எழுத்து (கவிதை, சிறுகதை, விமர்சனம் போன்ற) , புகைப்படக்கலை, இதழியல், நாடகம், கூத்து, குறுந்திரைப்படம், சமூக, அரசியற் செயற்பாடு, சூழலியல் எனப் பன்முக ஆளுமை மிக்கவர் தமயந்தி சைமன். நோர்வே ஊடகங்களில் புகைப்படக் கலைஞராகப்பணியாற்றியவர். இவரது இயற்பெயர் சைமன் விமலராஜன். ஊர்காவற்றுறைப் பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற தென்மோடிக்கூத்துக்கலைஞர் சைமன் பத்திநாதன் அந்தோனிப்பிள்ளை இவரது தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. நோர்வேயிலிருந்து வெளியான சுவடுகள், சுமைகள் , உயிர்மெய் ஆகிய சஞ்சிகைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது. இவரது இணையர் பானுபாரதியும் எழுத்தாளரே. நாடோடி, கெளசல்யன், ஜெயக்கொடி ஆகிய புனைபெயர்களிலும் எழுதியிருக்கின்றார்.
இவரது நாற்பதாண்டுக் காலக் கலை, இலக்கியப் பங்களிப்புகளுக்காக , நோர்வேயிலியங்கும் ‘நாதாந்தம்’ பல்கலை மன்றம் தனது வானி விழாவில் இவரைக் கெளரவித்துள்ளது. அதற்காக என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நெய்தல் நிலம் பற்றிய இவரது முகநூற் பதிவுகள் சூழற் பாதுகாப்பின் அவசியத்தையும் உள்ளடக்கியவை. குறிப்பாக தமிழக இழுவைப்படகுகளால் சூறையாடப்படும் இலங்கைத் தமிழ்ப்பகுதிக் கடல்வளத்துக்கேற்படும் பாதிப்புகள், கவுதாரிமுனைக் கடற்கரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மண்கொள்ளையால் ,நிலத்துக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கும் கடற்கரைப்பகுதியின் அழிவுகள், அது ஏற்படுத்தப்போகின்ற பேரழிவுகள் பற்றிய இவரது முகநூற் பதிவுகளைக் குறிபிடலாம். அவை சமூகப்பெறுமானம் மிக்கவை.
அவ்விதமான பதிவுகளில் ஒன்று இவரது ‘உலக சமுத்திர தினம்’ பற்றிய முகநூற் பதிவு. அதில் அவர் பின்வருமாறு எச்சரித்திருப்பார்: “கவுதாரிமுனை மணல் அகழ்வை தமிழ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடன் நிறுத்தவில்லையெனில் அடுத்த கடற்கோள் அனர்த்தத்திற்கு காவு கொள்ளப்படும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்ப்பலிக்குப் பெரும் பொறுப்பாளிகளாக நேருமே என்ன செய்யப் போகிறார்கள்.”
கூத்துக் கலைஞர் சைமன் பற்றிய காணொளியை இவர் உருவாக்கியிருக்கின்றார். என்னை மிகவும் கவர்ந்த அக்காணொளியை நான் என் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். அவரது நினைவு தினம் அக்டோபர் 5. சரண் கமலநாதனின் இசையில் எழுத்தாளர் மெலிஞ்சி முத்தனின் பாடல் வரிகளை உள்ளடக்கிய் அக்காணொளியினை அழகாக உருவாக்கியிருப்பார் தமயந்தி. அக்காணொளியின் கடற்காட்சிகள் (கடற் பறவையினங்கள், படகு , கடல் நீர் என) மறக்க முடியாத வகையில் சிறப்பாக ஒளிப்பதிவாக்கியிருப்பார்.
ஒரு தடவை முத்தையன் கட்டுப் பகுதியில் நீண்ட நேரம் காத்திருந்து தவளைக் கச்சேரியினை ஒளிப்பதிவு செய்திருந்தார். எனக்கு மிகவும் பிடித்த காணொளிகளில் ஒன்று அந்தக் காணொளி. அதனை என் முகநூற் பக்கத்திலும் பல தடவைகள் பகிர்ந்திருக்கின்றேன். அத்தவளைக் கச்சேரியைக் கேட்கும் சமயங்களிலெல்லாம் என் மனக்குருவி என் பால்ய, பதின்மப்பருவத்துக்கே சிறகடித்துச் சென்று விடும். அக்காணொளி பற்றிய தனது முகநூற் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
“முந்தியெல்லாம் மாரிகாலத்தில் எங்கும் தவளைகளின் பல்குரல் பாடல்கள். இரவுகளில் அச்சம் கலந்த இதமான சுகானுபவங்கள் அவை. அந்த சத்தங்களுக்கும், அவற்றின் நினைவுகளுக்கும் வாசங்கள் உண்டு என்பதை நாம் உணர முடியும் அல்லவா? கடந்த இரண்டு மாரிகாலங்களை நாட்டில் நின்று அவதானித்தேன். கிடைக்கவில்லை. அந்தச் சத்தங்கள் ஆங்காங்கே சிறு சிறு அனுங்குதல்களாக மட்டுமே கேட்டன. ஆமாம், இப்போ மாரிகாலங்களில் கூட அந்தத் தவளைச் சத்தங்கள் வடக்கில் அவ்வளவாக இல்லை. அல்லது காணமற் போய்விட்டன. ஏன்? ஏன் என்று யாருக்கேனும் தெரியுமா? இது 2017 கோடை. தவளைச் சத்தங்களைப் பதிவதற்காக நான் பயணம் செய்தது முத்தையன் கட்டு. முத்தையன்கட்டு குளக்கரையில் ஓரிரவு விழித்துக் காத்திருந்து சுவாசித்த தவளைச் சத்தங்கள் இது. கூட வந்த நண்பர்கள் ஜீப்புக்குள் தூங்கி விட்டார்கள். அவர்கள் சும்மா தூங்கவில்லை. ‘அந்தப்பக்கம் காட்டுக்குள்ளிருந்து யானை வரும், இந்தப் பக்கம் குளத்துக்குள் இருந்து முதலை வரும்’ என்று சொல்லி மிரட்டிவிட்டுத் தூங்கி விட்டார்கள். எப்படி இருக்கும் எனக்கு. வடக்கில் தவளைகள் காணாமற் போனதற்கு பிரத்தியேக காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா நண்பர்களே? இருக்கு. நிச்சயம் இருக்கு. நீருக்கும் நிலத்துக்கும் இடையிலான உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கு இன்னமும் பூமியில் சாட்சியாயுள்ளவை தவளைகள். சுற்றுப்புறச் சூழலைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறைப் படாத சமூகமாக நாம் இருக்கிறோம் என்ற கசப்பான உண்மைக்குப் பின்னால் தவளைகள் செத்துக் கிடக்கின்றன.”
