* அர்ச்சுனாவின் குழப்பமும் அரச பொறிமுறையின் காய் நகர்த்தலும்!
* 2019 இல் புனரமைக்கப்பட்ட பொன்னம்பலத்தின் குடும்ப பாரம்பரியம்!
* ”நடைபயணம்” நிதி வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்!..
— — —
யாழ், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளினதும் நிர்வாகக் கட்டமைப்பை, இலங்கை ஒற்றையாட்சி அரச இயந்திரத்தின் கீழ் முழுமையாகக் கையளிப்பதற்கான பகிரங்க ஏற்பாடுகள் தற்போது பட்டவர்த்தனமாகியுள்ளன.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள அற்ப சொற்ப அதிகாரங்களையும் மீண்டும் மத்திய அரசுக்குள் உள்வாங்கிக் கொள்ளும் தீர்க்கமான நோக்கத்தையே இந்நடவடிக்கை பிரதிபலிக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கொள்கையற்ற அரசியலையும், முறையான காரண – காரியங்களற்ற அவரது அசட்டுத் துணிச்சலையும் மூலதனமாகக் கொண்டு திட்டமிட்டு உருவாக்கப்படும் குழப்பமானதொரு சூழலை, ”இலங்கை அரசு” என்ற பொறிமுறைக் கட்டமைப்பு தனக்குச் சாதகமாகக் கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த நீண்டகாலப் பொறிமுறையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது வெறும் ஒரு கருவி மாத்திரமே.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் இத்தகைய திட்டமிட்ட மூலோபாயங்களுக்கு, காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வரும் சிங்கள அரசியல் கட்சிகளின் தமிழ் முகவர்களும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குழப்பங்களை விளைவிக்கும் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாகும்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ஸ்தாபகரான மறைந்த ஜி. ஜி. பொன்னம்பலம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதியுதவியைக் கொண்டே, ஆரம்பக் காலத்தில் தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சை நிலையம் (Cancer Institute) உருவாக்கப்பட்டது.
பொன்னம்பலத்தின் மகனான காங்கேசர் பொன்னம்பலம் வழிவந்த இக்குடும்பத்தினரின் வரலாற்றுப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், இந்த வைத்தியசாலையின் ஒரு பகுதிக்கு அவர்களது குடும்பப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு, இவர்களது குடும்பப் பெயரிலான கட்டடத் தொகுதிகள் இவர்களது உறவினர்களின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டன.
இருப்பினும், போதிய அரச நிதிப் பங்களிப்புகள், முறையான நிர்வாகக் கட்டமைப்புகள் இன்மையால், வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடனேயே தொடர்ந்தும் இயங்கி வருகின்றது.
இத்தகையதொரு பின்னணியில்தான், தனது பாட்டனாரால் உருவாக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு, கொழும்பு மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்குவதே சிறந்தது என்ற முடிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வந்திருக்கக்கூடும்…
ஏனெனில், புற்றுநோய்ப் பிரிவுக்குத் தேவையான தகுதிவாய்ந்த விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை மாகாண சபையின் கீழ் சுயாதீனமாக நிர்வகிப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன.
இது குறித்து, சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
அதாவது, மத்திய அரசின் போதனா வைத்தியசாலைக் கட்டமைப்போடு இதனைத் தற்காலிகமாகவோ அல்லது ஆளணிப் பகிர்வு (Staff Sharing) மூலமாகவோ இணைப்பது குறித்தே அங்கு பேசப்பட்டிருக்கின்றது.
ஆனால், அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அர்ச்சுனா இதற்குத் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் மத்திய அரசின் கைக்கு மாறுவதை அவர் அப்போது தடுத்திருந்தார்…
ஆனால், இந்த வாரம் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், புற்று நோய்ப் பிரிவு உட்பட வைத்தியசாலையின் அனைத்துப் பிரிவுகளினதும் நிர்வாகத்தை மத்திய அரசிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என அர்ச்சுனாவே பரிந்துரைத்து தவறாக நியாயம் கற்பித்திருக்கிறார்.
இந்த முரண்பாடான புள்ளியில்தான், அவருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
புற்றுநோய்ப் பிரிவின் ஆரம்பக்கால வரலாறு தெரியாத அர்ச்சுனாவின் நாகரிகமற்ற உரையாடல் தொனி, தமிழர் அரசியல் பண்பாட்டை பொதுவெளியில் மலினப்படுத்துவதாக அமைந்திருந்தது.
வைத்தியசாலையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய அரசின் நிதி மற்றும் வளங்களின் பங்களிப்பு அவசியம் என்பதை கஜேந்திரகுமார் வலியுறுத்தினாலும், வைத்தியசாலையின் முழுமையான நிர்வாக உரிமையை மாகாணப் பட்டியலில் (Provincial List) இருந்து நீக்கி, மத்திய அரசிடம் நிரந்தரமாக ஒப்படைப்பதை திட்டவட்டமாக எதிர்க்கின்றார்.
