ஈராக்கில் ஈரான் ஆதரவு இலக்குகள் மீது அமெரிக்க, சவூதி படைகள் தாக்குதல் நடத்தின.
கிழக்கு ஈராக்கில் ஈரான் ஆதரவுப் போராளிகள் மீது சவூதி படைகளுடன் இணைந்து துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் சவூதி போர் விமானங்கள் பல ஆயுதக் கிடங்குகள் மற்றும் தளவாடத் தளங்களைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 72 மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான இந்தத் தாக்குதல்களை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இயக்கியதாக அமெரிக்க இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்கள் தோல்வியடைந்ததாக சென்ட்காம் தெரிவித்தது.
முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி நடத்தப்பட்ட ஈரானின் திடீர் தாக்குதல் முயற்சியை முறியடித்ததாக சென்ட்காம் தெரிவித்திருந்தது.
அனைத்து ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. சென்ட்காம் அவற்றின் இலக்கை அடையாளம் காட்டாத நிலையில், அவை ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் அவகாசம் அளிப்பதற்காக ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்திருந்தபோதிலும் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
