சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமகாதேவி பூங்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, மக்களைத் தூண்டிவிடும், தவறாக வழிநடத்தும் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் பொய்யான கருத்துகளை பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஊடகங்களுக்கு வெளியிட்டதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (26) விடயங்களை முன்வைத்தபோதே பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.
பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தின் ஏற்பாட்டாளர் ஜகத் பஸ்நாயக்க, குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி, விகாரமகாதேவி பூங்காவிற்கு இரண்டு கத்திகளைக் கொண்டு வந்த இருவர் தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை மற்றும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியவை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கத்திகளைக் கொண்டு வந்த நபர்கள் அவற்றை பெலவத்தை தேசிய மக்கள் சக்தி கட்சி அலுவலகத்திலிருந்து பெற்றதாக கஸ்ஸப தேரர் தெரிவித்த கருத்து பொய்யானது என்றும், இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலைக்கப்படுவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொய்யான தகவல்களைப் பரப்புவது பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98ஆவது பிரிவை மீறும் செயலாக இருக்கக்கூடும் என்பதால், குறித்த கருத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த கருத்துகள் தொடர்பான திருத்தப்படாத காணொளிக் காட்சிகளைத் தமக்கு வழங்குமாறு தனியார் ஊடக நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், குறித்த கருத்துகள் தொடர்பான திருத்தப்படாத காணொளிக் காட்சிகளைப் பொலிஸாருக்கு வழங்குமாறு ஊடக நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விரைவாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
