மன்மதன் பாஸ்கியின் “கலங்கரை” திரைப்படதிற்கு இப்படி ஒரு வெற்றியை எதிர்பார்த்தேன். மன்மதன் பாஸ்கி என்ற கலைஞனால் மீண்டும் ஒரு பெரிய வெற்றி சாத்தியமாகியுள்ளது!
எங்கள் மக்கள் எங்கள் கலைஞர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையின் வெற்றி என்றும் இதைப் பார்க்கின்றேன். எமது மக்கள் என்றைக்கும் எம்மை கைவிடமாட்டார்கள்!
மெகாறாமா திரையிரங்கில் இருக்க இடமில்லாமல் ஊடக நண்பர்கள் பலர் படிக்கட்டுகளில் இருந்த வண்ணம் இத்திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளர்கள்.
நோர்வேயில் 2019 ஆண்டு வெளியான சினம்கொள் திரைப்படத்தை 1000 பேருக்கு மேல் பல திரையிடல்களில் பார்த்து ஆதரவளித்தார்கள்.
அதன் பிறகு “கலங்கரை” திரைப்படத்தைப் 1000பேருக்கு மேல் எமது மக்கள் பிரான்ஸ் நாட்டில் அதுவும் ஒரே நாளில் ஒரு காட்சியில் பார்த்து ஆதரவளித்தது பெரு மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த வெற்றிக்காக ஒன்று கூடி உழைத்த அனைத்து நண்பர்களையும் நன்றியுணர்வோடு பாரட்டுகின்றேன்.
இந்த மாதம் மூன்று திரைப்படங்கள் அதுவும் ஈழத்தமிழத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது!
போராட்டம்- கலங்கரை- மனிதீ ஆகிய திரைப்படங்கள்!
மூன்று திரைப்படங்களும் உலகம் முழுவதும் வாழும் எமது மக்களைச் சென்றடையவேண்டும்
வணிக ரீதியாகவும் வெற்றி பெறவேண்டும்.
மிண்டும் இதயபூர்வமான வாழ்த்துகளையும், பாரட்டுக்களையும் மன்மதன் பாஸ்கி அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்!
இன்னும் இரண்டு வாரங்களில் கலங்கரை நோர்வே மண்ணிலும் திரையிடப்படவுள்ளது.
என்றும் அன்புடன்
வசீகரன் சிவலிங்கம்
நோர்வே
✦ கலங்கரையின் கதாநாயகன் வாழிய! வாழியவே! ✦
பட்டுக்கோட்டையிலிருந்து தமிழகத்திற்குக் கிடைத்தார் கல்யாணசுந்தரம்.
வட்டுக்கோட்டையிலிருந்து தமிழீழத்திற்குக் கிடைத்தான் மன்மதன் பாஸ்கி.
ஒரு படைப்பாளனைப் பத்து மாதம் தாய் சுமப்பாள். ஆனால், அந்தப் படைப்பாளன் பல யுகங்களின் பரம்பரைப் பேறு பெற்று வந்தவன் என்பதில் இவனும் ஒருவன்.
இவனால் பல தடைகளை உடைக்கும் நிகழ்வுகள் நிகழ்வதால், இவனும் நாளையக் கலைக்குத் தலைவன்.
கதையின் கருவை இருபது ஆண்டுகள் இதயத்தில் சுமந்த பிள்ளை.
நேற்று பிரசவித்தான்
திரையில்; இன்று பேசப்படுகிறான் ஒவ்வொருவரின் இதய அறையில்.
கலைஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி; அவன் காலங்களை அழகாக உரைக்கும் உணர்வின் கண்ணாடி.
இவன் கண்ணும் நாடியுமாக மானுடத்தைப் பார்த்தான். கண்ணாடியாக உடைந்த மனிதத்தை மீண்டும் ஒட்டிச் சேர்த்தான்.
வாழ்வுக்காகவே போராட நேரமில்லாதபோதும், தன் இனத்தின் விடியலுக்காகப் படைப்பால் புரட்சி செய்துள்ளான்.
திரையரங்கில் பாதி இடமே நிரம்புவதில்லை இதுவரை காலம்.
ஆனால் நேற்றுத்தான் நடைபாதை ஓரத்தில் கூட குந்தியிருந்தார்கள் நம் உறவுகள்.
ஆனால் மனதால் சத்தமின்றிக் குவிந்தும் இருந்தார்கள்.
எல்லாப் படங்களிலும் தொடக்கம் மெதுவாகி, இடைவேளைக்கு வேகமாகி, முடிவின் பாதியில் இன்னும் வேகமாக இருக்கும்.
