சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
186 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு 36 ஆண்டுகளாகியும் நீதி இல்லை – சர்வதேச விசாரணை அவசியம்
மட்டக்களப்பு | 09.09.2026
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி இடம்பெற்ற கொடூரமான படுகொலையின் 36வது நினைவு தினம் இன்று மாலை 5.45 மணியளவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அருட்தந்தையர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.
ஒரே இரவில் 186 பொதுமக்கள் படுகொலை
1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி மற்றும் கொக்குவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 186 தமிழ் பொதுமக்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
படுகொலை செய்யப்பட்டவர்களில்,
- ஒரு வயதுக்குட்பட்ட 5 கைக்குழந்தைகள்
- பத்து வயதுக்குட்பட்ட 42 சிறுவர்கள்
- 9 கர்ப்பிணிப் பெண்கள்
- 68 வயதுக்கு மேற்பட்ட 28 முதியவர்கள்
உள்ளடங்குவதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் சத்துருக்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த 38 பேரும், பனிச்சையடியைச் சேர்ந்த 37 பேரும், பிள்ளையாரடியைச் சேர்ந்த 62 பேரும், கொக்குவிலைச் சேர்ந்த 47 பேரும் அடங்குகின்றனர்.
இந்த படுகொலையின் கொடூரத்தை நேரில் கண்ட சாட்சியான கந்தசாமி கிருஷ்ணகுமார், ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அளித்த சாட்சியில், ஒரு வயதுக்குட்பட்ட ஐந்து கைக்குழந்தைகள் கூட இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வீடுகளில் இருந்த மக்களை இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர்
1990 செப்டம்பர் 9ஆம் திகதி மாலை சுமார் 5 மணியளவில் கப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரிய தலைமையிலான இராணுவத்தினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், புளொட் மோகன் தலைமையிலான ஆயுதக்குழுவினரும் ஆயுதங்களுடன் குறித்த கிராமங்களை சுற்றிவளைத்ததாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ முகாமில் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி பொதுமக்கள் அனைவரும் முகாமுக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். நடக்க முடியாத வயோதிபர்களுக்குக் கூட வீடுகளில் தங்க அனுமதி மறுக்கப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு கிராமங்களையும் சேர்ந்த 186 பொதுமக்கள் சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண் இராணுவ முகாமுக்கு அருகிலிருந்த அரிசி ஆலை கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், பின்னர் குழுக்களாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகவும் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்கள் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், தலை மற்றம் கால்கள் வெட்டப்பட்டு குழிகளில் போடப்பட்டதாகவும், பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகவும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், சடலங்கள் மீது டயர்கள் போட்டு பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதாகவும் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
உயிர் தப்பிய கிருஷ்ணகுமார் – முக்கிய சாட்சி
—————————————-படுகொலையில் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பிய கந்தசாமி கிருஷ்ணகுமார், பின்னர் பொதுமக்களால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், அவரை இராணுவத்தினர் தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மட்டக்களப்பு பிரஜைகள் குழுவினரால் அவர் மீட்கப்பட்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரிடமிருந்து பிரஜைகள் குழுவினர் பதிவு செய்த வாக்குமூலமும் ஒலிப்பதிவும் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சான்றாக சமர்ப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை
1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் வடக்கு–கிழக்கில் இடம்பெற்ற காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதியரசர் கி. பாலகிட்ணர் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழு 1995 ஏப்ரல் 24 முதல் மே 2 வரை மட்டக்களப்பில் விசாரணைகளை நடத்தியது.
சத்துருக்கொண்டான் சம்பவம் தொடர்பாக கந்தசாமி கிருஷ்ணகுமார், ஆசிரியர் கந்தையா சிவக்கொழுந்து, மின்சாரசபை அத்தியட்சகராகப் பணியாற்றிய அந்தோனிப்பிள்ளை பிலிப் கிறிஸ்ரியன், மட்டக்களப்பு பிரஜைகள் குழுத் தலைவர் அருணகிரிநாதன் உள்ளிட்டோர் சாட்சியமளித்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட 72 பொதுமக்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.
