உண்மைக்கும் நீதிக்கும் துணிச்சலாக குரல் கொடுத்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு ஆதரவு – கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வரவேற்பு
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்களின் அண்மைய கருத்துகளையும், அவருக்கு ஆதரவாக வடகிழக்கைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும் துறவிகளும் வெளியிட்டுள்ள அறிக்கையையும் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம் என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளரும்
மனித உரிமை செயல்பாட்டாளருமான அருட்தந்தை லுக்ஜோன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் நீண்டகாலமாக மறைக்கப்பட்டு வந்த உண்மைகளை தெளிவாகவும் துணிச்சலாகவும் வெளிப்படுத்தும் இந்த குரல்கள், உண்மை மற்றும் நீதியை நாடும் அனைவருக்கும் நம்பிக்கையூட்டுகின்றன.
முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் காலத்தில் நடைபெற்ற “முள்ளிவாய்க்கால் வரலாற்றை முடித்துவிட்டதா?” என்ற கருத்தரங்கில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் பேசிய கருத்துகள் மிக முக்கியமானவை. தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது வெறும் “போரில் நடந்த உயிரிழப்பு” அல்ல; அது திட்டமிட்ட இனப்படுகொலை என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இது வரலாற்று உண்மையை ஏற்றுக்கொள்ளும் நேர்மையான நிலைப்பாடாகும்.
மேலும், வடகிழக்கு மதகுருமார்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் அரசியல் அபிலாஷைகள் பேச்சுவார்த்தைக்குரியவை அல்ல” என்றும், “உண்மையை பேசும் குரல்களை அடக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மிகவும் வரலாற்றுப் பெறுமதியுடையதாகும்.
சிங்கள மக்களிடமிருந்து இவ்வாறான உண்மையான குரல்கள் எழுவது தான் எங்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு. அனைத்து சிங்கள சகோதரர்களும் வரலாற்று உண்மைகளை தைரியமாக ஏற்றுக்கொண்டு, தமிழர் மக்களின் வேதனையை புரிந்துகொள்ள வேண்டும். நல்லிணக்கம் என்பது உண்மையை மறுப்பதன் மூலம் உருவாகாது; உண்மையை ஏற்றுக்கொண்டு நீதியை நிலைநாட்டுவதன் மூலமே அது சாத்தியமாகும்.
தென் பகுதியில் இருந்து மேலும் இத்தகைய நீதிக்குரல்கள் ஒலிக்க வேண்டும். இனவாத அழுத்தங்களாலும் அரசியல் அச்சுறுத்தல்களாலும் இந்த குரல்கள் நசுக்கப்படக்கூடாது. மாறாக, உண்மையை உரத்துச் சொல்லும் மனிதர்களை சமூகமே பாதுகாக்க வேண்டும்.
கிறிஸ்துவின் போதனைகள் ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதையும், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதையும் கற்பிக்கின்றன. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் எடுத்துள்ள நிலைப்பாடு உண்மையான கிறிஸ்தவ சாட்சியாகும்.
““உண்மையும் பொறுப்பு கூறலும் இல்லாமல் நீதி இல்லை; நீதி இல்லாமல் சமாதானம் இல்லை” என்ற அடிப்படை உண்மையை இலங்கை உணர வேண்டிய நேரம் இது.” என்ற அடிப்படை உண்மையை இலங்கை உணர வேண்டிய நேரம் இது.
தகவல்
அருட்பணி லூக்ஜோன் இணைப்பாளர்
கிழக்குமாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் கள் ஒன்றியம்.