ஆனால் ரசிகர்கள் சத்தம் செய்வார்கள், விசிலடிப்பார்கள், கைதட்டுவார்கள், குழப்பம்கூட செய்வார்கள். காலாகாலமாகத் திரையரங்கங்களில் இதுவே நடக்கும்.
ஆனால் அந்தக் கதையில் மகிழ்ச்சி இருக்கும்; மனதுக்குள் ஏதோ ஒரு புலர்வு இருக்கும்; காதல் இருக்கும்.
இந்தக் கதையோ கண்ணீர்ச் சோற்றைச் சமைத்து, ஏக்கத்திலும் தவிப்பிலும் உள்ள ஒரு அகதியின் மனம் வறட்சியில் உண்டு பசியாறுவது போலானது.
உண்மையில் வேறொரு உலகமானால் இடைவேளையில் எழுந்து போயிருப்பார்கள்.
ஆனால் மௌனமாக இதைக் காது கொடுத்து, இதயமிருத்தி, காலத்தை வேண்டிக்கொண்டே இருந்தது
எங்கள் மனங்கள், மனைகள்.
ஒரு குண்டூசி விழுந்தாலும் அது எங்கே விழுந்ததென்று நேரே நேற்று கண்டுபிடித்துவிடலாம்.
அத்தனை அமைதியாக இருந்தது.
அது ஆலய மணிகளின் ஓசையில் அவனின் செய்தியை அறைந்தது.
இப்படி எங்கள் மக்கள் இருப்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.
எங்கள் மக்களை இப்படியும் இருக்கச் செய்யலாம் என்று அந்த வேள்வி உணர்த்தியது.
✦ கலைஞர்களைக் கொண்டாடிய தருணம் ✦
படம் முடிந்ததும் எல்லோரும் கதவைத் தேடவில்லை. அதில் நடித்த கலைஞர்களைத் தேடினார்கள். அவர்களைக் கொண்டாடிக் கொண்டாடிப் பாடினார்கள்.
இது ஒரு திரைப்படம்தான். ஆனால்
இது சிறுத்தை கண்ட கனவின் உரைக்களம்
என்று காலம் பிரபஞ்சத்தில் எழுதித் தந்தது.
வளரும் தலைமுறைக்குத் திரையில் எடுத்துச் சொன்னது.
✦ ஆழ்மன உணர்வின் வெளிப்பாடு ✦
எந்தக் குடும்பங்களும் நாளைக்கு வேலைக்குப் போக வேண்டும் என்று கதைக்கவில்லை.
எந்தப் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு நாளைப் பாடசாலை என்று கதைக்கத் தோணவில்லை.
கலங்கரை உணர்த்திய பாடத்தில் பாடத்தைப் படித்துக்கொண்டிருந்தார்கள் பலர்.
அந்த ஆழமான உணர்வில் சிலர் வெடித்துக்கொண்டிருந்தார்கள்.
✦ இணையத்தில் தொடங்கிய பயணம் ✦
கடந்த மாதம் இணையத்தில் களமிறக்கினான்.
ஒவ்வொரு நாளும் இணையத்தில் ஏதோ ஒன்றைக் களமிறக்கினான்.
தான் நேசித்த உலகம் தன்னை நேசிக்கும் என்று நம்பினான்.
ஆனால் மனதுள் இவனும் வெம்பினான்.
கடைசித் திரையிடலுக்கு நான்கு மணித்தியாலத்துக்கு முன்புதான் இவனுடைய முகநூல் இணையம் கொஞ்ச நேரம் மூச்சுவிட்டது.
பின்னர் திரையில் உச்சம் தொட்டது.
அந்தக் கரிகாலன் செய்தியோடு திரையில் சுழன்று உணர்வைச் சுற்றித் தொட்டது.
✦ கதையைச் சாட்சியாக்கிய கலை ✦
கதைகளை அலங்கரித்துக் காட்சியாக்குவது இலகுவானது.
கதையை அலங்காரமில்லாமல் காட்சியாக்குவது இன்னும் இலகுவானது.
ஆனால் கதையின் முகங்களில், கண்களில், பார்வைகளில், உடைகளில், நடைகளில், தடைகளில், கடைகளில் கதையைச் சொல்லுவது அத்தனை இலகுவானதல்ல இயக்குநர்களுக்கு.
ஆனால் அத்தனையையும் இவன் உணர்வுக்குள் கற்றுக்கொண்ட பிள்ளை.
அதனால்தான் தொட்டான். முதன்முதலாகப் புலத்தில் சினிமாவின் உச்ச எல்லை!
✦ தடைகளை உடைத்த சாதனை ✦
கோடிகளைக் கொட்டி ஆடும் கோடம்பாக்கத்திற்கு முன்னால் நம்மவர்களின் லட்சியங்கள் எப்படி முகவரியாகும்?
