வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், அவற்றை ஒன்றாக எதிர்கொண்டு வாழ்வதுதான் திருமண வாழ்க்கையின் அடிப்படை என்ற நம்பிக்கை நம்மிடம் இருந்தது.
ஆனால் இன்று நம்மைச் சுற்றிப் பார்க்கும்போது, பல குடும்பங்களில் கணவன், மனைவிக்கிடையிலான உறவுகள் விரிசலடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
திருமணமாகி சில ஆண்டுகளிலேயே பிரிந்து செல்லும் இளம் தம்பதிகள், இருபது முப்பது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின்னர் பிரிவைத் தேடும் நடுத்தர வயதினர், பிள்ளைகள் வளர்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர் தனித்தனியாக வாழ முடிவெடுக்கும் முதிய தம்பதிகள் என இந்தப் பிரச்சினை எல்லா வயதினரிடமும் காணப்படுகிறது.
எமது பண்பாட்டின் அடிப்படையான உறவில் விரிசல்கள் ஏற்படுவதற்கு காரணம் என்ன ? நாம் பெரிதும் மதித்த திருமண உறவுகளில் இன்று என்ன நடக்கிறது? காதல் குறைந்துவிட்டதா? விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மறைந்துவிட்டதா? அல்லது நாம் வாழும் வாழ்க்கை முறையே நமது உறவுகளைச் சிதைத்துக் கொண்டிருக்கிறதா?
இதற்கான பதிலை ஒரே காரணத்திற்குள் அடக்கிவிட முடியாது.
இந்த அவசர உலகில் பலர் “ஒன்றாக” வாழ்கின்றார்கள் ஆனால் அவர்கள் உண்மையில் “ஒன்றாகத்” தான் இருக்கின்றார்களா?
புலம்பெயர் வாழ்க்கை நமக்குப் பல வாய்ப்புகளைத் தந்திருக்கிறது.
அதேவேளை, நாம் எதிர்பார்க்காத பல சுமைகளையும் நம்மீது ஏற்றியிருக்கிறது.
கனடாவில் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு இன்று கணவன், மனைவி இருவரும் உழைக்க வேண்டிய கட்டாயம் பல குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
வீட்டுக் கடன், வாகனக் கடன், பிள்ளைகளின் கல்வி, அன்றாடச் செலவுகள், பெற்றோருக்கான உதவிகள் என ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய பொருளாதாரப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
காலையில் வேலைக்குச் செல்லும் இருவரும் மாலையில் வீடு திரும்பும்போது உடலாலும் மனதாலும் சோர்ந்து போயிருக்கிறார்கள்.
ஒருவருடன் ஒருவர் அமர்ந்து பேசுவதற்குக்கூட நேரமில்லாத வாழ்க்கை.
ஆரம்பத்தில் இருவரும் குடும்பத்திற்காக உழைக்கிறார்கள்.
காலப்போக்கில் அந்த உழைப்பே இருவரையும் ஒருவரிடமிருந்து ஒருவர் விலக்கிவிடுகிறது.
சில குடும்பங்களில் பொருளாதாரச் சுமை அதிகரிக்கும்போது, தன்னால் தனது துணைக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்க முடியவில்லையே என்ற குற்றவுணர்வும் உருவாகிறது.
என்னால் அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுக்க முடியவில்லை. என்னுடன் இருந்து அவர் ஏன் கஷ்டப்பட வேண்டும்?என்ற எண்ணத்தில்கூட சிலர் பிரிவைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆனால் இங்கே நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது.
கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட உறவில், கஷ்டம் வந்தவுடன் பிரிந்து செல்வதுதான் தீர்வா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்
அதேநேரம், எல்லாப் பிரிவுகளும் அவசரமாக எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல.
சிலர் நீண்டகாலமாகத் தாங்கிக்கொண்டிருந்த மனவேதனைகளிலிருந்தும், மரியாதையற்ற உறவுகளிலிருந்தும் வெளியேறுகிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது சமூகத்தில் குடும்ப உறவுகளைப் பாதிக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று ஒப்பீடு Comparison .
அவர்களிடம் பெரிய வீடு இருக்கிறது, இவர்கள் புதிய வாகனம் வாங்கியிருக்கிறார்கள், அந்தக் குடும்பம் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்கிறது,அவருடைய மனைவி எவ்வளவு அழகாக உடையணிகிறார்,அந்தக் கணவர் தனது மனைவிக்கு எவ்வளவு விலையுயர்ந்த பரிசுகளை வாங்கிக் கொடுக்கிறார்….
இப்படியான தொடர் ஒப்பீடுகள் பல குடும்பங்களில் சாதாரண உரையாடல்களாக ஆரம்பித்து, பின்னர் உறவுச்சிக்கல்களாக மாற்றம் பெற்று விடுகின்றன
முன்பெல்லாம் நமது ஒப்பீடுகள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இன்று சமூக ஊடகங்கள் உலகம் முழுவதையும் நமது வீட்டிற்குள் கொண்டு வந்து வவிட்டுள்ளன
Facebook, Instagram, TikTok போன்ற தளங்களில் நாம் பார்ப்பது பெரும்பாலும் மற்றவர்களின் வாழ்க்கையின் அழகான தருணங்களை மட்டுமே.
அவர்கள் சுற்றுலா செல்லும்போது எடுத்த புகைப்படங்களைப் பார்க்கிறோம், புதிய வீட்டின் முன்பாக நின்று எடுத்த படங்களைப் பார்க்கிறோம், பிறந்த நாள் திருமண நாள் கொண்டாட்டங்களையும் விலையுயர்ந்த உணவகங்களில் எடுத்த புகைப்படங்களையும் பார்க்கிறோம்.
ஆனால் அந்த வீட்டிற்குள் உண்மையில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது.
அந்த வீட்டின் கடன் எவ்வளவு? கணவன், மனைவிக்கிடையில் எவ்வாறான மாதிரியான உறவு நிலை இருக்கின்றது ? அவர்கள் எத்தனை இரவுகள் தூக்கமின்றித் தவித்திருக்கிறார்கள்? இது எதுவுமே நமக்குத் தெரியாது.
அவர்களின் இருளான பக்கங்களை நாம் பார்க்க முடியாது ஆனால் அவர்கள் தேடும் புகழ் வெளிச்சத்தில் அவர்களின் வாழ்க்கையின் தெளிவற்ற ஒரு பக்கத்தைப் பார்த்து விட்டு அவர்கள் போல் நமக்கு வாழ்கை வாய்கவில்லேயே என்று அழுது புலம்பி எமக்கு கிடைத்துள்ள அழகான வாழ்கையினையும் தொலைத்துவிட முனைகின்றோம்.
மற்றவர்களின் வாழ்க்கையில் அவர்கள் வெளியே காட்டும் அழகான சில நிமிடங்களை, நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுடனும் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
அந்த ஒப்பீடுதான் பல நேரங்களில் நமது வீட்டின் நிம்மதியை தொலைத்து விடுகின்றது.
நம்மிடம் இருப்பவற்றின் பெறுமதியை உணராமல், மற்றவர்களிடம் இருப்பதாக நாம் நினைப்பவற்றுக்காக ஏங்க ஆரம்பிக்கிறோம்.
அந்த ஏக்கம் எதிர்பார்ப்பாகவும், எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவும், ஏமாற்றம் குற்றச்சாட்டாகவும் மாறும்போது உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது.
இன்றைய உலகம் வேகமாக இயங்குகிறது.
உடனடியாகப் பணம் சம்பாதிக்க வேண்டும்.
விரைவாக வீடு வாங்க வேண்டும். குறுகிய காலத்திற்குள் செல்வந்தராக வேண்டும்.
மற்றவர்களைவிட முன்னேற வேண்டும்.
இது தான இன்று பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஒரே இரவில் எல்லாம் தீர்ந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புத் தான் இன்றை பல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைகின்றது
வெற்றிபெற்றவர்களின் கதைகள் சமூக ஊடகங்களில் நிறைந்திருக்கின்றன.
ஆனால் அந்த வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் தோல்விகளையும் தியாகங்களையும் நாம் பெரும்பாலும் பார்ப்பதில்லை.
வாழ்க்கையின் எல்லா வெற்றிகளையும் உடனடியாக அடைய விரும்பும் மனநிலை, சில நேரங்களில் குடும்ப உறவுகளிலும் பிரதிபலிக்கிறது.
திருமண வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வந்தால் அதைப் பேசித் தீர்ப்பதற்கான பொறுமை குறைகிறது.
ஒருவரின் குறைகளை மற்றவர் புரிந்துகொள்வதற்கான முயற்சி குறைகிறது.
ஒரு கருத்து முரண்பாடு ஏற்பட்டால் யார் சரி, யார் தவறு என்பதை நிரூபிப்பதிலேயே இருவரும் கவனம் செலுத்துகிறார்கள்.
ஆனால் ஒரு திருமண உறவில் ஒவ்வொரு கருத்து முரண்பாட்டிலும் ஒருவர் வெற்றி பெற்று மற்றவர் தோல்வியடைய வேண்டிய அவசியமில்லை.
சில நேரங்களில் கருத்து முரண்பாட்டில் தோற்றாலும் உறவைக் காப்பாற்றுவதுதான் உண்மையான வெற்றி என்பதை ஏனோ நாம் புரிந்து கொள்ள தவறிவிடுகின்றோம்
அதற்காக ஒருவர் தொடர்ந்து அவமானங்களையும் அநீதிகளையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல.
இருவரும் ஒருவரையொருவர் மதித்து, தவறுகளை ஏற்றுக்கொண்டு, மாற்றங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.
குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி நம்பிக்கையானவர்களுடன் பேசுவது இயல்பானது.
சில நேரங்களில் அது அவசியமானதும்கூட.
ஆனால் நாம் யாரிடம் ஆலோசனை கேட்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது.
தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் அடிப்படையில், எல்லா திருமண உறவுகளையும் ஒரே மாதிரியாகப் பார்க்கும் சிலரும் இருக்கிறார்கள்.
தாங்கள் பிரிந்து வாழ்வதில் நிம்மதியைக் கண்டவர்கள், அதே முடிவு மற்றவர்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கக்கூடும்.
அதேபோன்று சில நண்பர்களும் உறவினர்களும் பிரச்சினையின் ஒரு பக்கத்தை மட்டுமே கேட்டுவிட்டு முடிவுகளை வழங்குகிறார்கள்.
‘உனக்கு ஏன் இந்தக் கஷ்டம்?’
‘நீ ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?’
‘தனியாக வாழ்ந்தால் நிம்மதியாக இருக்கலாம்!’
இப்படியான ஆலோசனைகள் சில சூழ்நிலைகளில் பொருத்தமானவையாக இருக்கலாம்.
ஆனால் எல்லா குடும்பப் பிரச்சினைகளுக்கும் அவையே தீர்வாகிவிட முடியாது.
ஒரு வீட்டிற்குள் பல ஆண்டுகளாக உருவான உறவையும் அதன் சிக்கல்களையும் சில நிமிட உரையாடல்களின் அடிப்படையில் மற்றவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
அதேநேரம், குடும்பத்தின் கௌரவத்திற்காகவே திருமணத்தைத் தொடர வேண்டும் என்று வற்புறுத்தும் ஆலோசனைகளும் ஆபத்தானவை.
குறிப்பாக வன்முறை, அச்சுறுத்தல், கட்டுப்படுத்துதல் அல்லது தொடர்ச்சியான மனரீதியான துன்புறுத்தல் உள்ள உறவுகளில் பாதுகாப்பே முதன்மையானது.
நண்பர்களும் உறவினர்களும் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டலாம். ஆனால் அவர்கள் நமது வாழ்க்கையை நமக்குப் பதிலாக வாழப்போவதில்லை.
நமது முன்னைய தலைமுறையினர் பலர் திருமண உறவுகளைப் பாதுகாத்தார்கள் என்பது உண்மை.
ஆனால் அவர்கள் வாழ்ந்த எல்லா திருமணங்களும் மகிழ்ச்சியானவை என்று நாம் கூறிவிட முடியாது.
சமூக அழுத்தம், பொருளாதாரச் சார்பு, பிள்ளைகளின் எதிர்காலம், குடும்ப கௌரவம் போன்ற காரணங்களுக்காகப் பலர் தங்களது துயரங்களை வெளிப்படுத்தாமல் வாழ்ந்திருக்கலாம்.
எனவே கடந்த காலத்தை முழுமையான முன்மாதிரியாகக் கொண்டாடுவதும், இன்றைய தலைமுறையை முழுமையாகக் குறை கூறுவதும் சரியான அணுகுமுறையாக இருக்காது.
திருமணம் என்பது ஒருவரின் சுதந்திரத்தை மற்றவர் பறித்துக்கொள்வதற்கான உறவல்ல.
