இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் காணிப் பிரச்சினைகள் அதிகளவில் தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கையில் வறுமையில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டமே காணப்படுகின்றது.
இந்நிலையில் காணிப் பிணக்குகள் எதுவுமற்ற 8,600 பேர் காணி ஆவணங்களைக் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் கிளிநொச்சி மாவட்ட செயலகமோ அதன் கீழுள்ள பிரதேசசெயலகங்களோ மாகாண காணி திணைக்களமோ முன்னெடுத்திருக்காமை தொடர்பில் தனது சீற்றத்தை ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல தொழில் முயற்சியாளர்கள் தமக்குரிய காணி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தால், வங்கிகளில் கடன்களைக் கூடப் பெற முடியாத நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் மக்களுக்குக் காணி உரித்துக்களை வழங்கும் ‘ஹிமிகம’ வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடனும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் அவையனைத்துமே வெறும் பெயர்களிலும் அதிகாரிகளிற்கு சுகபோக வாழ்க்கையை தருவதற்கும் மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
போர் காரணமாக காணி ஆவணங்கள் மாவட்டச் செயலகங்களிலும் இல்லை; மக்களிடமும் இல்லை. அதனால் மக்கள் காணிப் பிணக்குகளுடன் ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். நிலைமை இவ்வாறிருக்க, அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய நிலையில், சில அதிகாரிகள் பொறுப்பற்று மக்களின் காணிப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் வகையிலேயே செயற்படுகின்றனர். திங்கட்கிழமைகளில் அலுவலகங்களுக்குச் சென்றால்கூட, காணி தொடர்பான அதிகாரிகளைச் சந்தித்துப் பேச முடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் என்னிடம் நேரடியாகவே முறையிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் காணிகள் வழங்கல் மற்றும் பிணக்குகளைத் தீர்ப்பதில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டன. அதிகாரிகள் சுயாதீனமாகச் செயற்பட முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலைமை இல்லை.
அதிகாரிகள் சுயாதீனமாகவும், நீதியான முறையிலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமெனவும் வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலாளரும், மாகாண காணி ஆணையாளரும் பல முயற்சிகளை எடுப்பதாக சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். எனினும் கையலாகாத அவர்கள் கீழ் மட்டத்திலுள்ள அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என தப்பித்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
