ஜனாதிபதி அறிவித்த 1570 ஏக்கர் மேச்சல் தரை மாதிரிப் பண்ணைக்காகவா?
மயிலத்தமடு–மாதவணை பண்ணையாளர்களின் மூன்று ஆண்டுகால போராட்டத்தை மேலும் சிக்கலாக்க வேண்டாம்!
மட்டக்களப்பு | 18.09.2026
மயிலத்தமடு–மாதவணை பண்ணையாளர்களின் மேச்சல் தரைக் கோரிக்கைக்காக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 1570 ஏக்கர் காணி, தற்போது மகாவலி திட்டத்தின் கீழ் மாதிரிப் பண்ணை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பது பண்ணையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி மட்டக்களப்பிற்கு வருகை தந்த ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்திக்குழு கூட்டத்தில், மயிலத்தமடு–மாதவணை பண்ணையாளர்களின் மேச்சல் தரைத் தேவைக்காக உடனடியாக 1570 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு மகாவலி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் பண்ணையாளர்களிடையே ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியது. “முதற்கட்டமாக அரசு வழங்குவதை வழங்கட்டும்” என்ற எதிர்பார்ப்பும் பண்ணையாளர்களிடையே ஏற்பட்டிருந்தது.
ஆனால், 17.09.2026 அன்று மட்டக்களப்பு பழைய கச்சேரி கேட்போர் கூடத்தில் இந்திய முதலீட்டாளர்களுக்கும் மாவட்ட தொழில் முனைவோருக்கும் இடையில் நடைபெற்ற நிகழ்வில், விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளர் திரு. திலகநாதன் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து, தற்போது அந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 1570 ஏக்கர் காணியை மகாவலி திட்டத்தின் கீழ் மாதிரிப் பண்ணையாக அமைக்க உள்ளதாகவும், அங்கு புற்கள் வளர்க்கப்பட்டு கால்நடைகள் கட்டி வளர்க்கப்பட உள்ளதாகவும், கால்நடை வைத்தியசாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்வமுள்ளவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தால் அவை பரிசீலிக்கப்பட்டு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததார்.
1570 ஏக்கர் யாருக்காக?
இங்கு மிக முக்கியமான கேள்வி எழுகிறது.
ஜனாதிபதி அறிவித்த 1570 ஏக்கர் காணி மயிலத்தமடு–மாதவணை பண்ணையாளர்களின் மேச்சல் தேவைக்காகவா? அல்லது மகாவலி திட்டத்தின் கீழ் புதிய மாதிரிப் பண்ணை அமைப்பதற்காகவா?
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.
மயிலத்தமடு–மாதவணை என்பது வெறுமனே கால்நடைகளை வளர்ப்பதற்கான நிலப்பரப்பு அல்ல. அது இயற்கையாக உருவான பரந்த புல்வெளிகளையும், நீர்வளங்களையும், இயற்கைச் சூழலையும், பல தலைமுறைகளாக கால்நடை வளர்ப்புடன் இணைந்துள்ள பாரம்பரிய வாழ்வாதாரத்தையும் கொண்ட பகுதி.
நாட்டின கால்நடைகளின் இயற்கையான வளர்ப்பு முறைக்கு இத்தகைய திறந்த மேச்சல் தரைகள் அத்தியாவசியமானவை.
நாட்டின கால்நடைகளை தொழுவத்தில் கட்டிவைத்து வளர்க்க முடியாது
வெளிநாடுகளில் இருந்து அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் மேம்படுத்தப்பட்ட கறவை மாடுகளை தொழுவத்தில் கட்டி வைத்து வளர்ப்பதற்கும், மயிலத்தமடு–மாதவணை பகுதியில் பாரம்பரியமாக வளர்க்கப்படும் நாட்டின கால்நடைகளைப் பராமரிப்பதற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது.
நாட்டின கால்நடைகள் இயற்கையாக மேய்ந்து திரியும் தன்மை கொண்டவை. அவற்றுக்கு தினமும் பல கிலோமீற்றர் பரப்பளவில் மேய்ச்சல் தரை தேவைப்படுகிறது.
காடுகளிலும் மலைப்பாங்கான பகுதிகளிலும் அவற்றை மேய்ப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. அங்கு காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலும் புல்வளம் குறைவாக இருப்பதும் பிரச்சினையாகும்.
