டெல்லி இன்று தொடங்கி நாளை வரை இரு தினங்களுக்கு 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷிய ஜனாதிபதி புதின், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பாரத் மண்டபத்தில் மாநாடு நடந்து வரும் சூழலில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்சி மாநாட்டை முன்னிட்டு, வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் செல்லும் முக்கியச் சாலைகளின் ஓரங்களில் இருந்த குடிசைப் பகுதிகள் பெரிய திரைகள் மற்றும் பதாகைகள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் வறுமை மற்றும் சமூக-பொருளாதார யதார்த்தங்களை வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து மறைப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இது போன்ற தற்காலிக மறைப்பு நடவடிக்கைகள் நகரின் உண்மையான உள்கட்டமைப்புச் சவால்களுக்குத் தீர்வு காணாது என்றும் விமர்சிக்கப்பட்டது.
இதனால், அப்பகுதி மக்களின் தினசரி நடமாட்டம் பாதிக்கப்பட்டது. சிறிய வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரமும் வருமானமும் குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