145 பக்கங்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை 1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
குற்றச்சாட்டுக்குள்ளான இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரப்பட்டது
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பாக குற்றச்சாட்டுக்குள்ளான கப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியவையும் ஆணைக்குழு விசாரித்தது.
எனினும், சம்பவ தினத்தில் பொதுமக்கள் எவரும் இராணுவ முகாமுக்கு அழைத்துவரப்படவில்லை என்றும், அத்தகைய படுகொலை எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு, கப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரிய, கப்டன் ஹெரத் விஜயநாயக்க, கேணல் பெர்சி பெர்னாண்டோ உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளும், அவர்களுடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் புளொட் ஆயுதக்குழுவினரும் இந்தக் கொலைகளுடன் தொடர்புடையவர்கள் எனக் குறிப்பிட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், படுகொலை இடம்பெற்றதற்கான வலுவான சாட்சியங்கள் உள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்ததாக அறியப்படுகிறது.
36 ஆண்டுகளாகியும் நீதி இல்லை
ஆனால், 1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை மற்றும் அதில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், 36 ஆண்டுகள் கடந்தும் சத்துருக்கொண்டான் படுகொலையில் உயிரிழந்த 186 பொதுமக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.
போருடன் எந்தத் தொடர்பும் இல்லாத குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டமையானது இனச் சுத்திகரிப்பு நடைபெற்றுள்ளது என்பது வெளிப்படையாக உணரக்கூடியதாக உள்ளது.
சர்வதேச விசாரணை அவசியம்
சத்துருக்கொண்டான் படுகொலை என்பது தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சம்பவமாக பார்க்கப்பட முடியாது. 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலைகள், காணாமலாக்கல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களின் பின்னணியில் இதனையும் ஆராய வேண்டியுள்ளது.
உள்ளூர் விசாரணைகள் மூலம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டும், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டும், நீதி நிலைநாட்டப்படாத நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்த சர்வதேச சுயாதீன விசாரணை அவசியமாகிறது.
36 ஆண்டுகளாகியும் நீதிக்காக காத்திருக்கும் சத்துருக்கொண்டான் மக்களின் குரல் இனியும் புறக்கணிக்கப்படக்கூடாது.
தமிழ் அரசியல் தலைமைகளுக்கு
தமிழ் மக்களின் உரிமைகள், காணாமலாக்கப்பட்டோர் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக சர்வதேச அரங்குகளில் குரல் எழுப்புவதாகக் கூறும் தமிழ் அரசியல் தலைமைகள், சத்துருக்கொண்டான் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பாரிய படுகொலைகள் தொடர்பாகவும் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்.
அதேபோன்று, புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் வரலாற்று உண்மைகளை சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
எமது கோரிக்கைகள்
- சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை முழுமையாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
- ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- படுகொலையுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் சர்வதேச விசாரணை பொறிமுறையின் கீழ் கொண்டுவர வேண்டும்.
- உயிர் தப்பிய சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- சம்பவம் தொடர்பான அனைத்து அரச மற்றும் இராணுவ ஆவணங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
- சத்துருக்கொண்டான் உள்ளிட்ட கிழக்கில் இடம்பெற்ற பொதுமக்கள் படுகொலைகள் தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- உயிரிழந்த 186 பொதுமக்களையும் நினைவுகூரும் வகையில் அதிகாரபூர்வ நினைவிடம் அமைக்கப்பட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி, மற்றும் மீண்டும் இடம்பெறாததற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36 ஆண்டுகள் என்பது வெறுமனே ஒரு நினைவு நாள் அல்ல. அது நீதி இன்னும் கிடைக்கவில்லை என்பதற்கான சாட்சியாகும்.
186 உயிர்களின் உண்மையை வரலாற்றிலிருந்து அழிக்க முடியாது.
சாட்சிகளை மௌனப்படுத்த முடியாது.
நீதிக்கான கோரிக்கையை புதைக்க முடியாது.
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்.