அதேபோன்று, அவற்றை நிரந்தரமாக கட்டி வைத்து வளர்ப்பதும் அதிக செலவையும் பராமரிப்பு சிரமங்களையும் ஏற்படுத்தும்.
எனவே, இயற்கையான மேச்சல் தரையை செயற்கையான புற்தரையாக மாற்ற நனைப்பது நாட்டின கால்நடைகள் தொடர்பில் போதிய அறிவு இல்லையோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.
பால் உற்பத்தி மட்டும் கால்நடை வளர்ப்பின் நோக்கமல்ல
நாங்கள் பால் உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல.
ஆனால், பால் உற்பத்தியை அதிகரிக்கும் பெயரில் ஏற்கனவே உள்ள இயற்கை வளங்களையும் நாட்டின கால்நடை வளத்தையும் அழிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தினமும் சுமார் 35,000 முதல் 40,000 லீற்றர் பால் நாட்டின கால்நடைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பால் உற்பத்தியில் மேலும் அதிகரிப்பு தேவைப்பட்டால், அதற்கான புதிய திட்டங்களை அரசு உருவாக்கலாம்.
ஆனால், ஏற்கனவே பால் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து புதிய பண்ணைகளை உருவாக்குவது எந்த வகையில் நிலையான அபிவிருத்தியாக அமையும்?
நாட்டின கால்நடைகள் ஒரு பொருளாதார வளம் மட்டுமல்ல
நாட்டின கால்நடைகள் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் கால்நடைகள் அல்ல.
அவை,
விவசாயம் – இயற்கை உரம் – பால் – இறைச்சி – போசாக்கு – பாரம்பரியம் – கலாச்சாரம் – வாழ்வாதாரம் – உணவுப் பாதுகாப்பு
என அனைத்துடனும் நேரடியாகத் தொடர்புடையவை.
இந்த வளத்தைப் பாதுகாப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பொறுப்பு மட்டுமல்ல. அது நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்புடன் தொடர்புடைய தேசியப் பொறுப்பாகும்.
ஒரு பக்கம் மரபணு மேம்படுத்தப்பட்ட கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டமிடும் நிலையில், மறுபக்கம் நாட்டின கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான தேசியத் திட்டமும் அவசியமாகும்.
இயற்கைப் புல்வெளியை அழித்து செயற்கைப் புல்வெளி உருவாக்க வேண்டாம்
இயற்கையாக உருவான மேச்சல் தரைகள் ஒரு தலைமுறையில் உருவாகியவை அல்ல.
அவை நீண்டகாலமாக இயற்கைச் சூழலுடன் இணைந்து உருவாகிய உயிரியல் வளங்களாகும்.
அவற்றை அழித்து செயற்கையாக குறிப்பிட்ட வகை புற்களை வளர்ப்பது எதிர்காலத்தில் சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இயற்கை மேச்சல் தரைகள் அழிந்தால் நாட்டின கால்நடைகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது.
அதன் தொடர்ச்சியாக பால் உற்பத்தி, இறைச்சி உற்பத்தி, இயற்கை உரம் மற்றும் பண்ணையாளர்களின் வருமானம் ஆகியவையும் பாதிக்கப்படலாம்.
அரசாங்கத் தீர்மானங்களுக்குள் முரண்பாடு ஏன்?
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக் கூட்டங்களின் உயர் மட்டத்தில், பெரும்போக விவசாய காலங்களில் கால்நடைகளை மயிலத்தமடு–மாதவணை பகுதிக்கு கொண்டு சென்று மேய்ப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்வாறிருக்கையில், அதே நிலப்பரப்பை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்படுவது அரச நிறுவனங்களுக்கிடையிலான கொள்கை முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.
ஒரே அரசாங்கத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படும் தீர்மானங்களை எடுப்பது ஏன்?
அரசாங்கத்தின் ஒரு தரப்பு வழங்கும் உறுதிமொழியை மற்றொரு தரப்பு மாற்றியமைக்கும் நிலை உருவாகக்கூடாது.
மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் தீர்வு இல்லை
மயிலத்தமடு–மாதவணை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் திகதியுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து நான்காவது ஆண்டில் தொடர்கிறது.
