கடல் வழியே சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டு, அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாகக் கொண்டு செல்லத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட ‘இலங்கை கடற்படை கப்பல் கஜபா’ நிறுவனத்திற்கு கிடைத்த நம்பிக்கையான தகவலுக்கு அமைய, மன்னார் சவுத் பார் கடற்கரை மற்றும் அதனைச் சார்ந்த நிலப்பரப்புப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இச்சிறப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான 03 டிங்கி படகுகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களைக் கடற்படையினர் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே, சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட பெருந்தொகையான கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், 03 டிங்கி படகுகள், 02 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.
