விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பயிற்சி முகாம் ஒன்று பளைப் பாதுகாப்புக் காட்டில் உள்ளதாக இலங்கை வனவளத்திணைக்கள அதிகாரிகளே தகவல் தந்திருந்ததாக போலியான செய்தியைப் பரப்பியதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேகர, இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னரே நீதவான் அவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், கண்டகண்டார மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எனக் கூறப்படும் சங்கீத் ஜெயசேகர என்பவர் என தெரியவந்துள்ளது.
மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திய சந்தேகநபர், செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, கிளிநொச்சி, பளைப் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புக் காடு ஒன்றிற்குள் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பயிற்சி முகாமும் வெடிகுண்டு தயாரிப்புத் தொழிற்சாலையும் உள்ளதாகத் தகவல்களை வெளியிட்டிருந்தார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கிளிநொச்சிப் பகுதி வலய வன அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தாம் கருத்தைக் கூறியதாகச் சந்தேகநபர் வெளிப்படுத்தியுள்ளார். எனினும் வன அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெறப்பட்ட போது, தாங்கள் அவ்வாறான எதையும் கூறவில்லை என அவர்கள் மறுதலித்துள்ளனர்.
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் பண்ணை ஒன்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றும் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துத் தமிழ் வர்த்தகர் ஒருவருக்கு எதிராகப் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
