எனது கலை, இலக்கியப் பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இளங்கலைஞர் அரச விருது நேற்று எனக்குக் கிடைத்தது.
தேசிய ரீதியில் இந்து கலாசார அமைச்சின் ஊடாக 2019ஆம் ஆண்டு எனக்கு ‘கலைச்சுடர்’ என்ற அரச விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர், நான் பிறந்து வளர்ந்த கிழக்கு மாகாணத்தில் எனக்குக் கிடைத்துள்ள முதல் அரச கௌரவம் இதுவாகும். எனவே, இந்த விருது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளிக்கின்றது.
இந்த விருதைப் பெறுவதற்குக் காரணமாக இருந்த கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும், குறிப்பாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு. ஏ.எல். தௌபீக் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனினும், இந்த விருதைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன், விருதுகள் வழங்கப்படும் நடைமுறைகள் குறித்த எனது சில அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
பத்தாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட அதிருப்தி!
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, கிழக்கு மாகாணத்தில் ‘இளங்கலைஞர் விருது’ அறிமுகப்படுத்தப்பட்ட காலப்பகுதியில், பாடலாக்கத் துறையுடன் நேரடியாகத் தொடர்பில்லாத ஒருவர் அந்த விருதைப் பெற்றதைப் பத்திரிகை வாயிலாக அறிந்துகொண்டேன்.
அப்போது நான் கொழும்பில் தொழில் நிமித்தம் வசித்துவந்தேன். அந்த விருது வழங்கப்பட்ட விதம் தொடர்பாக எனது ஆட்சேபனையை அப்போதைய கிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளரிடம் தெரிவித்திருந்தேன். அக்காலத்தில் மாகாண சபை உறுப்பினராக இருந்த ‘கல்முனை ஜவாத்’ அவர்களும் எனக்காகப் பேசியிருந்தார்.
அப்போது கலாசாரப் பணிப்பாளர் என்னிடம் கூறிய பதில்:
“நீங்கள் விண்ணப்பம் செய்திருந்தால் நிச்சயமாக உங்களுக்கு இந்த விருது கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் விண்ணப்பிக்கவில்லை.”
உண்மையில், அந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு குறித்துத் திணைக்களத்திலிருந்தோ, பிரதேசங்களில் பணியாற்றிய கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்தோ எனக்கு எவ்விதத் தகவலும் கிடைத்திருக்கவில்லை.
அதன் பின்னர், அந்த விருதுக்கு நான் விண்ணப்பிப்பதில்லை என்றும், எனக்கு அந்த விருது தேவையில்லை என்றும் முடிவெடுத்திருந்தேன்.
கலைத்துறை சார்ந்த எனது பயணமும் தொழில் நிமித்தமான இடமாற்றங்களும் காரணமாக, பல ஆண்டுகளாக எனது சொந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இருக்க முடியாத நிலையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
விருதுகளைவிடப் படைப்புகளே காலம் தாண்டி நிற்கும்!
ஒரு கலைஞர் பெறுகின்ற விருது அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், விருதுகள் வழங்கப்படும் முறைகள் சிலரது மனங்களில் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
என்னைப் பொறுத்தவரையில், விருதுகளால் மட்டுமே ஒருவரால் காலம் தாண்டி நிலைத்து நிற்க முடியாது. சிறந்த படைப்புகளால் மட்டுமே ஒரு படைப்பாளி மக்கள் மனங்களில் நீண்டகாலம் வாழ முடியும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை.
விருதுகளைப் பற்றிய எனது பார்வையை வெளிப்படுத்தும் வகையில், ‘விருதுகள் பெறும் எருதுகள்’ என்ற கவிதையையும் விருதுகள் குறித்த விமர்சனப் பார்வையுடன் எழுதியிருக்கின்றேன்.
