செய்தி:- நா.பார்த்தீபன்
யாழ்ப்பாணம், அராலி கிழக்கு – மலையாளங்காடு ஐயனார் ஆலய காணியில் அமைந்துள்ள கிணறு உட்பட அதனைச் சூழவுள்ள மேலும் சில கிணறுகளில், வழமைக்கு மாறாக நீர்மட்டம் திடீரென பெருமளவில் உயர்ந்துள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடும் கோடை வெயிலும் எல்நினோ வறட்சியும் நிலவி வரும் இக்காலகட்டத்தில், பொதுவாக நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் செல்லும் நிலையில், இங்குள்ள ஒரு கிணற்றில் நீர் தரைமட்டத்தைத் தாண்டி வெளிநோக்கி பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்கின்றது.
அத்துடன் அருகிலுள்ள மற்றொரு கிணற்றில் நீர்மட்டம் நில மட்டத்தை எட்டியுள்ளதுடன், மேலும் இரண்டு கிணறுகளிலும் நீர் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திடீர் மாற்றத்திற்கு மத்தியில், வழமையாக இருந்த நீரின் தன்மை மாறி தற்போது அது தெளிவான நன்னீராக மாறியுள்ளதாகவும், ஒரு கிணற்றின் நீர் மிதமான வெதுவெதுப்பான சூட்டுடன் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் ஆச்சரியத்துடன் குறிப்பிடுகின்றனர். கடும் வறட்சிக் காலத்தில் நிகழ்ந்துள்ள இந்த விசித்திர நிகழ்வை அப்பகுதி மக்கள் “ஐயனாரின் புதுமை” என பக்திப் பரவசத்துடன் நம்பி வழிபட்டு வருகின்றனர்.
இருப்பினும், மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மதிக்கும் அதேவேளை, இதன் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் புவியியல் காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியமாகின்றது.
நிலத்தடி நீர் ஓட்டத்தில் ஏற்பட்ட திடீர் இயக்கம், புவியியல் மாற்றங்கள் அல்லது நிலத்தடி நீர்மட்ட அழுத்தத்தில் ஏற்பட்ட அழுத்த மாறுபாடுகள் காரணமாக இந்த நீர் ஊற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
எனவே, சம்பந்தப்பட்ட துறைசார் புவியியல் மற்றும் நீரியல் நிபுணர்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்து, நீரின் வெப்பநிலை, உவர்ப்புத்தன்மை, pH மற்றும் EC அளவுகளை விரிவாக பரிசோதித்து உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது
