திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைத் தலைவர் வெள்ளைத்தம்பி சுரேஸ்குமார், மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் சமத்துவம் பேணப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளைப் புனரமைப்பதற்காக பிரதேச செயலகத்தினால் முன்னனுமதி கோரி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் புளியங்குளம் வட்டாரத்துக்கான வீதி புனரமைப்புப் பணிகளுக்கு வெறும் 3 இலட்சம் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்காக பெருந்தொகையான நிதி பெரும்பான்மை இன மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஏனைய பிரதேசங்களிலும் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச சபை எல்லைக்குள், அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் ஏன் இவ்வாறான பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதே எமது கேள்வி” என அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சமமற்ற நிதி ஒதுக்கீட்டுக்கு பிரதேச சபை அனுமதி வழங்குவது, தம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகமாக அமையும் எனக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே குறித்த வீதி புனரமைப்புத் திட்டத்துக்கு சபையின் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
பிரதேச செயலகத்தினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக 14 நாட்கள் நிறைவடைவதற்கு முன்னரே, புளியங்குளம் பகுதி மக்களிடம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபைத் தலைவர் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக, புளியங்குளம் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வீதி புனரமைப்பு நிதிக்கு பிரதேச சபைத் தலைவர் அனுமதி வழங்க மறுப்பதாக மக்களிடம் தெரிவித்து, அவர்களைத் தவறாக வழிநடத்தி, பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சில தனிப்பட்ட நபர்கள் அரசியல் இலாபம் கருதி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், நிதி ஒதுக்கீடு தொடர்பான உண்மை நிலைவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்குப் பதிலாகத் தவறான தகவல்களைப் பரப்புவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது பிரதேச சபையின் அபிவிருத்திப் பணிகள் எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட வெள்ளைத்தம்பி சுரேஸ்குமார், சபையின் 20 உறுப்பினர்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மட்டத்தில் சமத்துவமான நிதிப் பகிர்வை உறுதிப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், முழு நாட்டையும் நிர்வகிக்கும் மத்திய அரசாங்கமும் அனைத்து பிரதேசங்களுக்கும் நியாயமான முறையில் அபிவிருத்தி நிதியை ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவரும் ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் அரச அதிகாரிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி, இன வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களுக்கும் சமமான அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் நியாயமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனத் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைத் தலைவர் வெள்ளைத்தம்பி சுரேஸ்குமார் மேலும் தெரிவித்தார்.
