வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5 சதவீதமாகக் காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம்.
இந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பேராதரவும், விடாமுயற்சியும், புதியதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் எமக்குத் தேவை.
தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் எமக்குக் கிடைத்துள்ள சாதகமான நிலைப்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி இந்த இலக்கை எட்டுவோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த வட மாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2026 இன்று (15.08.2026) சனிக்கிழமை கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் ஆரம்பமானது.
இன்று காலை நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். போரின் பின்னர் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட ஆளுநர், ஒவ்வொரு ஆண்டும் தொழில் முயற்சியாளர்கள் புதிய உற்பத்திப் பொருட்களை அறிமுகப்படுத்துவதும், புதுமையாகவும் புத்தாக்கமாகவும் சிந்தித்து தமது தொழில்களை விரிவுபடுத்துவதும் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
