ஜேர்மனியில் இசை மழையில் தோய்ந்த ரசிகப்பெருமக்கள்!..
வெள்ளிவிழா கண்ட ஸப்தஸ்வர இசைக்கலாலயம்!..
இசைக் கமைணி திருமதி மீரா நித்தியானந்தன்!..
நீணட காலங்களின் பின்பு மாபெரும் இசைக் கலைமாலை வெள்ளிவிழா நிகழ்வு 10.10.2026 சனிக்கிழமை யேர்மனி – எசன் நகரில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. யேர்மனியில் நீண்டகாலம் வசித்து வருபவரும் யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீத்தில் பட்டம் பெற்றவரும், இசைக் கலைமணி, சங்கீதகலா வித்தகர், சங்கீத ஆன்மீக இசைவாணி, வானம்பாடி, கலைச் செம்மல் என்னும் பட்டங்களைப் பெற்றவருமான திருமதி மீரா நித்தியானந்தன் அவர்களால் கடந்த 25 ஆண்டுகளாக யேர்மனியில் இயங்கிவரும்’ஸப்தஸ்வர’ இசைக்கல்லூரியின் (25) வெள்ளிவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சங்கீதம், வயலின், பாடல் இசைகளை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இக்கல்லூரியில் பயின்றுவரும் சிறுவர்கள், இளையோர்கள் சுமார் இருநூற்றுக்கும் அதிகமான மாணவமணிகள் இந்த நிகழ்வில் பலதரப்பட்ட இசைகளை வெளிப்படுத்திச் சபையோரின் பாராட்டைப் பெற்றனர். பாடல், சங்கீதம், விணைஇசை, வயலின் இசை, மிருதங்கம், நட்டு வாங்கம், நாதஸ்வரம் எனப் பல இசைக்கருவிகளையும் மீட்டுச் சபையோரை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தனர் என்றே கூறலாம்.
அழகான பெரிய மண்டபம் சுமார் நாநூறுபேர்வரை கூடியிருந்து இந்த நிகழ்வைக் கண்டுகளித்தனர். மேடை அலங்காரம், ஒலி, ஒளி அமைப்புகள் சிறப்பு. மாணவ மணிகளின் ஒவ்வொரு நிகழ்வும் காதுக்கினிய, கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தன. மாணவ மணிகளின் நேர்த்தியான உடை அலங்காரம், ஒப்பனை, மிக அழகு. அவர்களால் நிகழ்த்தப்பட்ட அத்தனை இசை நிகழ்வுகளும் அற்புதப் படைப்புகள். யேர்மனியில் இவ்வளவு திறமையான ஆசிரியரும் மாணவமணிகளும் இருக்கிறார்களா? என வியந்து, மகிழ்ந்து பலர் பாராட்டியதை கேட்கக்கூடியதாக இருந்தது.
இந்த ஆசிரியரால் பயிற்றப்பட்டு டிப்ளோமா பட்டங்களைப் பெற்ற பல மாணவமணிகளின் இசை நிகழ்ச்சிகள் மிக நேர்த்தியாகவும் ரசனைமிக்கதாகவும் அமைந்திருந்தன. இதன்மூலம் புலம்பெயர் நாடுகளில் தமிழும் தமிழ் இசைகளும் நாடகமும் வளர்ந்து வருவதை நாம் நம்பிக்கைகொண்டு பாராட்டலாம்.
மாணவமணிகளின் பாடல், சங்கீதம், வயலின், விணை, மிருதங்கம், நாதஸ்வரம் போன்ற பல்வேறு இசைக்கருவிகளுடன் குழுக்குழுவாக சுமார் 50 – 60 இசை நிகழ்வுகளைத் திறம்பட வழங்கினார்கள். இதில் 5வயது சிறுவர் தொடக்கம் 20, 25, 30 வயது இளையோர்வரை பாடல்,இசை மூலம் விழாவை மெருகூட்டப் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
இவ்விழாவிற்கு லண்டனிலிருந்து புல்லாங்குழல் வித்துவானும் நாற்பதுபேர்வரை புல்லாங்குழல் அரங்கேற்றம் செய்தவருமான இசை ஆசிரியர் திரு பிச்சையப்பா ஞானவரதன் அவர்களும் லண்டன் – சர்வதேச நுண்கலைப்பீட பிரதிநிதியான திரு கணபதிப்பிள்ளை கலாதரன் அவர்களும் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் இசையின் முக்கியத்துவம் சங்கீதத்தின் மகிமைகளை எடுத்துரைத்தனர்.
இந்த விழாவில் ஒரு சிறப்பையும் காணக்கூடியதாக இருந்தது. யேர்மனியின் பல பாகங்களிலிருந்தும் ரசிகப் பெருமக்கள் கலந்து கொண்டனர். அதுமட்டு மல்ல சுவீஸ்லாந்து நாட்டிலிருந்தும் வெள்ளிவிழாக் கண்ட இசை ஆசிரியர் மீரா அவர்களிடம் இணைய வழியில் இசை பயிலும் மாணவமணிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டது சிறப்பான விடயமாகும்.
