குறிகாட்டியினூடாகத் தூரத்தை கணித்தாள் அகநிலா.
” அக்கா அறுநூறு மீற்றர் தூரம். “.
உறுதியாகச் சொன்னாள். அகநிலாவின் குறிகாட்டித் தூரக்கணிப்பு தப்பானதில்லை.
பூச்சியச் சரிபார்ப்பு செய்யப்பட்ட குறிகாட்டி, அவளது துப்பாக்கியில் இருந்தது. குறிகாட்டியை செப்பம் செய்வதில் அகநிலா கெட்டிக்காரி.
நெடுத்து வளர்ந்த மிடுக்கான தோற்றம். கட்டானதும் வலிமையையானதுமான தேகம் அகநிலாவுக்கு. நீண்டகால போர்ப்பயிற்சிகள் அவளுக்கு இந்த உடல் தோற்றத்தை கொடுத்திருக்க வேண்டும்.
அணிக்கு வந்த ஆரம்ப நாட்களில் அகநிலாவின் இந்த திறமையைச் சரிபார்க்கும் ஒவ்வொரு பொழுதும் வியப்புத்தான் இறுதியில் மிச்சமாகும். அவ்வளவு துல்லியமாகத் தூரத்தை கணித்துச் சொல்லுவாள்.
தன்னுடைய செயல்களில் உறுதிமிக்கவள். மிகத்தெளிந்த சிந்தனையோடு உறுதியான மனவலிமையோடு தான் அகநிலாவை எப்போதும் பார்க்கலாம். உடல்சோர்ந்தாலும் அவள் மனம் சோர்வதில்லை.
அகநிலாவின் பதிலைக் கொண்டு முன்னணிக்கு கனரக சுடுகலன்கள் இரண்டை நகர்த்தினாள் முகில்வாணி.
அணிக்கு வழங்கப்பட்ட பணியை செவ்வனவே செய்து முடிப்பதில் கெட்டிக்காரி முகில்வாணி.
பார்வையில் அகநிலாவைப் போல இருப்பாள் முகில்வாணி. கூடப்பிறந்த ஒத்த இரட்டையரோ என்று பார்ப்பவர்களுக்கு எண்ணத் தோன்னும்.
போராளிகளே சிலநேரங்களில் முகில்வாணியை அகநிலா என நினைத்த சந்தர்ப்பங்கள் பலதுண்டு.
இருவரையும் ஒருவரில் இருந்து மற்றொருவரை வேறுபடுத்திக் காட்டுவது அகநிலாவின் நிமிர்ந்த பார்வை நடையே.
முகில்வாணி கொஞ்சம் நெஞ்சுக்கூணல் உள்ளவள்.
அவளின் கடந்தகால தாக்குதல் விபரங்களை ஆராய்ந்த புலனாய்வுப்பிரிவினரின் தகவல்களைக் கொண்டே அவளுக்கு இந்தப்பணி வழங்கப்பட்டிருந்தது.
சீரான தரைத்தோற்றமற்ற அந்த முன்னரங்கில் பலத்த எதிர்ப்பை எதிர்பார்த்திருந்த தலைவர்; விசேட பிரிவு மகளிர் அணிப்போராளிகளையும் களமிறக்கியிருந்தார்.
பல கடுமையான சண்டைகளில் வெற்றிக்கு காரணமான அதிரடித்தாக்குதல்களைச் செய்து காட்டிய அணியாக முகில்வாணியின் அணி இருந்தது.
இந்த முகில்வாணியின் அணிக்கு ஒரு பகுதி முழுமையாக கொடுக்கப்பட்டு இருந்தது. இவ்வாறான தாக்குதல் பணிகள் அவளுக்குப் புதிதில்லை என்ற போதும் இம்முறை தலைவரே நேரடியாக அழைத்துப் பணிகளைக் கொடுத்திருந்தார்.
“அகநிலா”
துப்பாக்கியின் தொலைகாட்டியினூடாக முன்னரங்கை அவதானித்தவாறு இருந்த அகநிலா தன் பார்வையை விலக்காது ” சொல்லுங்கோ அக்கா. ” என்றாள்.
“மீண்டும் ஒருதடவை தூரத்தைச் சரிபாருங்கள். “
“ஓமக்கா”
மீண்டும் பலதடவை தன்னுடைய தூரக்கணிப்பை வெவ்வேறு இலக்குகளைப் பொருத்திக் கணித்தாள். தூரக்கணிப்பின் சராசரித்தூரம் மாறாமல் இருந்ததை உறுதி செய்து விட்டு ” அக்கா”
” ம்ம்ம் “
தன்னுடைய நடைபேசியில் இலக்கத்தை மாற்றி அலைவரிசையை மாற்றியவாறே முகில்வாணி குறியொலியைக் கொடுத்தால்.
” சராசரித்தூரத்திலும் மாற்றமில்லை அக்கா. “
” சூட்டெல்லையை ஏனைய போராளிகளுக்கும் விளக்கிச் சொல்லுங்கள் அகநிலா. “
கட்டளையின் தொனியில் உறுதி இருந்தது. இனி எத்தகைய மாற்றங்களும் இல்லை. தங்களின் நிலைகள் உறுதிசெய்யப்பட்டு விட்டதை அகநிலா புரிந்து கொண்டாள்.
விரைவாக ஒவ்வொரு காப்பரனாக நகர்ந்தாள். ஒவ்வொரு காப்பரனிலும் நான்கு போராளிகள் இருந்தனர்.
” ஒவ்வொருவரும் ஒரு சுட்டெல்லையை இலக்கு வையுங்கள். உங்களுடைய இலக்கை எதிரி நெருங்கியதும் நீங்கள் சுட ஆரம்பிக்க வேண்டும். அதுவரை அவதானிப்போடு இருங்கள். “
ஒரு காப்பரனிற்கு நான்கு சூட்டெல்லைகள்.
சராசரி தூரத்தை கொண்டு சுட்டெல்லை வீச்சைத் தீர்மானித்து கொடுத்திருந்தாள் அகநிலா. கூடவே ஒவ்வொரு போராளியினதும் சுடுகருவியின் குறிகாட்டியைச் சரிபார்த்தாள்.
அவசர நிலைமைகளின் போது நகர்வுகளுக்கு ஏற்ப எப்படி சூட்டெல்லைகளை மாற்ற வேண்டும் என்பதையும், அதிலுள்ள விரைவுச்செயற்பாடுகளையும் மீண்டும் நினைவூட்டிவிட்டாள்.
” போலிக்காப்பரனை விட்டு நகர்ந்து சண்டை செய்தாலும், இதே முறையினையே பின்பற்றுங்கள். உங்கள் நிலைகள் தான் மாறுமேயொழிய தாக்குதல் முறைகள் மாறாது. கவனமாக இருங்கள். “
எல்லா காவலரன் போராளிளுக்கும் அகிநிலாவின் விளக்கத்தின் சாரமாக இது இருந்தது.
இழப்பைக் குறைத்து எதிரிக்கு திகிலூட்டும் அதிரடித் தாக்குதலைக் கொடுப்பதற்கு இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தாள் அகநிலா.
விடுதலைப்போராட்டத்தில் இணைந்த காலத்தில் இருந்து முன்னரங்குச் சண்டைகளிலேயே நின்றிருந்தவளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பரிசோதித்து இறுதிப் போர் உத்திகளை பெறுவதில் சிரமமிருக்கவில்லை.
“இம்முறை தரப்பட்ட பணி முக்கியமானதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, எதிரியின் தாக்குதல் மிகப்பலமாகவும் கடுமையாகவும் இருக்கும் போல.” தனக்குள் எண்ணிக்கொண்டாள்.
தமக்கு வழங்கப்பட்ட காப்பரண்களில் ஒவ்வொன்றாக கடந்த அகநிலா இறுதிக் காவலரனுக்கு வந்தாள்.
” சுடர்விழி”
சட்டென சுடர்விழி மணிமொழியைப் பார்த்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை. அதிகாலைப்பொழுது. விடிவெள்ளி அடிவானில் மெல்லத் தெரிந்தது. பறவைகள் எவையும் இன்னமும் ஒலியெழுப்பத் தொடங்கவில்லை.
நிசப்தமான மழைக்கால இருட்டு. காப்பரன் பொறுப்பாளராக சுடர்மொழியே இருந்தாள்.
மணிமொழியின் குரல் இடைவிட்டு மீண்டும் ஒலித்தது.
” அகநிலாக்கா வாறா”
அப்போது சூட்டுத்தூவாரத்தினூடாக எதிரியின் நிலைகளை அவதானித்தாவாறு இருந்தாள் சுடர்விழி.
” மணிமொழி நீ இஞ்ச வா” சொல்வியவாறே அகநிலாவை எதிர்கொள்ள சுடர்விழி காப்பரன் வாயிலை அடைந்தாள்.
அதற்குள்ளாகவே சுடர்விழியின் காவலரன் நிலையில் மேல்நிலை காப்பாளரான அன்பரசி அகநிலாவைக் கண்டுவிட்டாள்.
