விரக்தி, வெறுப்பு, வேதனை என்று மனம் விரும்பாத உணர்வுகளை விதைத்துச் செல்கிறது காலம். என்னதான் மனத்தளவில் மரணத்தைப்பற்றி
நினைக்காமல் வாழ்வை நகர்த்திச்செல்ல முயன்றாலும் காலமானவர்களும்
காலமாகிக் கொண்டிருப்பவர்களும் மனக்கதவைத்தட்டி மரணத்தைப்பற்றி
அடிக்கடி நினைவூட்டிச் செல்கிறார்கள்.
மரணத்தோடு முற்றுப்புள்ளி இடப்பட்டுவிடும் ஒரு அர்த்தமற்ற வாழ்வுக்காகவா இத்தனை போராட்டங்கள் என்ற கேள்வி மேலெழுந்து பரிகாசம் பண்ணிச் சிரிக்கிறது.
அர்த்தமற்றதா வாழ்வு?
அவ்வாறெனில் இதுவரை காலமானவர்களோடு மனித வாழ்வும் முற்றுப் பெற்றிருக்க வேண்டுமே
ஆனால் இது ஒரு தொடர்கதையாகவல்லவா நீண்டு செல்கிறது?
ஆக மனிதவாழ்வு அர்த்தமற்றது என்பதில் அர்த்தமில்லை.
பிறப்புக்குப் பின் இறப்பு என்பதும் இறப்புக்குப் பின் பிறப்பு என்பதும் காலத்தின்நியதி.
இருந்தவர்கள் இல்லாமற்போனாலும் இருப்பவர்கள் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்.
இப்போது இருப்பவர்கள் இல்லாது போகும்போது இருப்பதற்கென்று வேறு பலர் வந்து சேர்ந்திருப்பார்கள்.
ஆக மரணம் என்பது தனி மனிதனுக்கானதே தவிர மனித இனத்துக்கானதல்ல.
மனித இனம் நிரந்தரமானது.
அதனால் மனித வாழ்வும் நிரந்தரமானதே.
மரணத்தை வாங்கிக்கொண்டு உடல் மறைத்துப்போனவர்கள் எல்லாம் இருப்பவர்கள் மனங்களில் நினைவுகளாய் நீங்காதிருக்கிறார்கள்.
வாழும் மனிதர்களின் மனங்களில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை
அவர்களுக்கு மரணம் இல்லை.
