தமிழர் விவகாரத்தில் அநுர குமர அரசிடம் தீர்வு இல்லை. இந்திய அரசின் ”இருதலை” விளையாட்டு ஒரு தொடர்கதை. இலங்கையின் ஆட்சிபீட முடிவுகள் பெலவத்தையில்தான் எடுக்கப்படுகிறது என்பதை அயலகம் நிரூபித்து வருகிறது. பேசலாமா என்றதும் பேசுவதற்கு முன்னணி எப்படி சம்மதிக்கும்?
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் தோண்டதோண்ட வரும் மனித எலும்புக்கூடுகள், இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடத்திவரும் நம்பகமற்ற சந்திப்புகள், நீதித்துறையில் 22வது திருத்தம் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்த அநுர அரசு எடுக்கும் முயற்சிகளும் எதிர்கொள்ளும் சவால்களும், பேசலாமா என்ற அழைப்புடன் ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையை ஏழாக்கும் முனைப்பு என்பவை கடந்த வாரத்தின் முக்கியமான செய்திகளாக அணிவகுத்தன. இந்த வாரத்திலும் இவையே முன்னணியில் திகழப்போகின்றன.
காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் எவ்வாறு நெடுங்கதையாக இடம்பெற்று வருகிறதோ, அதற்கு நிகராக செம்மணி சித்துப்பாத்தி மயான அகழ்வில் வெளிவரும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சுமார் ஆயிரம் வரையான எலும்புக்கூடுகள் இங்கு காணப்படலாமென்ற அனுமானம் ஆரம்பத்திலேயே இருந்தது.
இதுவரை 547 எண்ணிக்கையை இது தாண்டியுள்ளது.
பால் போத்தலுடனும் விளையாட்டுப் பொம்மைகளுடனுமான சிசுக்கள், இரட்டைக் குழந்தைகள், குடும்ப ரீதியானவையென இவை வியாபித்துச் செல்கின்றன. நி~;டையில் இருப்பது போன்ற ஓர் எலும்புக்கூடு பலரையும் அதிர வைத்தது. இதனை அசூசைப்படுத்தும் வகையில் ஓர் ஊடகம் வெளியிட்ட கருத்து கண்டனத்துக்குள்ளானது.
1996ல் செம்மணியில் இடம்பெற்ற கிரு~hந்தி என்ற சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியின் கொலை வழக்கில் முதலாம் குற்றவாளியாக இனங்காணப்பெற்ற லான்ஸ்கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச இந்த மனித எலும்புக்கூடுகள் பற்றி முன்னரே பல தடவை கூறியிருந்தார். 1998ல் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கொல்லப்பட்டு மீட்கப்படாத மனித எச்சங்கள் புதைக்கப்பட்டன என்பது இவரது தகவலின்படி சர்வதேச கவனத்துக்கு சென்றது.
சந்திரிக குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த வேளையில் கிரு~hந்தி கொலை இடம்பெற்றது. ஆனால் இவர் ராணுவத்தைக் காப்பாற்றுபவராகவே தொடர்ந்ததால் – செம்மணி புகழ் அம்மணி – என அழைக்கப்பட்டார். இவர் பெயரைக் கொண்ட சினிமாப்பாடல் ஒன்று அக்காலத்தில் பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது.
அரியாலை மணியம் தோட்டப்பகுதியில் புதைக்கப்பட்டதாக லான்ஸ் கோப்ரல் ராஜபக்ச தொடர்ந்து சொல்லி வந்தார். முன்னைய ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவிருந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சிறைச்சாலையிலிருந்த தமக்கு அனுப்பிய கடிதமொன்றில், மனிதப் புதைகுழிகள் பற்றி தம்மால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் கோபம் காரணமாக தெரிவிக்கப்பட்டவை என்று கூறுமாறு கேட்டதாகவும், அதனைத் தாம் மறுத்தபோது சிறைக்குள் வைத்தே தம்மை கொலை செய்ய முயற்சி எடுக்கப்பட்டதாகவும் லான்ஸ் கோப்ரல் அப்போது தெரிவித்தது நினைவிற்கொள்ளப்பட வேண்டியது.
சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் செம்மணி புதைகுழிகள் பற்றி தம்மால் விபரங்களை தெரிவிக்க முடியுமென தமது மனைவியின் ஊடாக ஜனாதிபதி அநுர குமரவுக்கு இவர் கடிதம் அனுப்பியிருந்தாராயினும், இதுவரை அந்தக் கடிதத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான ஒரு கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்ததாக அவரது அலுவலகமோ அல்லது அமைச்சரவைப் பேச்சாளரோ எதுவும் தெரிவிக்கவும் இல்லை. கடிதம் கிடைத்ததாக ஒப்புக்கொண்டால் செம்மணி புதைகுழி விவகாரத்தை சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க நேரிடலாம் என்ற அச்சம் இதற்கான காரணமாக இருக்கலாம்.
எங்கள் தோழர்களும் முன்னைய ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டார்கள், காணாமலாக்கப்பட்டார்கள், அதன் வலி தெரிந்தவர்கள் நாங்கள் என்று தேர்தல் காலத்தில் பல்லக்கில் நின்று பேசிய தேசிய மக்கள் சக்தி காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றியும் புதைகுழி எலும்புக்கூடுகள் பற்றியும் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லாமல் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இவை அனைத்தையும் மூடிமறைக்கும் போக்கில் நீதித்துறை சம்பந்தமான புதிய சட்டத்தை நிறைவேற்றுவதில் துடிப்பாக இயங்குகிறது. இப்போது நீதித்துறையில் உள்ளவர்களின் வயதெல்லையை அதிகரிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு தீவிரமாக உள்ளது. தேக்க நிலை வழக்குகளை துரிதப்படுத்தவும், காலியாகவுள்ள நீதிபதிகளின் வெற்றிடங்களை நிரப்பவுமே புதிய சட்டம் உருவாக்கப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தம்மைச் சந்தித்த இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தினரை, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பதிலளித்து அனுப்பியுள்ள அநுர குமர, நீதித்துறை சட்டமூலத்தை எந்த மாற்றமுமின்றி எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதித்துள்ளார்.
South Asians & Diaspora
பொதுவெளியில் நிறுவனங்களினதும் எதிர்க்கட்சிகளினதும் ஆதரவு புதிய சட்டமூலத்துக்கு குறைவாக இருப்பினும் நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருப்பதால் இதனை இலகுவாக நிறைவேற்றலாம். இலங்கை அரசமைப்பின் 22வது சட்டத்திருத்தமாக இது அமையவிருப்பதால், சர்வஜன வாக்கெடுப்புக்கு கொண்டு செல்லப்பட வேண்டுமென எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. முன்னாள் நீதி அமைச்சரும், சட்டமேதை என வர்ணிக்கப்படுபவருமான அரசியல் குதர்க்கவாதியான ஜி.எல்.பீரிஸ் புதிய சட்டமூல எதிரணிக்கு தலைமை தாங்குகிறார்.
இவரது கூற்றை எதிர்க்கும் முதலாம் ஆளாக நவசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார விளங்குகிறார். தற்போதைய நீதி அமைச்சர் ஹர்ச நாணயக்காரவின் தந்தையின் சகோதரர் வாசுதேவ நாணயக்கார என்பதை தெரிந்து கொண்டால் இவரது நிலைப்பாடு எவ்வாறானது என்பதை புரிந்து கொள்ளலாம். முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவும் இவரது வழித்தடத்தில் அநுர அரசை கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பவராக உள்ளார்.
