ரஷ்யா தொடர்ந்து மூன்றாவது நாளாக உக்ரைனிய நகரங்கள் மீது பெரும் அளவிலான ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவிள்ளுள்ளது. இதனைத் தொடர்ந்த சமீபத்திய தாக்குதல்கள், கீவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பைத் தாக்கியுள்ளன.
தொடர்ந்து மூன்றாவது நாளாக உக்ரைனிய நகரங்கள் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வியாழக்கிழமை காலை கீவ் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தக் கட்டிடம் கிட்டத்தட்ட முழுமையாக அழிந்துவிட்டதாகவும், 20 பேர் இன்னும் காணவில்லை என்றும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
ஒன்பது மாடிக் கட்டிடத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சர் இஹோர் கிளிமென்கோ ஆரம்பத்தில் தெரிவித்தார்.
உக்ரைன் முழுவதும் ரஷ்யத் தாக்குதல்களால் 180 கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், அவற்றில் 50 குடியிருப்புகள் அடுக்குமாடிக் கட்டிடங்கள் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார். உக்ரைனியத் தலைநகர் முழுவதும் நடந்த தாக்குதல்களில் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.
வடகிழக்கு நகரமான கார்கிவ் மீதான தாக்குதல்களில் 28 பேரும், கருங்கடல் துறைமுக நகரமான ஒடெசா மீதான தாக்குதல்களில் இரண்டு பேரும் காயமடைந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
புதன்கிழமை அதிகாலை முதல் ரஷ்யா 1,567 ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களில் குறைந்தது 22 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ் நகர மேயர் விட்டாலி கிளிச்கோ, வெள்ளிக்கிழமை அன்று தலைநகரில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.