நம்மவர்களின் இலட்சியக் கனவுகள் எப்படி முதல்மதியாகும்?
இந்தக் கேள்விதான் இதுவரைக்கும் தமிழினத் திரையுலகத்தில் வாட்டி வதைத்தது; பல கலைஞர்களை ஏற விடாமல் வெட்டிப் புதைத்தது.
இருந்தும் இந்தத் தடையைக்கூட மொழியின் உளியில் வலியைச் செதுக்கினான். உடைக்கலாம் என்று நம்பினான்.
உடைத்தான் தனியாக இல்லை; தன்னோடு சேர்ந்த அத்தனை கலைஞர்களையும் சேர்த்து வைத்து உடைத்தான்.
அத்தனை கலைஞர்களையும் திரைக்கு முன் நிறுத்திப் பொன்னாடை போர்த்தி வெல்லலாம் என்று உழைத்தான்.
இவன் உண்மையில் குடும்பத்திற்குத் தந்தையானவன்தான். ஆனால் கலைக் குடும்பத்திற்கு இவன் எப்போதும் தாயுமானவன்.
✦ கலைஞர்களுக்குக் கிடைத்த கௌரவம் ✦
இந்நாட்டில் நாற்பது ஆண்டுகளாக இருந்தவர்கள்கூட கலையைப் படைக்கின்ற கலைஞனின் முகத்தை இதுவரை தெளிவாகக் கண்டுகொண்டதில்லை.
நம்மவர்கள் கண்டுகொள்ளவும் இல்லை பொதுவாக.
நேற்று அத்தனை பேரையும் கைகுலுக்க வைத்தான்.
அத்தனை பேரின் கனவுகளுக்கும் இன்னொரு சிறகு வைத்துத் தைத்தான்.
இதோ, இனி கலைஞர்களுக்கும் கர்வம் கூடும். இனி கலைஞர்களுக்கெல்லாம் கௌரவம் கொடுக்க உலகம் தேடும்.
✦ ஆயிரம் இதயங்கள் கொண்டாடிய நாயகன் ✦
ஆயிரம் இருக்கை கொண்ட திரையரங்கம் நேற்று சாதனை படைத்தது.
திரையரங்கம்கூட நேற்றுத்தான் சந்தோஷம் கண்டது.
ஆயிரம் பாதங்கள் திரையரங்கை நிறைத்தன. ஆயிரம் இதயங்கள் இவன் கதையைப் படித்தன.
ஓராயிரம் உணர்வுகள் தடையுடைத்தன. ஆயிரம் படைக்க வேண்டும் என்று வளரும் தலைமுறைக்கு உரைத்தன.
இந்த நாயகனை எல்லோரும் வாழ்த்துவோமாக.
இந்த நாயகனின் கரங்களை இறுகப் பற்றுவோமாக.
✦ இவன் ஒரு துறைமுகம்! ✦
இவன் ஒரு துறைமுகம். இவன் தனி மனிதனல்ல.
இவன் தமிழின் கலையகம்.
இவன் தனி ஒரு படைப்பாளியல்ல. இவன் தமிழின் பிரபஞ்ச அகம்.
நேரம் எடுத்து வாழ்த்துங்கள். நேரம் ஒதுக்கி வாழ்த்துங்கள்.
இதயத்தால் வாழ்த்துங்கள். இணையத்தால் வாழ்த்துங்கள்.
கரம் பற்றி வாழ்த்துங்கள். வாட்ஸ்அப் கூடாக வாழ்த்துங்கள்.
முடியாவிட்டால் பிரபஞ்சத்தால் வரம் கேட்டு வாழ்த்துங்கள்.
✦ மன்மதன் பாஸ்கி — ஒரு பெயரல்ல!
காலத்தின் குறிப்பேட்டில் தமிழனின் வலி சுமந்த வழிபாட்டில் எழுதப்படுகின்ற பெயர் மன்மதன் பாஸ்கி.
இது பெயரல்ல. தமிழனின் ஆதி வேர். தமிழனுக்கான அழகிய தேர்.
வலி நாட்டில், வெளிநாட்டில் வாழ்வது போன்று இருந்தாலும், இவனால் காண்கிறோம் தமிழனின் ஊர்.
இன்னும் உலாவட்டும் இவன் ஏர். உலகு வியக்க வியக்க உருவாகும் அவன் தேடிய தேர்.
இனிய
வாழ்த்துக்களோடு, ![]()
கலையின் தாய்மாமனாக,
அண்ணன் கவிஞன் ஆனந்த் சுபபாலா