மூன்று ஆண்டுகளாக மழையிலும் வெயிலிலும் போராடி வரும் பண்ணையாளர்களுக்கு நிலையான தீர்வு வழங்கப்படாத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட 1570 ஏக்கர் காணி மீண்டும் வேறு திட்டத்திற்குள் கொண்டு வரப்படுவதாகத் தெரிவிப்பது அவர்களின் வேதனையை மேலும் அதிகரித்துள்ளது.
பண்ணையாளர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், இது “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது.”
சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும்
ஏற்கனவே நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் நடைமுறைப்படுதப் படவில்லை இதனடிப்படையில்
மயிலத்தமடு–மாதவணை பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை தொடர்பாக பண்ணையாளர்கள் தொடர்ச்சியான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அப்பகுதியில் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும், மேச்சல் தரைகளுக்கு தீ வைக்கப்படுவதாகவும், கால்நடைகள் கொல்லப்படுவதாகவும், காடுகள் அழிக்கப்படுவதாகவும், துப்பாக்கிகள் வைத்திருப்பதாக அவர்களில் சிலர் தங்களை அச்சுறுத்துவதாகவும், பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை முறைப்பாடுகள் செய்து அவர்கள் இதனை கண்டுகொள்வதில்லை என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப் படுகின்றது. எனவே வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டியது அரசின் பொறுப்பில்லையா.
சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளுக்கே தீர்வு காணப்படாத நிலையில், அந்தப் பகுதியில் புதிய பொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் பண்ணையாளர்களின் கவலைகள் நியாயமான முறையில் பரிசீலிக்கப்படவில்லை என்பதே உண்மை.
இந்திய முதலீட்டாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்
17.09.2026 நடைபெற்ற நிகழ்வில் இந்திய முதலீட்டாளர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொடர்பான தமது அனுபவங்களையும் வணிக உத்திகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு முதலீடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடியவை.
ஆனால் எந்தவொரு முதலீடும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.
எனவே, மயிலத்தமடு–மாதவணை பகுதியில் முதலீடுகள் மேற்கொள்ள விரும்பும் இந்திய முதலீட்டாளர்கள் அங்கு வாழும் பண்ணையாளர்களின் நீண்டகால பிரச்சினையையும், நாட்டின கால்நடைகளின் தன்மையையும், இயற்கையான மேச்சல் தரையின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எமது கோரிக்கைகள்
- ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 1570 ஏக்கர் காணி எதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.
- அந்த 1570 ஏக்கர் காணி மயிலத்தமடு–மாதவணை பண்ணையாளர்களின் மேச்சல் தரை தேவைக்காக என உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- இயற்கையான மேச்சல் தரைகளை மாதிரிப் பண்ணைகள் என்ற பெயரில் வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை நிறுத்த வேண்டும்.
- நாட்டின கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான தேசியத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
- மயிலத்தமடு–மாதவணை பண்ணையாளர்களின் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும்.
- அப்பகுதியில் இடம்பெறுவதாக பண்ணையாளர்கள் முன்வைக்கும் சட்டவிரோத குடியேற்றம், கால்நடைகள் கொலை, மேச்சல் தரை தீ வைப்பு, காடு அழிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மகாவலி தொடர்பான அரச நிறுவனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை நீக்கி ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.
- அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அப்பகுதி பண்ணையாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முறையான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும்.
அபிவிருத்திக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.
பால் உற்பத்திக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.
முதலீடுகளுக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல.
ஆனால், ஏற்கனவே உள்ள இயற்கை வளங்களை அழித்தும், நாட்டின கால்நடைகளின் வாழ்விடத்தை பறித்தும், பண்ணையாளர்களின் பொருளாதார முதுகெலும்பை முறித்தும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மயிலத்தமடு–மாதவணை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் நாட்டின கால்நடை வளத்தையும் பாதுகாப்பதே உண்மையான நிலையான அபிவிருத்தியாகும்.
“1570 ஏக்கர் யாருக்காக? – பண்ணையாளர்களுக்காகவா?அல்லது மாதிரிப் பண்ணைக்காகவா?”
இந்தக் கேள்விக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்
ச. சிவயோகநாதன்
தலைவர்