தேசிய, சர்வதேச ரீதியில் நான் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவற்றை எனது கலைப்பயணத்தில் கிடைக்கும் சிறு இளைப்பாறுதல்களாகவே கருதுகின்றேன். அந்த இளைப்பாறுதல்களில் நிரந்தரமாகத் தங்கிவிடுவதற்கு நான் ஒருபோதும் விரும்பியதில்லை.
மேலும் சிறந்த படைப்புகளையும் பாடல்களையும் கவிதைகளையும் உருவாக்க வேண்டும் என்ற உற்சாகத்தை விருதுகள் அளிக்கின்றன என்பது உண்மைதான். அதேவேளை, அவை ஒரு கலைஞனின் தோள்களில் கூடுதல் பொறுப்புகளையும் சுமத்துகின்றன.
தகுதியானவர்களின் உழைப்புக்கும் பங்களிப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், நான் விருது பெற்றுவிட்டேன் என்பதற்காக விருது பெற்ற அனைவரும் தகுதியானவர்கள் என்றும், விருது பெறாதவர்கள் தகுதியற்றவர்கள் என்றும் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.
விருதுகளுக்கு விண்ணப்பிக்காத பல தகுதியான கலைஞர்கள் இருக்கலாம். விண்ணப்பித்தும் விருது கிடைக்காத திறமையாளர்களும் இருக்கலாம்.
அத்தகைய கலைஞர்களின் சார்பாகவும் நான் பேச விரும்புகின்றேன். ஏனெனில், அதுதான் அறம்!
விருது கிடைத்ததா இல்லையா என்பதைக் காட்டிலும், ஒருவரது படைப்பாற்றலும் அவரது கலைத்துறைப் பங்களிப்புகளுமே அவரை மதிப்பிடுவதற்கான உண்மையான அளவுகோல்களாக இருக்க வேண்டும்.
எதிர்பாராத விதமாக மீண்டும் வந்த விருது!
அண்மையில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ‘கிழக்கின் கவிக்கோர்வை’ என்ற கவிதைத் தொகுப்பில் எனது படைப்புகளும் இடம்பெற்றிருந்தன.
பிறை FM வானொலியில் இடம்பெற்ற திரைப்படப் பணிகள் தொடர்பான நேர்காணல் ஒன்றுக்காக அக்கரைப்பற்றுக்குச் சென்றிருந்தபோது, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு. ஏ.எல். தௌபீக் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, அங்கு வரும்போது திணைக்களத்திற்கு வருமாறும், கவிதைத் தொகுப்பை வழங்கி வைக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, அக்கரைப்பற்று கலாசாரத் திணைக்களத்திற்குச் சென்றபோது, எனக்கு அந்த நூல் வழங்கப்பட்டது.
அந்தச் சந்திப்பின்போதே, “உங்களுக்கு இளங்கலைஞர் விருது கிடைத்திருக்கிறதா?” என்று தௌபீக் அவர்கள் என்னிடம் கேட்டார்.
நான் பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்களையும், அந்த விருது தொடர்பாக எனக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தியையும் எடுத்துக்கூறினேன்.
ஆனால், அவர் எனது கருத்தை ஏற்றுக்கொண்டு அப்படியே விட்டுவிடவில்லை.
“இது அரசாங்கம் உங்களுக்கு வழங்குகின்ற கௌரவம். நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். விண்ணப்பப் படிவத்தைக்கூட வாட்ஸ்அப் ஊடாக எனக்கு அனுப்பிவைத்தார்.
ஆனால், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தது!
எனது கலை இலக்கியப் பயணம் தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே ஒரு புத்தக வடிவில் தொகுத்து வைத்திருந்தேன். எனது வாழ்க்கை, படைப்புகள் மற்றும் கலைத்துறைப் பங்களிப்புகள் தொடர்பான ஆங்கில நூலும் என்னிடம் இருந்தது.
அவற்றைப் பயன்படுத்தி, கிடைத்த குறுகிய நேரத்திற்குள் விண்ணப்பத்தைத் தயாரித்தேன்.
பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்ற பேருந்திலேயே விண்ணப்பத்தை அனுப்பிவைத்தேன். அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்ட அந்த விண்ணப்பத்தை உரிய நேரத்தில் சமர்ப்பிப்பதற்கு பலரும் உதவினர்.
இதற்கிடையில், நான் பொத்துவிலில் பிறந்தவன் என்பதை உறுதிப்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
நான் சுமார் இருபது ஆண்டுகள் கொழும்பில் வசித்திருந்தாலும், பொத்துவில் அஸ்மின் என்ற பெயர் இலக்கிய மற்றும் கலைத்துறை வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், எனது பிரிவைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் என்னுடைய பிறப்பிடத்தை உறுதிப்படுத்த முடியாது என்று விண்ணப்பத்தைக் கொண்டுசென்ற எனது சகோதரரிடம் தெரிவித்தார்.
பின்னர், வேறு பிரிவைச் சேர்ந்த மற்றொரு கிராம உத்தியோகத்தர் எனது பிறப்பிடத்தை உறுதிப்படுத்தி ஆவணத்தை வழங்கினார்.
அந்த உதவி கிடைத்திருக்காவிட்டால், என்னால் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருக்க முடியாது. அவருக்கு மனம்நிறைந்த நன்றிகள்!
அதனைத் தொடர்ந்து, பிரதேச செயலாளரின் கையொப்பத்தையும் அவசரமாகப் பெற்று, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தௌபீக் அவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டார்.
இறுதி நாளில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த விண்ணப்பத்தின் ஊடாகவே இன்று இந்த விருது எனக்குக் கிடைத்திருக்கின்றது.
இதில் எனது தனிப்பட்ட முயற்சியைவிட, திரு.தௌபீக் அவர்களின் விடாமுயற்சியும் ஊக்குவிப்பும் முக்கியமானவை.
அவரில்லையென்றால் எனக்கு இந்த விருது இல்லை!
அவருக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
விருது விழாவில் சில குறைபாடுகள்!
விருது வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றிருந்தாலும், சில விடயங்களில் மேம்பாடுகள் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
முதலாவது, ‘வித்தகர் விருது’, ‘இளங்கலைஞர் விருது’ என்ற பிரிவுகளின் கீழ் கலைஞர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.
இளங்கலைஞர் விருது வழங்கப்படுவதற்கான வயது வரம்பு தொடர்பாகத் தெளிவான வரையறையும் பொருத்தமான வகைப்பாடும் இருப்பது அவசியம் என நினைக்கின்றேன்.
உதாரணமாக, 22 அல்லது 25 வயதுடைய ஒருவருக்கும், 50 வயதுடைய ஒருவருக்கும் ஒரே பிரிவில் ‘இளங்கலைஞர்’ என்ற அடையாளத்துடன் விருது வழங்கப்படும்போது, அவர்களுக்கிடையிலான வயது மற்றும் கலைத்துறை அனுபவ வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு உரிய வகைப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
இதனால் விருதின் தனித்துவமும் அதன் நோக்கமும் மேலும் சிறப்பாக அமையும்.
இரண்டாவது, விருது வழங்கும் மேடையில் கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட விதம் தொடர்பானது.
பலருக்கு அவர்களது இயற்பெயரைவிடப் புனைபெயரே பரவலாக அறியப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக, என்னை அனைவரும் ‘பொத்துவில் அஸ்மின்’ என்ற பெயரில்தான் அறிந்திருக்கின்றனர். ஆனால், விருது வழங்கும் நிகழ்வில் எனது இயற்பெயரை மட்டும் அறிவித்திருந்தால், என்னை அடையாளம் காண முடியாதவர்கள் பலர் இருந்திருப்பார்கள்.
இதே நிலைமை ஏனைய கலைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
எனவே, விருது பெறும் கலைஞர்களின் இயற்பெயருடன், அவர்கள் கலைத்துறையில் அறியப்படும் புனைபெயரையும் அறிவிப்பது சிறப்பாக இருக்கும்.