புதிய நீதித்துறை சட்டத்தை மகாநாயக்கர்கள் எதிர்ப்பதாக ஊடக செய்திகள் சொல்கின்றன. மகாநாயக்கர்கள் தங்களின் எதிர்ப்பை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து வருகின்றன. ஆனால் அவ்வாறான ஒரு மகஜர் ஜனாதிபதிக்கு கிடைத்ததாக அதிகாரபூர்வமான தகவல் எதனையும் தெரிவிக்காது அவரது அலுவலகம் அசாதாரண மௌனம் காத்து வருகிறது. மததசார்பற்ற கொள்கையைக் கொண்ட ஜே.வி.பி.யின் நிகழ்கால வடிவமான தேசிய மக்கள் சக்தி அரசு மகாநாயக்கர்களை ஓரத்தில் நிறுத்திவிட்டு புதிய நீதித்துறை சட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முயற்சிக்கிறது. மகாநாயக்கர்களின் கடிதம் கிடைத்த பின்னரே இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
மகாநாயக்கர்களுக்கு ஏற்பட்ட கையறு நிலையில்தான் ஆறு தமிழ் பேசும் கட்சிகளின் பேரவையும் காணப்படுகிறது. தனித்துச் சந்தித்தால் அநுர குமர எதனையும் உறுதிபடக் கூறாது மடக்கி விடுகிறார் என்ற தோல்வி நிலையில் இருந்த தமிழரசுக் கட்சி, தமிழ் – முஸ்லிம் – மலையக ஆறு கட்சிகளுடன் கூட்டாக இணைந்து சந்தித்தும் பயன் கிடைக்கவில்லை.
மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், காணிகள் மீளளிப்பு விவகாரம் ஆகிய மூன்று விடயங்களிலும் எந்த உத்தரவாதத்தையும் அநுர குமர தங்களுக்கு வழங்கவில்லையென்று அழாக்குறையாக தங்களைச் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ராவிடம் இவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி அநுர குமரவை சந்திக்கும்போது இதுபற்றி உரையாடுவதாக உறுதியளித்த விக்ரம் மிஸ்ரா ஒருவாறு இவர்களைத் தேற்றிவிட்டதோடு அநுர குமரவை சந்தித்தபோது இதுபற்றி எடுத்துக் கூறியுள்ளார்.
இந்திய வெளிவிவகார திணைக்களம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் விக்ரம் மிஸ்ரா ஆறு தமிழ் கட்சிகள் சுட்டிய மூன்று விடயங்களையும் அநுர குமரவின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக தெரிவித்திருந்தது. ஆனால் ஜனாதிபதி அநுர குமரவின் அலுவலகம் அது தொடர்பாக விடுத்த செய்திக்குறிப்பில் இம்மூன்று விடயங்கள் பற்றியும் எதுவுமே தெரிவிக்கவில்லை. இலங்கைக்கு இந்தியா வழங்கும் பொருளாதார ஆதரவு பற்றி இங்கே பேசப்பட்டதாகவே இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்த சில நாட்களில், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோ~; ஜா, ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை பெலவத்தையிலுள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்று உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின்போதுகூட தமிழர் தரப்பு முன்வைத்த விடயங்கள் பற்றி எதுவுமே பேசப்பட்டதாக குறிப்பிடப்படாத செய்திக் குறிப்பே வெளிவந்துள்ளது. இப்போதெல்லாம் சீனா, இந்தியா உட்பட சில முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் அலுவலகம் சென்று ரில்வின் சில்வாவை சந்தித்து உரையாடுவதை முக்கிய அரசியல் செயற்பாடாக கருதுவதை அவதானிக்க முடிகிறது.
அதுபோகட்டும். ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டை ஏழாக்கும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை உத்தியோகபூர்வ செயற்பாடு என்று கூறமுடியாது. தவிர்க்க முடியாத தற்செயலான ஒரு கருத்துப் பரிமாற்றமாகவே சொல்லலாம்.
நாடாளுமன்ற அமர்வின்போது தம்மை இடைவழியில் சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் – பேசலாமா என்று தம்மிடம் கேட்டதாகவும், ஆறு தமிழ் கட்சிகள் இணைந்துள்ள பேரவையில் இணையுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் கேட்டதாகவும், அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால் தமது கட்சியின் மத்திய குழுவிடம் அதனை சமர்ப்பித்து உரிய தீர்மானத்தை மேற்கொள்ள முடியுமென்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலளித்துள்ளார். இதனை அவரே ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
சும்மா சொல்லக்கூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாம் இலங்கையின் அதிமூத்த தமிழ் அரசியல் தலைவர் பொன்னரின் (ஜி.ஜி.பொன்னம்பலம்) பேரன்தான் என்பதை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறார்.