“அகநிலாக்கா” மெதுவாக கூப்பிட்டால் அன்பரசி.
மிகுந்த விழிப்போடு அகநிலாவும் அவளுடன் வந்த மிதுசாவும் அன்பரசியின் நிலையை முன்னரே கண்டுவிட்டதால், அழைப்புக்கு விரைவான பதிலளிப்பை மௌனமாகவே கொடுத்தனர்.
” சுர்விழியக்கா பதுங்குகுழிக்குள் இருக்கிறா”
“ம்ம்”
அகநிலா தாவி பதுங்குகுழி வாசலுக்குள் குதித்தாள். மிதுசா அன்பரசியோடு மேல் காவல்நிலையிலேயே நின்றுகொண்டாள்.
சுடர்விழியின் அணியினருக்கு முன்னரங்க நிலைகளையும் புதிய தாக்குதல் உத்திகளையும் மீண்டுமொருமுறை விளக்கிவிட்டு, முகில்வாணியிடம் செல்ல, காவலரணை விட்டு வெளியே வந்தாள் அகநிலா.
” அகநிலா”
தன்னைக் கூப்பிடும் ஆண் குரலை கேட்டு நின்றாள். கூப்பிட்ட திசையில் பார்த்தாள்.
குரலின் பண்பை புரிந்துகொண்டவளாக
” ராகவன் அண்ணாவா” குரல் கொடுத்தாள்.
பதிலுக்கு ” ஓம் அகநிலா”
முன்னரங்கில் மிகச்சரியான தொடர்பாடலே அனைவரினதும் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்பதில் போராளிகள் எல்லோரும் புரிந்துணர்வோடு இருந்தனர்.
அடுத்த காவலரனில் இருந்து ஆண் போராளிகளின் காப்பரன் நிலைகள் தொடங்குகின்றன. அதன் பகுதிப் பொறுப்பாளராக ராகவன் இருந்தான்.
முன்னர் பல சண்டைகளில் ராகவனின் கட்டளைக்கு கீழ் நின்று அவரின் கூட்டணிகளில் ஒருவராய் இருந்து சண்டையிட்டவள் அகநிலா.
இப்போது விசேட அணிக்கு அகநிலா மாற்றப்பட்டிருந்தாள்.
” சராசரிச் சூட்டுத்தூரம் என்ன? “
“அறுநூறு மீற்றர். “
“அப்ப முன்னுக்கும் ஆக்களை அனுப்ப வேண்டும். உங்கட பக்கம் எப்பிடி”
“முன்னுக்கும் பின்னுக்கும் விட்டிருக்கிறம். முகில்வாணியக்கா தான் இந்த நிரையைப் பாக்கிறா” என்றாள் அகநிலா.
முகில்வாணியை ராகவனுக்கு நன்றாகவே தெரியும்.
” தேவையென்றாள் எங்களையும் கூப்பிடுங்கோ” ராகவன் சொல்லிவிட்டு திரும்பினான்.
” நீங்களும் தான் தேவையென்றால் கூப்பிடுங்கோ நாங்களும் வருவம். “
தங்கள் தயார்ப்படுத்தல்களில் இருந்த நம்பிக்கையில் அகநிலாவும் பதிலுக்குச் சொல்லிவிட்டு விரைந்தாள்.
முன்னரங்கின் அமைதியை கெடுத்தாற்போல் விமானங்கள் தாழப்பறந்தன. உலங்கு வானூர்திகள் இரண்டு எதிர் எதிர் திசைகளில் இருந்து தாழப்பறந்தன.
முகில்வாணியின் ஒரு நடைபேசி அலறியது. ” முன்னால இரண்டு கூட்டுங்கோ. ” முகில்வாணி தன் மற்றைய நடைபேசியின் அலைவரிசை இலக்கங்களில் முன்பக்க இலக்கங்கறில் மாற்றத்தை ஏற்படுத்தினாள். பின்னணியில் இருந்து வரும் கட்டளைகளை அந்த புதிய அலைவரிசையில் பெற்றுக்கொள்ள திட்டமிட்டவள், தன் அணியினருக்கு “
பின்னால் ஒன்றை குறையுங்கள்” என்றாள். தன் கட்டளைகளை வழங்குவதற்கு மற்றொரு நடைபேசியை பயன்படுத்தினாள்.
அதிரடித்தாக்குதல் திட்டங்களை திட்டமிடும் போது முகில்வாணியின் இயல்பாக இந்த நடைமுறை இருந்தது.
