யாழ்ப்பாணம் காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ளது
ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது.
Tourist Destinations
கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டது
அதன் போது காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் மேம்பால கட்டுமானத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது.
காரைநகர் மற்றும் ஊர்காவற்துறைக்கு இடையில் தற்போது கடல்பாதை சேவையில் ஈடுபட்டு வருகிறது. அது பல தடவைகள் பழுதடைவதனால் , இரு தீவுகளுக்கும் இடையில் பயணிப்போர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக காரைநகர் பகுதிக்கான பொலிஸ் நிலையம் மற்றும் நீதிமன்றம் ஆகியவை ஊர்காவற்துறையில் காணப்படுகிறது.
அத்துடன் காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை இடையில் அரச உத்தியோகஸ்தர்களும் பயணித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கடல் பாதை பழுதடைந்து சேவையில் ஈடுபடாது விடின் சுமார் 60 கிலோ மீற்றர் தூரம் சுற்றியே வீதி வழியாக பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
இதனால் காரைநகர் – ஊர்காவற்துறை இடையில் மேம்பாலம் கட்டி போக்குவரத்தை இலகு படுத்துமாறு நீண்ட காலமாக இரு பிரதேச மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இவ்வாறான நிலையில் இரு தீவுகளுக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ள நிலையில் , அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் துரித கெதியில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், எழுவைதீவு இறங்குதுறையை ஆழப்படுத்துவது, கடற்படை வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது, எழுவைதீவு மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