எனது பார்வையில், விருது விழாவில் காணப்பட்ட மிக முக்கியமான குறைபாடுகளில் ஒன்று, விருது பெறும் கலைஞர்களின் பங்களிப்புகள் முறையாக அறிமுகப்படுத்தப்படாததாகும்.
ஒரு கலைஞர் எந்தத் துறையில் பணியாற்றியுள்ளார்? அவர் இலக்கியம், இசை, நாடகம், திரைப்படம் அல்லது வேறு எந்தக் கலைத்துறையில் என்ன பங்களிப்புகளைச் செய்துள்ளார்? அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதற்கான முக்கியமான காரணங்கள் என்ன?
இவற்றை ஓரிரு நிமிடங்களில் எடுத்துரைப்பதில் என்ன சிரமம் இருக்கின்றது?
ஒரு கலைஞரைக் கௌரவிப்பதற்காகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது. அப்படியிருக்கும்போது, அவரது பங்களிப்புகளை எடுத்துரைக்காமல் பெயரை மட்டும் அறிவித்து விருதை வழங்குவது அந்தக் கௌரவத்தின் முழுமையைப் பாதிக்கின்றது.
குறிப்பாக, இந்த நிகழ்வில் சிங்கள மொழியில் விருது பெற்ற கலைஞர்களின் பங்களிப்புகள் எடுத்துரைக்கப்பட்டதுடன், அவர்களது புனைபெயர்களும் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
ஆனால், தமிழ் மொழியில் விருது பெற்ற பல கலைஞர்களின் பங்களிப்புகள் அதே அளவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது எனது அவதானிப்பு. வித்தகர் விருது பெற்ற மூத்த கலைஞர்களுக்கும் இதே நிலைதான்.
ஒரு கலைஞரின் பெயரை அறிவிப்பது மட்டுமே அவரைக் கௌரவிப்பதாகாது; அவர் ஆற்றிய கலைத்துறைப் பங்களிப்புகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலமே அந்தக் கௌரவம் முழுமையடைகின்றது.
எனவே, எதிர்காலத்தில் இத்தகைய குறைபாடுகள் திருத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
விருதுக்கு விண்ணப்பிக்காதவர்களும் திறமையான கலைஞர்களே!
இந்த விருதுத் தெரிவில் பல திறமையான கலைஞர்கள் விண்ணப்பிக்காமல் இருந்திருக்கலாம். விண்ணப்பித்தும் விருது கிடைக்காதவர்களும் இருக்கலாம்.
அவர்களது தகுதிகள், பங்களிப்புகள் மற்றும் விருதுத் தெரிவுக்கான காரணங்கள் குறித்து எனக்கு முழுமையான தகவல்கள் இல்லை. எனவே, குறிப்பிட்டவர்களைப் பற்றித் தீர்ப்புக் கூற விரும்பவில்லை.
ஆனால், விருது கிடைக்காத காரணத்தால் மனவேதனை அடைந்திருக்கக்கூடிய கலைஞர்களின் உணர்வுகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கலைஞர்களின் உழைப்பை மதிப்பிடுவதற்கான நடைமுறைகள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் அமைய வேண்டும்.
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போது, அந்தத் தகவல்கள் உரிய நேரத்தில் அனைத்து பிரதேசங்களையும் சென்றடைய வேண்டும். அந்தந்தப் பிரதேசங்களில் பணியாற்றும் கலாசார உத்தியோகத்தர்கள், கலை அமைப்புகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் ஊடாக அறிவிப்புகள் பகிரப்பட வேண்டும்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகத் தொடர்பாடல் வழிகளிலும் தகவல்களைப் பரவலாகப் பகிர முடியும்.
விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு எப்போது வெளியிடப்பட்டது என்பதுகூடத் தெரியாமல் இருந்ததாகச் சிலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
தகுதியான ஒருவர் தகவல் கிடைக்காத காரணத்தினால் விண்ணப்பிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படக் கூடாது.
