ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே பயணித்த கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அலுவலகமான UKMTO வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஓமானின் கசாப் நகருக்கு வடக்கே சுமார் 9 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம், கப்பல் பணியாளர்களின் நிலைமை மற்றும் சேத விபரங்கள் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களாக ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுமதியற்ற கடல் வழியைப் பயன்படுத்தியதாகக் கருதப்பட்ட மூன்று எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்துத் தீப்பற்றியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சம்பவங்களுக்கும் UKMTO அறிவித்த கப்பல் தீ விபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், ஜலசந்திக்கு அருகே அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது. இந்தக் கூற்றுகளும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், சர்வதேசக் கப்பல் போக்குவரத்திலும் எரிசக்திச் சந்தையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிராந்தியத்தில் மேலதிக இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
