* உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலும் பாதுகாப்புத் தரப்பின் சூத்திரதாரிகளும்!
* சிறைச்சாலைக் கொலைகளும் அச்சுறுத்தல்களும்
* போதைப்பொருளும் பாதாள உலகக் குழுக்களும்
* நீதித்துறையில் அரசியல் தலையீடு! 1948 இல் இருந்து அநுர வரை…
— — —
2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரான சூழலில் இருந்து 2026 ஆம் ஆண்டு வரை, கடந்த 17 வருடங்களாக இலங்கைத் தீவில் சிறைக் கைதிகள் மீதான தாக்குதல்கள், கைதிகள் படு கொலைகள் அரங்கேறி வருகின்றன.
அதேபோன்று, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் அது பற்றிய விசாரணைகளும் அதற்கான மரண தண்டனைத் தீர்ப்புகளும், மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தின் ஊடாகப் பாதாள உலகக் குழுக்களால் நிகழ்த்தப்படும் கொலைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.
ஆகவே, அரசியலமைப்புச் சட்டங்களையே கேள்விக்கு உள்ளாக்கும் சட்டவிரோதக் குற்றச் செயல்கள் அனைத்தும், இலங்கைத்தீவில் நிலவும் 80 வருடகால இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதன் பக்கவிளைவுகள்தான் என்பது கண்கூடு..
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டுச் சிங்கள அரசியல் தலைவர்கள் இதனை உணராமல் இல்லை. இத் தவறான வரலாற்று நீட்சி அவர்களுக்கு புரியாமலில்லை.
விசேடமாக, 1980 களில் போர் தீவிரமடைந்தபோது, வடக்கு-கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வீடுகள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டன.
இச்சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் சிறைச்சாலைகளுக்குள் படுகொலை செய்யப்படுதல், தொடர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்பட்டன.
அதேநேரம், தமிழ் – முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சில ஆயுதக் குழுக்களை உருவாக்கி, அவர்களை இராணுவத்துடன் இணைந்து இயங்கிய காய் நகர்த்தல்களும் மிக நுட்பமாக மேற்கொள்ளப்பட்டன.
இக்குழுக்களின் மூலமாகத் தமிழர் பிரதேசங்களில் சட்டவிரோதக் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் போன்ற அத்துமீறல்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதோடு, பிரதேச வேறுபாடுகளும் தீவிரமாகத் தூண்டிவிடப்பட்டன.
இவற்றைக் கேள்விக்குட்படுத்த முடியாதவாறு – ஆனால் அரசியல் காரண-காரியங்களால் நியாயப்படுத்தக் கூடிய வகையில் – காலத்துக்குக் காலம் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் மூடிமறைத்தன.
வடக்கு-கிழக்கில் அத்துமீறிக் காணிகளை அபகரிப்பது, பௌத்த விகாரைகளை அமைப்பது மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என்ற பெயரில் தமிழர்களின் மரபுரிமை அடையாளங்களைப் பௌத்த மரபுரிமையாக மாற்றுவது போன்ற இன அழிப்புச் செயற்பாடுகள் நுட்பமாக அரங்கேறுகின்றன.
இச் செயற்பாட்டுக்காக, தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்தினருக்கும் பௌத்த துறவிகளுக்கும் 2009 இற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த எல்லையற்ற அதிகாரமே, இன்று கொழும்பை மையப்படுத்திய தென்பகுதியில் இடம்பெறும் அச்சுறுத்தல் கொலைகள் போன்றவற்றுக்கும் காரணம்.
2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சியில் இருந்தபோது அரங்கேறிய ஊழல் மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகங்கள் ஆகியவற்றுக்கும் இதுவே காரணியாக அமைந்தது
இக் கசப்பான உண்மை சிங்களத் தலைவர்கள் அனைவருக்கும் நன்கு புரியும்.
2009 இற்குப் பின்னர் சிங்களப் பிரதேசங்களில் தீவிரமாக இடம்பெறும் சட்டத்திற்கு முரணான கொலைகள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச் செயல்களின் பின்னணிகளையும் நேர்மையாக விசாரித்தால், 2009 இற்கு முன்னர் போர் நடைபெற்ற காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அத்தனை அநீதிகளும் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.
