மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, “நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தீர்மானிக்கும் எத்தனை மணி நேரத்திற்கும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் எழுப்பியுள்ள கோரிக்கையை அரசியலாக்கக் கூடாது. இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது முறையல்ல. தீவிரமான இந்தப் பிரச்சினைக்கு ஆழமான விவாதம் தேவை.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சுமார் 150 தேர்வுத்தாள் கசிவுச் சம்பவங்கள் குறித்துப் பேசினார். விசாரணைக்குரிய இந்த விவகாரத்தில், சந்தேகத்திற்கு இடமின்றி அரசு இது குறித்து விசாரித்து, மக்கள் மற்றும் நாட்டிற்கு உண்மையை முன்வைக்கும்.