கலைஞர்களின் பங்களிப்புகளை ஆவணப்படுத்துவோம்!
விருது வழங்கப்படும் நிகழ்வுடன் அந்தப் பணி முடிந்துவிடக் கூடாது என்பதும் எனது கருத்தாகும்.
விருது பெறும் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு, கலைத்துறைப் பயணம், முக்கியமான படைப்புகள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆவணமொன்றையோ நூலொன்றையோ வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்தகைய ஆவணங்கள் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பயனுள்ளதாக அமையும்.
கிழக்கு மாகாணத்தின் கலை, இலக்கிய வரலாற்றைப் பாதுகாப்பதற்கும் புதிய தலைமுறையினருக்கு முன்னோடிகளின் பங்களிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் இது உதவும்.
கலைஞர்களைக் கௌரவிப்பது என்பது ஒரு விருதை வழங்குவதுடன் முடிவடையும் செயற்பாடு அல்ல. அவர்களது உழைப்பையும் படைப்புகளையும் வரலாற்றில் பதிவு செய்வதும் அந்தக் கௌரவத்தின் முக்கியமான பகுதியாகும்.
இளங்கலைஞர் விருதை வழங்குவதற்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கின்றேன்.
இத்தகைய நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதில் பல்வேறு சிரமங்களும் சவால்களும் இருக்கலாம். அவற்றை நான் குறைத்து மதிப்பிடவில்லை.
எனினும், எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து, இன்னும் சிறப்பான முறையில் விருது விழாக்களை நடத்த முடியும் என நம்புகின்றேன்.
எனது கருத்துகள் இந்த விருதையோ, இதனைப் பெற்ற கலைஞர்களையோ சிறுமைப்படுத்துவதற்கானவை அல்ல.
மாறாக, தகுதியான கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்; விருது வழங்கும் நடைமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்; கலைஞர்களின் பங்களிப்புகள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
இந்த விருதுக்கு நான் விண்ணப்பிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக வலியுறுத்தி, இறுதி நேரத்திலும் என்னை ஊக்குவித்து, விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளில் உதவிய மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு. தௌபீக் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோன்று, எனது கலை இலக்கியப் பங்களிப்புகளைக் கௌரவித்து இந்த விருதை வழங்கிய கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும் எனது நன்றிகள்.
இறுதியாக…
விருதுகள் ஒரு கலைஞனுக்குப் பெருமை சேர்க்கலாம். அவரது பயணத்தில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தலாம். அவரது உழைப்பைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தலாம்.
ஆனால், ஒரு கலைஞனை நீண்டகாலம் மக்கள் மனங்களில் வாழ வைப்பது விருதுகளின் எண்ணிக்கையல்ல; அவரது படைப்புகளின் தரமும் அவை மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கமுமே ஆகும்.
எனவே, விருதுகளை மதிப்போம். அதேவேளை, விருதுகளைவிடப் படைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.
விருதுகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களது நடைமுறைகளை மேலும் வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும், அனைவரையும் சென்றடையும் வகையிலும் மேம்படுத்தட்டும்.
தகுதியான கலைஞர்களின் உழைப்பு உரிய முறையில் அங்கீகரிக்கப்படட்டும்.
புதிய தலைமுறைக் கலைஞர்களுக்கு ஊக்கம் கிடைக்கட்டும்.
கலைஞர்களின் படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு, காலம் தாண்டியும் வாழட்டும்.
ஏனெனில், விருதுகள் ஒரு கலைஞனின் பயணத்தில் சிறு இளைப்பாறுதல்களாக இருக்கலாம்; ஆனால், சிறந்த படைப்புகளே அவரை வரலாற்றில் நிலைநிறுத்துகின்றன!
— கவிஞர் பொத்துவில் அஸ்மின்