அது இருவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டிய உறவு.
அன்பு மட்டுமே ஒரு திருமணத்தை நீண்டகாலம் தாங்கி நிறுத்துவதில்லை.
பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, நேர்மையான உரையாடல், பொருளாதாரப் பொறுப்புணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்றவை நல்ல உறவின் அடிப்படைகள்
குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகும்போது அவற்றைப் பேச வேண்டும். தேவைப்பட்டால் தகுதியான குடும்ப ஆலோசகரின் உதவியை நாட வேண்டும்.
பிரச்சினைகள் பெரிதாகும் வரை காத்திருக்காமல், ஆரம்பத்திலேயே அவற்றைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
நாம் அனைவரும்
சமூகத்தில் எமக்கு உயர்வான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அதற்காகப் பெரிய வீடுகளை வாங்குகிறோம். விலையுயர்ந்த வாகனங்களை வாங்குகிறோம்.
நாம் ஓடி ஓடி உழைத்துத் தேடிக் கொள்ளும் சமூக அங்கீகாரம் அல்லது அந்தஸ்த்து Prestige எமது வாழ்க்கையை அதற்கான விலையாக எடுத்துக் கொள்ளவதை நாம் கணாத் தவறிவிடுகின்றோம்.
நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
அவர்களின் கல்விக்காக உழைக்கிறோம், அவர்களுக்காகச் சேமிக்கிறோம்.
ஆனால் அந்தப் பிள்ளைகள் வளருகின்ற வீட்டில் அன்பும் நிம்மதியும் பரஸ்பர மரியாதையும் இருக்கிறதா என்பதை பற்றி எத்தனை பேர் சிந்திக்கிறோம்?
ஒரு குடும்பத்தின் வெற்றியை அதன் வீட்டின் அளவோ, வாகனத்தின் பெறுமதியோ, வங்கிக் கணக்கில் இருக்கும் பணமோ தீர்மானிப்பதில்லை.
அந்த வீட்டிற்குள் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் எவ்வளவு புரிந்துகொள்கிறார்கள் என்பதுதான் அதன் உண்மையான அளவுகோல்.
நாம் வாழ்க்கையை வசதியாக்குவதற்காக உழைக்க ஆரம்பித்தோம்.
ஆனால் இன்று அந்த வசதிகளைத் தேடும் பயணத்தில் வாழ்க்கையையே தொலைத்துக் கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் மேலெழுந்து வருகின்றது.
பொருளாதார நெருக்கடி எம்மை அழித்துக் கொண்டிருக்கும் போதும் வீட்டை விற்று விட்டால் எமது கௌரவம் என்னவாகும் … மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலையில் வாழ்வதற்காக வாங்கிய வீட்டை தக்க வைப்பதற்காக தமது வாழ்கையினை விற்றுக் கொண்டிருக்கின்ற நிலை தோன்றியிருக்கின்றது.
நமக்காக வாழமால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற அச்சத்தில் வாழ்வதால் எம்மைச் சுற்றியிருக்கின்ற அழகான விடயங்களையும் நல்ல உறவுகளையும் நாம் மறந்து தொலைக்கின்றோம்.
நம்மைவிட வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து ஏங்குவதற்கு முன்னால், நம்முடன் வாழ்பவரின் மனதை ஒருமுறை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
ஏனெனில், வாழ்க்கையின் இறுதியில் நமக்குத் தேவைப்படுவது நாம் வாங்கிய பொருட்களின் பட்டியல் அல்ல.
நமது மகிழ்ச்சியிலும் துயரத்திலும் நம்மைப் புரிந்துகொண்டு, நம்முடன் பயணிக்க விரும்பும் ஓர் அன்பான மனிதரின் துணைதான்.
வீடுகளைக் கட்டுவதில் காட்டும் அக்கறையில் ஒரு சிறு பகுதியையாவது உறவுகளைக் கட்டியெழுப்புவதிலும் காட்டுவோம்.
உங்கள் பார்வையில், இன்று நமது சமூகத்தில் திருமண உறவுகள் சிதைவதற்கான முக்கியமான காரணம் எது?
பொருளாதாரச் சுமையா ?
ஒப்பீடுகளா ?
பொறுமையின்மையா ?
அல்லது நாம் பேசத் தவறுகின்ற வேறு ஏதாவது காரணமா?
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்..
