அரசைப்போல சிந்தித்து அவரை எப்படி இன அழிப்புக்கு எதிரான நீதிக்கான போராட்டத்தில் பங்காளி ஆக்கலாம் என்றுதான் சிந்திக்க வேண்டும்; செயற்பட வேண்டும்.
