புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தம்புள்ளை இப்பன்கட்டுவை ஏரியில் நிர்மாணிக்கப்பட்ட 5 மெகாவாட் திறன் கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் நிலையம் இன்று (18) தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
10.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் நிலையத்தின் மூலம் வருடாந்தம் சுமார் 7,500 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வருடாந்தம் சுமார் 6,440 மெட்ரிக் தொன் கார்பன் டைஒக்சைட் வெளியேற்றத்தை குறைப்பதுடன், டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக செலவிடப்படும் பெருமளவிலான நிதியை சேமிக்கவும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தும் இந்தத் திட்டம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயணத்தில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
