முல்லைத்தீவு மண்ணின் பெண்கள், உலக வரலாற்றில் தடம் பதித்த ஏனைய வீரப் பெண்மணிகளுக்கு எந்த வகையிலும் குறையாத மனவலிமை, தலைமைத்துவம், தியாகம் மற்றும் வீரச்சக்தியை உடையவர்கள் என்பதனை, “ஆனையை அடக்கிய அரியாத்தை” என வரலாற்றில் நிலைத்திருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழுமுனை கிராமத்தைச் சேர்ந்த வீரப் பெண்மணியின் வாழ்வியல் வரலாறு வலிமையாகப் பறைசாற்றுகிறது. அந்த வீரத் தமிழ்ப்பெண்ணின் அழியாப் புகழையும் சமூகப் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களுக்கு “அரியாத்தை விருது” மற்றும் சிறப்பு பாராட்டுதல்கள் இன்றைய தினம் மரியாதையுடனும் சிறப்புடனும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு மாவட்ட செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், வாழ்நாள் சாதனையாளர் திருமதி சி. அகிலத்திருநாயகி அவர்கள் கௌரவ அதிதியாக பங்கேற்றார்.
அதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை (உயிரியல் பிரிவு) மாவட்ட மட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவி செல்வி மிஸ்ராஜ் நீடா பாத்திமா மற்றும் குமுழுமுனை மகா வித்தியாலய மாணவி செல்வி யஹரன் லாசன்ஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட செயலக அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதனுடன், வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திரு. பிரதீபன் மற்றும் யோகம்மா கலைக்கூட இயக்குநர் திரு. யோகேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
பெண்களின் தலைமைத்துவம், அர்ப்பணிப்பு, மனவலிமை, சமூகப் பங்களிப்பு மற்றும் சாதனைகளை கௌரவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்ட பெண்களின் பெருமையையும் சமூக முன்னேற்றத்தில் அவர்களின் முக்கிய பங்கையும் வெளிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.
இன்று விருது பெற்றோர் விவரம்
- ஆண்டின் சிறந்த பெண் தலைமைத்துவ விருது (Woman Leader of the Year Award)*
சமூக சேவைகளிலும் பெண்கள் முன்னேற்றத்திலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, மாதர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் வழியாக பெண்களை ஒருங்கிணைத்து சுயஉதவி குழுக்கள் உருவாக்கம், சேமிப்பு பழக்க வளர்ச்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான முயற்சிகளை முன்னெடுத்து, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி வரும்
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி சிறீதரன் இராஜேஸ்வரி அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஆண்டின் சிறந்த பெண் தலைமைத்துவத்திற்கான “அரியாத்தை விருது ” வழங்கி கௌரவிக்கப்பட்டது.. - ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது (Woman Entrepreneur of the Year Award)
நிறைந்த போட்டியும் சந்தைப்படுத்தல் சவால்களையும் தைரியமாக எதிர்கொண்டு தொழில் முயற்சியாண்மையில் வெற்றிப் பயணம் மேற்கொண்டு, தாயார் ஆரம்பித்த சுயதொழிலை தொடர்ந்து முன்னேற்றி தரமான உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை தனது பிரதான நோக்கமாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும்
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி ஜெனிபன் மேனகா அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோரிற்கான “அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.. - ஆண்டின் சிறந்த பெண் சமூக சேவகர் விருது (Woman Social Worker of the Year Award)
சமூக முன்னேற்றத்திற்கும் மகளிர் அதிகாரமளிப்பிற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சமூகத் தலைவராக பல்வேறு சமூக, மகளிர் மற்றும் கிராம அபிவிருத்தி அமைப்புகளில் நிர்வாக உறுப்பினர், தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றி சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பு செய்து சமூக சேவையில் முன்னுதாரணமாக விளங்கி வரும்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி சுந்தரலிங்கம் கலைச்செல்வி அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஆண்டின் சிறந்த பெண் சமூக சேவகரிற்கான “அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.. - ஆண்டின் சிறந்த பெண் மாற்றத்தை ஏற்படுத்துபவர் விருது (Woman Changemaker of the Year Award)
சவால்களை தாண்டி தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் வாழ்க்கையில் முன்னேறி, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகக் கருதப்படும் கட்டிடப் பொருட்கள் போக்குவரத்து தொழிலில் தன்னுடைய முயற்சியால் வெற்றி பெற்றதன் மூலம் பெண்களும் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ள
முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி டி.எம். ஸ்ரியானி விஜேலதா அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஆண்டின் சிறந்த பெண் மாற்றத்தை ஏற்படுத்துபவரிற்கான “அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.. - ஆண்டின் சிறந்த பெண் சாதனையாளர் விருது (Woman Achiever of the Year Award)
விளையாட்டுத் துறையில் பெண்களின் திறமையும் பங்களிப்பும் உயர்ந்து விளங்கும் வகையில் சர்வதேச ரீதியில் குத்துச்சண்டை (Boxing) விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று சிறப்பான சாதனை படைத்து நாட்டிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி பிரபாகரன் இந்துகா தேவி அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஆண்டின் சிறந்த பெண் சாதனையாளரிற்கான “அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.. - ஆண்டின் சிறந்த இளம் பெண் மாற்றத்தை ஏற்படுத்துபவர் விருது (Young Woman Changemaker of the Year Award)
இளம் வயதுடையவராக இருந்தாலும் பொதுவாக ஆண்கள் அதிகமாக ஈடுபடும் விவசாய இயந்திரங்களை திறம்பட இயக்கி சமூகத்தில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கி விவசாயத் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தன்னம்பிக்கையுடனும் உறுதியான உழைப்புடனும் செயல்பட்டு பெண்களும் எந்தத் துறையிலும் முன்னேற முடியும் என்பதை செயல்முறையாக நிரூபித்து வரும்
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி வசந்தகுமார் பபிஞ்சுதா அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஆண்டின் சிறந்த இளம் பெண் மாற்றத்தை ஏற்படுத்துபவரிற்கான “அரியாத்தை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது..
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்ட செயலகம்
முல்லைத்தீவு
