இலங்கையின் மலைநாட்டு சொர்க்கபுரியாக விளங்கும் நுவரெலியாவில் அமைந்துள்ள சீதாஎலியா ஸ்ரீ சீதை அம்மன் ஆலயம், இராமாயண வரலாற்றின் உயிரோட்டம் நிறைந்த புனிதத் தலமாக உலகெங்கும் அறியப்படுகிறது. இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி தங்கியிருந்த இடமாக நம்பப்படும் இந்தப் புனித பூமி, ஆயிரக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும் பக்தியையும் தாங்கி நிற்கும் தெய்வீக மையமாக விளங்குகிறது.
அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ சீதை அம்மன் ஆலய தியான மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீராமர் – சீதை திருக்கல்யாணமும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பட்டாபிஷேக உற்சவமும் பக்தி, பண்பாடு மற்றும் ஆன்மீக உணர்வுகளின் உச்சமாக அமைந்தது. இராமாயண காலத்தின் மகத்துவத்தை மீண்டும் நினைவூட்டிய இந்த நிகழ்வு, பங்கேற்ற அனைவரின் உள்ளங்களிலும் அழியாத நினைவுகளை பதித்தது.
இந்த மகத்தான உற்சவத்தின் தொடர்ச்சியாக, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட பின்னணிப் பாடகியும் கர்நாடக இசை உலகின் ஒளிவிளக்குமான இசைப் பேரரசி கலாநிதி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் வழங்கிய “கானமழை” இசைக் கச்சேரி, ஆன்மீக இசையின் இனிமையால் பக்தர்களின் இதயங்களை நனைத்தது. அவருடன் வருகை தந்த கலைஞர்கள் அனைவரும் தங்களது திறமையான இசை நிகழ்வுகளால் அரங்கத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். இறைபக்தி, இசை மற்றும் கலாசாரத்தின் சங்கமமாக அமைந்த அந்த நாள், நுவரெலியாவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத அத்தியாயமாக அமைந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்கும் அரிய வாய்ப்பை மலையகம் 200 திட்டத்தின் மூலம் உருவான நல்லுறவின் அடிப்படையில் வன்னி மண்ணிலிருந்து கலைஞர் குமாரு யோகேஸ்வரன் ஆகிய நானும் பெற்றேன். எம்மை அன்போடும் மரியாதையோடும் அழைத்து சிறப்பான கௌரவம் வழங்கியமை எமக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
இந்த அரிய வாய்ப்பை வழங்கிய முன்னாள் கல்வி அமைச்சர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், ஆலயத்தின் அர்ப்பணிப்புமிக்க தொண்டரான ஆதிமூலம் ஐயா அவர்களுக்கும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஊடகப் பிரிவின் மதிப்பிற்குரிய உறுப்பினருமான ததிரு.தியாகு அவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களின் அர்ப்பணிப்பும் தொண்டும் இத்தகைய மகத்தான நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது.
இசைக் கச்சேரியை ரசிக்க வந்திருந்த மக்கள் பக்தி பரவசத்துடன் ஒவ்வொரு பாடலையும் அனுபவித்ததை நேரில் காண முடிந்தது. நிகழ்வு நிறைவடைந்த பின்னரும், “இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெற வேண்டும்” என்ற மக்களின் வேண்டுகோள் பல இடங்களில் ஒலித்தது. அதற்கு பதிலளித்த இசைப் பேரரசி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள், மீண்டும் நுவரெலியாவிற்கு வருகை தந்து இசை நிகழ்ச்சி வழங்குவேன் என உறுதியளித்தமை, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த மகத்தான நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை வெற்றியடையச் செய்த நுவரெலியா வாழ் மக்கள், பக்தர்கள், ஏற்பாட்டாளர்கள், தொண்டர்கள் மற்றும் அனைத்து நலன் விரும்பிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வரலாறு, ஆன்மீகம், கலை, இசை மற்றும் மனித உறவுகள் அனைத்தும் ஒன்றிணைந்த இந்த மகா உற்சவம், தமிழர் பண்பாட்டின் செழுமையையும், பக்தியின் ஆழத்தையும், மனித ஒற்றுமையின் மகத்துவத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டிய ஒரு சிறப்பான நிகழ்வாக என்றும் நினைவுகூரப்படும். தொகுப்பு
அன்புடன்,
கலைஞர் குமாரு யோகேஸ்வரன்