இன்னொரு விடயம் யேர்மனியின் பல பாகங்களிலிருந்தும் பரதம், சங்கீதம், வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், வீணை, போன்ற இசைகளை கற்பித்துக்கொண்டிருக்கும் ஆசிரியப் பெருந்தகைகளும் சுமார் 15 – 20 பேர்வரை ஒன்றுகூடி இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த ஆசிரியர்கள் அனைவரும் வெள்ளிவிழாக்கண்ட நாயகியைப் பாராட்டி மலர்ச்செண்டுகளும் மலர்மாலைகளும் பொன்னாடைகளும் அணிந்து கௌரவித்தனர். மகிழ்ச்சிப் பெருமிதமடைந்த விழா நாயகி அத்தனை அசிரியர்களையும் பாராட்டி பொன்னாடை அணிந்து கௌரவித்த காட்சி அற்புதம். பெருந்தொகைளான ஆசிரியப் பெருந்தகைகள் கலந்து கொண்ட நல்ல நிகழ்வு என்று கூறலாம்.
இதற்கெல்லாம் காரணம் வெள்ளிவிழாகண்ட மீரா நித்தியானந்தன்தான். அவர் மாணவர்கள் பெற்றோர்கள் மட்டுமல்ல அனைவருடனும் பழகும் விதம், அன்பு, மரியாதை, தன்னடக்கம், அவரின் புலமை, திறமை, ஆசிரியருக்கே உரிய பண்பாடு, வழிகாட்டல் அனைத்துமே அவரிடம் காணப்படும் சிறப்பால் கசல தரப்பினரின் மதிப்பைப் பெற்றிருக்கிறார் என்றால் மிகையாகாது.
இந்த விழாவில் எசன் நகர தமிழ்மொழிச்சேவை தமிழ்ப்பாடசாலை, யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை, யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், எசன் நகர கனகசபை நாட்டியாலயம், யேர்மனி எம்.ரி.வி தொலைக்காட்சி, யேர்மனி மண் சஞ்சிகை ஆகியவற்றின் தலைவர்களும் பாராட்டிப் பேசி, பொன்னாடை, பூமாலை அணிவித்து பாராட்டு மடல்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் விழா நாயகி.
இவ்விழாவானது சுமார் ஐந்துமணி நேரம் நீடித்தாலும் ரசிகப் பெருமக்கள் விழாமுடியும்வரை இருந்து ரசித்து மகிழ்ந்தனர்., அனைவருக்கும் வழங்கப்பட்ட சிற்றுண்டிகள், குளிர்பானங்கள், சூடான பானங்கள் அத்தனையும் வயிராற உண்டு, குடித்து மகிழ வைத்தது.
இந்த விழாவை தொய்வுறாமல், கலகலப்பாக, நேர்த்தியாக தூய தமிழில் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர்களான வளர்ந்துவரும் கலைஞர்கள் திரு சி சிவவினோபன் மற்றும் கலையரசி ஆகியோர் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியவர்களே. விழாவின் வெற்றிக்கு இவர்களின் பங்களிப்பு மிகச்சிறப்பாகவும் முக்கியமாகவும் விளங்கின என்றே கூறலாம்.
மேலாக இந்த விழா சிறப்புற விழா நாயகியின் பிள்ளைகள் அவரது கணவன் நித்தியானந்தனின் கடும் உழைப்பும் முயற்சியும் சான்று பகர்ந்தன. ஓடி..ஓடிச் சகல நிகழ்வுகளையும் நேரத்தோடு, திறமையாகச் செய்து முடிக்க இவர்களின் பெரும் பங்களிப்பு பாராட்டப்படவேண்டும்.’ கணவனின் வெற்றிக்குப் பின்னால் அவரது மனைவி இருப்பாள்’ என்றுதான் பலரைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் இங்கே விழா நாயகியின் பெரு வெற்றிக்கு அவரது அன்புக்கணவன் திரு நித்தியானந்தன் சகல வழிகளிலும் உதவி புரிந்து ஏணியாய் நின்று தன் மனைவியை ஏற்றி வைத்திருக்கிறார் என்றால் அவரை நாம் வாழ்த்திப் பாராட்டுவோம்.
நான் கடந்த நாற்பது வருடங்களாக யேர்மனியில் வசித்து வருகின்றேன். இப்படி ஒரு தமிழிசை விழாவைப் பார்த்து மகிழ்ந்தது கிடையாது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன். அப்படி இந்த விழா சகல வழிகளிலும் சிறப்புற்று மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றேன். வெள்ளிவிழா நாயகி திருமதி மீரா நித்தியானந்தனையும் ஸப்தஸ்வர இசைக் கல்லூரி மாணவ மணிகளையும் பாராட்டி வாழ்துகின்றேன்!…
‘தமிழும் தமிழ்க்கலைகளும் உலககெல்லாம் பரவட்டும்’
வைரமுத்து சிவராசா – பிரதமஆசிரியர் – மண் சஞ்சிகை – யேர்மனி – 13.10.2026