இக்கூற்று அவரது சூழலியற் பாதுகாப்பு மீதான அக்கறையை வெளிப்படுத்தும்.
ஒரு முறை அவரது படகினை உள்ளடக்கிய புகைப்படமொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. அதனை என் முகநூற் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். நீல நிறப்படகு. பொதுவாகக் கடலின் நீல நிறத்தைப் பிரதிபலிக்கும் புகைப்படங்களைப் பார்த்திருக்கின்றோம். இங்கு கடல் ஒரு வித அமைதியில் ஆழ்ந்திருக்கும். அதன் நீல நிறம் வெளிப்படாத நிலையில் காலநிலை இருக்கும். நீல நிறப்படகோ கவனத்தை ஈர்க்கும்., அப்படகில் கொக்குகள் சில ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன. சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டுள்ள அப்புகைப்படம் பற்றி தமயந்தி பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
” இது குருசடித்தீவு. அதாவது தீவகத்திலிருந்து யாழ் நோக்கி வரும்போது, மண்டைதீவுச் சந்திக்கு முன், அதாவது இன்பம் செல்வம் என்ற போராளிகளைக் கொலை செய்து போட்ட இலந்தை மரத்தடியின் மேற்குக் கடல். இந்தப் படத்தில் தெரியும் காட்சி என்பதற்கப்பால் இந்த இடம் முக்கியமானது. ‘காத்திருத்தல்’ என்ற தலைப்புக்காகக் காத்திருந்து எடுத்த படம்.”
ஆம். தமயந்தியின் புகைப்படங்கள் வெறும் புகைப்படங்கள் மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்தை வெளிப்படுத்தும் ஆவணங்களும்தாம். இப்புகைப்படத்தை என் முகநூல் பக்கத்தில் ப்திவு செய்தபோது அவர் என்னுடன் பகிர்ந்திருந்த எண்ணங்கள் வருமாறு:
“நன்றி கிரி. இயற்கையின் ஒருசிறுதுளி அதிசயங்களையும், அற்புதங்களையும் நாம் கண்டடையவே பலநூறு ஆயுள்கள் தேவை. இந்த ரம்யத்தின் இடுக்குகளில் சற்று நாம் சென்று அமர்ந்தாலே ஆயுள்பரியந்த சுகங்களை அடைந்து விடுவோம். நமக்குக் கிடைத்திருக்கும் இந்த இருத்தல் மிகச் சொற்ப காலம்தானே. இந்தக் கொஞ்சக் காலத்துக்குள்ளேயே எல்லாவித சண்டைகளையும் ஆளையாள் போட்டுக் கொள்வதில் தொலைத்து விடுகிறோம். இயற்கையின் வதனங்களை சற்று ரசிக்கத் தொடங்குவோமானாலே பல அகக் காயங்கள் அகன்றுபோம். அதற்கு நாம் நேரம் ஒதுக்குவதில்லை. நேரம் ஒதுக்க நமக்கு நேரமில்லை. ஒளியையும், சத்தங்களையும் சாப்பிடும் வல்லமை கொண்டவர் நாம். ஆனால் அதை நாம் செய்வதில்லை. இதனால் இழப்பு நமக்குத்தானே. நமது சமூகத்திலிருந்து புகைப்படக் கலைஞர்கள் இன்னும் நிறைய வரவேண்டும். முன்னைய காலங்களில்தான் அதிக செலவீனமான கலைத்துறை இது. ஆனால் இப்போ அப்படியல்ல. ஒவ்வொருவரின் உள்ளங்கைக்க்குள்லேயே வந்து விட்டது. இந்தக் கலையின்பால் படைப்பாற்றல் மிக்க கலைஞர்கள் மிகமிகச் சிலரே வெளிப் படுகின்றனர். அண்மைக் காலங்களில் ஈழத்தில் அவதானிக்கக்கூடிய கலைச் செயற்பாடுகள் ஓரளவு நம்பிக்கை தருகிறது. பல இளைய தலைமுறையினர் இந்தக் கலையைக் கையில் எடுத்திருக்கின்றனர். சாதகமான சமிக்ஞை.”
