வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் நாளைய தினம் தாய்லாந்துக்கு பயணம் செய்யவுள்ளார்.
தாய்லாந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் அழைப்பின் பேரில், செல்லும் அவர், 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை அங்கு தங்கியிருப்பார் எனக் கூறப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது தாய்லாந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பதில் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும், தொழிலாளர் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றில் கையொப்பமிடுவதன் மூலம், இரு தரப்பினரும் தொழிலாளர் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவார்கள்.
இந்த விஜயம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு, இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர் இடப்பெயர்வு ஆகிய துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், மக்கள் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.
