முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டை விசாரிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் மூவரடங்கிய நீதியரசர் குழாமை நியமித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தது.
அதன்படி, நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோர் அடங்கிய குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னதாகத் தீர்மானித்திருந்தது.
இதேவேளை, குறித்த தீர்மானத்தை எதிர்த்து திலித் ஜயவீர தாக்கல் செய்துள்ள ரிட் மனு எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
