இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் தங்காலையில் உள்ள கார்ல்டன்மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச ஆணைக்குழுவால் அழைப்பாணை விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதிலும், எந்தக் கடிதமும் ஒப்படைக்கப்படவில்லை.
கபில சந்திரசேனவின் மர்மமான மரணத்திற்கு 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டது.
2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆறு ஏர்பஸ் ஏ-330 ரக விமானங்களையும், எட்டு ஏ-350 ரக விமானங்களையும் வாங்கியபோது, அப்போதைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவும், அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்கவும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
விசாரணையின் போது, இந்த பரிவர்த்தனையில் தான் பெற்ற 2 மில்லியன் அமெரிக்க டொலரில், 20 மில்லியன் ரூபாயை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவிற்கும், 60 மில்லியன் ரூபாயை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் கொடுத்ததாக கபில சந்திரசேன தெரிவித்ததாக இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