தாழப்பறந்த உலங்குவானூர்த்திகள் முகில்வாணியின் நிலைகளை நோக்கி சுடத்தொடங்கின. மிகக்கடுமையான தாக்குதலாக அது இருந்தது. ஆனாலும் அந்த தாக்குதலை முன்னேரே எதிர்பார்த்து இருந்ததால், அதற்கு ஏற்றால் போல், போராளிகளை நிலைப்படுத்தியிருந்தாள் முகில்வாணி.
முகில்வாணியின் அணியினரின் நிலைகளை இலக்கு வைத்து ஏறிகணைகள் வந்து விழத்தொடங்கின.
“முன் பின்னாக நகருங்கள். உடனே நிலையெடுங்கள். நான் சொல்லும் வரை சுட வேண்டாம். “
முகில்வாணி தன்னுடைய போராளிகளை போலிக்காப்பரன்களில் இருந்து வெளியே நகர்த்தினாள். முன்பின்னாக உருமறைத்து அமைக்கப்பட்ட நிலக்கீழ் காப்பரன்களுக்கு சென்று நிலையெடுக்க கட்டளையிட்டாள்.
” அகநிலா. அணியினரின் புதியநிலைகளை ஒருக்கா சரி பாருங்கள்.”
” ஓமக்கா”
அகநிலாவின் நடைபேசி, ஒவ்வொரு காப்பரன் அணியினரின் நடைபேசிகளையும் புதிய அலைவரிசையில் ஒலியெழுப்ப வைத்தது.
“நிலையேடுத்தாச்சா? தாக்குதலுக்கு தயாராகுங்கள்.”
ஒவ்வொரு நடைபேசியும் “ஓம்” என்பதோடு மூச்சடங்கின.
முகில்வாணியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைகளுக்கும் பின்னணித் தளங்களுக்கும் உள்ள தொடர்பை துண்டிக்கும் வகையில் விமானத்தாக்குதல்கள் உக்கிரம் பெறத்தொடங்கின.
முன்னரங்கின் அமைதியின்மையை அவதானித்தவாறு அமைதியாக முகில்வாணியின் கட்டளைக்காக எதிர்பார்த்து ஒவ்வொரு காவலரன் போராளிகளும் காத்திருந்தனர்.
எதிரியின் துப்பாக்கிச்சூடுகள் இனி ஆரம்பமாகலாம் என்று எதிர்பார்த்த முகில்வாணி, எதிரியின் நிலைகளுக்கு ஏறிகணைச் சுட்டாதரவைக் கேட்டாள்.
துல்லியமான ஏறிகணைச் சூட்டாதரவை அடுத்து முன்னகர்ந்த எதிரியினரை துல்லியமான வேட்டுக்களால் வீழ்த்தினார்கள்.
வெவ்வேறு சூட்டெல்லை நகர்வு முறையில் சண்டை நடந்தது. பார்த்தால் அது பதுங்கிச்சுடும் அணியினரின் தாக்குதல் போல் இருந்தது.
மிகத்துல்லியமான சூட்டை எதிர்பார்க்காத எதிரிக்கு, உயிரிழப்பு அதிகமாகிக்கொண்டு போகத் தொடங்கியது.
முகில்வாணியின் பக்கமாகவே எதிரி உடைப்பெடுத்து, உள் நுழைய முயற்சித்தான். இது முன்பே எதிர்பார்க்கப்பட்டது என்பதால், எதிரியின் எண்ணிக்கையை குறைப்பதிலும் கனரக வாகனங்களை சிதைப்பதிலும் முகில்வாணி ஆர்வம் காட்டினாள்.
அதற்கேற்றால் போல் கட்டளைகளை பிறப்பித்தாள்.
முப்பது நிமிட சண்டையில் எதிரியின் காப்பரண்கள் முகில்வாணியின் அணியினரின் கைகளில் விழுந்தது.
” அகநிலா”
புதியகட்டளைகளை வழங்குதவற்காக நடைபேசியில் அகநிலாவை கூப்பிட்டாள் முகில்வாணி.
அகநிலாவின் கைபிடியில் இருந்து நழுவாத அவளது நடைபேசி முகில்வாணியின் குரலில் ” அகநிலா”
என ஒலியெழுப்பியது.
விழிகளை மூடியபடி அகநிலா மண்ணில் சாய்ந்து கிடந்தாள். நெஞ்சில் குண்டு பாய்ந்ததால் குருதி மண்ணில் பரவி, ஈரம்காயாது கிடந்தது.
” அகநிலா”
“அகநிலா”மீண்டும் மீண்டும் முகில்வாணி அகநிலாவை அழைத்தபடி இருந்தாள்.
……… அன்புடன் நதுநசி.