அதாவது, இவை அனைத்திற்குமான ‘மூல காரணம்’ (Root Cause) வெளிப்பட்டு விடும்.
இந்த மூல காரணம் வெளிச்சத்திற்கு வந்தால், ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற பெயரில் தற்போது அரசாங்கத்தை அமைத்துள்ள ஜே.வி.பியும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய நிலை உருவாகும்.
ஏனெனில் மகிந்தவை 2009 இல் போருக்குத் தள்ளியது ஜேவிபிதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆகவே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகள், மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடிகளை மாத்திரம் விசாரணை செய்யும் நகர்வுகளின் ஊடாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஈழத்தமிழர் விவகாரங்களை உள்ளகப் பொறிமுறைக்குள் முடக்கும் திட்டங்களை அநுர அரசாங்கம் நாசூக்காக முன்னெடுத்து வருகிறது.
இந்த நாசூக்கான நகர்வுக்கு மகிந்த ரணில், சந்திகா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் கட்சி அரசியலுக்கு அப்பால் ஆதரவு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இருந்தாலும், நாசூக்கான நகர்வின் ஊடாக மகிந்த, ரணில், சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பலவீனமாக்கி, சிங்கள மக்களின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள அநுர முற்படுகிறார்.
அநுரவின் இத் தந்திரமும் மகிந்த – ரணில்- சஜித் ஆகியோருக்குப் புரியாதது அல்ல.
இப்பின்னணியில்தான் இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனம் குறித்தும் ஆராய வேண்டும்.
1948 ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பில் தமிழர்களின் பாதுகாப்பிற்காக விசேடமாக இணைக்கப்பட்ட சிறுபான்மையோர் காப்பீட்டுப் பிரிவை (Section 29) நடைமுறைப்படுத்த மறுத்த பௌத்த அரசியல் சிந்தனை, இன்றைய அநுர அரசாங்கம் வரை தொடர்கிறது.
போர்க்குற்ற விசாரணை அல்லது ஈழத்தமிழர்கள் கோருகின்ற இனவழிப்பு விசாரணை போன்ற சர்வதேச விசாரணை வழிமுறைகள் எதையுமே ஏற்க முடியாது என்பதே, இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பின் திட்டவட்டமான நிலைப்பாடாகும்.
2009-இற்குப் பின்னரான இந்த நிலைப்பாட்டைத் தக்கவைப்பதற்கு, இலங்கை நீதித்துறை ஒரு பிரதான அரணாகத் திகழ்கிறது.
அதேநேரம், தமது ஆட்சியைத் தக்கவைக்கச் சந்திரிகா, மகிந்த, ரணில், கோட்டாபய ஆகியோர் எவ்வாறு நீதித்துறையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்களோ, அதேபோன்று மிக நுட்பமாக அநுரவும் தற்போது நீதித்துறையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்.
இதற்கு உதாரணமாக, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் முடிவு, நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்றியும் பொதுமக்கள் கருத்துக்கணிப்புகள் இன்றியும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மூலம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை 2026 ஜூலை 27 அன்று நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆகவே, இந்த வரலாற்று ஆதாரங்களை உலக அரங்கில் அம்பலப்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான அநீதியை வெளிச்சமிட்டுக் காட்டி, தமது அரசியல் நியாயங்களை நிறுவ வேண்டிய தார்மீகக் கடமையை தமிழ்த் தேசியக் கட்சிகள் செய்யத் தவறியுளளன.
சிங்கள அரசியல் தலைவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், வெளிச்சக்திகளின் நுட்பமான காய்நகர்த்தல் முறைமைகளுக்குப் பணிந்தும், இலங்கைக்குள் இருக்கும் உள்ளகப் பொறிமுறைத் தீர்வை நோக்கியே தமிழ்க் கட்சிகள் பயணிக்கின்றன!
அவ்வாறான உள்ளகப் பொறிமுறையின் மூலமாக ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதற்குக்கூட எவ்வித உத்தரவாதமும் இல்லையே!
ஆகவே, கட்சி அரசியலைக் கடந்து, ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள சிவில் சமூகப் பொது அமைப்புகளும் கல்வியாளர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது…
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
