சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு பெருந்தொகையான டொலர்களை அனுப்பிய மோசடியில் இலங்கையின் 21 முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இறக்குமதிப் போர்வையில் சுமார் 190 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான (சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வெளிநாட்டுச் செலாவணி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்டுள்ள 21 நிறுவனங்களில் இதுவரை 6 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் நாட்டின் பிரபல ஆடை விற்பனை நிறுவனமான ‘ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனமும் அடங்கும்.
மோசடியுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் விவரங்களை வெளிப்படுத்த மறுப்பதுடன், விசாரணைகளுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
பொருட்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக போலியான சுங்க ஆவணங்களை உருவாக்கி, அதற்குரிய தொகையை விடப் பன்மடங்கு அதிகமான அந்நியச் செலாவணியை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பும் சட்டவிரோதப் பாணியே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