இந்த விடயத்திலேயே கஜேந்திரகுமாருடன் அர்ச்சுனா நேரடியாக மோதலில் ஈடுபட்டார். அதுவொரு ஆரோக்கியமான அல்லது ஜனநாயக ரீதியிலான எதிர்வாதம் அல்ல.
மாறாக, உளவியல் ரீதியாக ஈழத்தமிழர்களின் நிர்வாக ஆளுமையையும் நாகரிகத்தையும் பொதுவெளியில் கொச்சைப்படுத்தி, “இவர்களுக்கு எந்தவொரு அரசியல் உரிமையும் தேவையற்றது” என்றதொரு தவறான கற்பிதத்தை சிங்கள மக்களை நோக்கி உருவாக்குவதாகவே அது அமைந்திருந்தது.
ஆகவே, அர்ச்சுனாவின் இத்தகைய குழப்பகரமான நடைமுறை அரசியல் செயற்பாடுகள், ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலையும் பலவீனப்படுத்தி, அதற்கு எதிராகத் திசைதிருப்பும் ஒரு நுட்பமான கைங்கரியமாகவே அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
இதன் பின்னணியில் இயங்கும் இந்தச் சதி அரசியல் என்பது, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் மாத்திரம் அல்ல.
மாறாக, 2009 இறுதிப் போர் முடிவடைந்த பின்னரான அப்போதைய மகிந்த அரசாங்கத்தின் அனுசரணையுடனும் தென்னிலங்கைச் சக்திகளின் பங்களிப்புடனும் வடபகுதியில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ‘நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி’ மூலோபாயங்களின் ஒரு தொடர்ச்சியாகவே இதனை அவதானிக்க வேண்டும்.
அத்தகைய நல்லிணக்க முயற்சியின் ஒரு அங்கமாகவே, தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கான நிதி சேகரிப்பு நடைபயணம் ஒன்று 2011 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நடைபவணிக்கு ஆங்கிலத்தில் ‘Trail’ என்று பெயரிடப்பட்டிருந்தது.
‘கலர்ஸ் ஒப் கரெஜ் டிரஸ்ட்’ (Colours of Courage Trust – COC) எனப்படும் அறக்கட்டளை அமைப்பு இந்த நிதிச் சேகரிப்புப் பயணத்தை ஒருங்கிணைத்திருந்தது.
இலங்கையின் தென்பகுதியிலிருந்து வட மாகாணம் வரை வீதிகளில் இறங்கி நடந்த இந்த நடைபயணத்தில் பங்கேற்றவர்களல் அதிகமானோர் சிங்கள மக்கள்…
குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் முன்னணி உள்நாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் 27 நாட்களாகத் தொடர்ந்து இந்த நடைபவனியில் பங்கெடுத்திருந்தனர்.
வைத்தியசாலைக்கான உத்தியோகபூர்வ ‘நிதிச் சேகரிப்பு’ (Fundraising) நடவடிக்கைகளுக்கு இவர்களே பிரதான தூண்களாக விளங்கினர்.
இருப்பினும், இந்த நடைபயணத்திற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாகவோ அல்லது உத்தியோகபூர்வமாகவோ எவ்வித ஆதரவையும் வழங்கியிருக்கவில்லை. அவர் இதற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.
அப்போதைய கால அரசியல் புறக்கணிப்புச் சூழலே இதற்கான பிரதான காரணியாக அமைந்திருந்தது.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இந்நடப்பயண நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கெடுக்கவில்லை.
இருந்தாலும், இந்த திட்டத்திற்காகச் சேகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த நிதியில் பெரும்பகுதியானது புலம்பெயர் தமிழ் மக்களாலேயே வழங்கப்பட்டது என்பதே உண்மை.
தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்குரிய ஒரு பிரதான புற்றுநோய் வைத்தியசாலை என்ற தார்மீகக் காரணத்திற்காகவே, புலம்பெயர் தமிழர்கள் இணையதளம் வழியாகவும், சர்வதேச அமைப்புகள் மூலமாகவும் இலட்சக்கணக்கான டொலர்களை இந்த நடைபவனியின் நிதியக் கணக்கிற்கு அள்ளி வழங்கினர்.
இலங்கையின் முன்னணி தொழில்முனைவோர், முதலீட்டாளர் மற்றும் நன்கொடையாளரான நாதன் பிரணவன் சிவஞானநாதன் (Nathan Piranavan Sivagananathan) என்ற தமிழர் ஒருவரே, ‘கலர்ஸ் ஒப் கரெஜ் டிரஸ்ட்’ (Colours of Courage Trust) என்ற அமைப்பைத் தோற்றுவித்து, இந்த நடைபயணத்தை முன்னின்று நடத்தியிருந்தார்.
இவருடன் இணைந்து, இலங்கையின் கோப்பரேட் (Corporate) துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான மூத்த நிர்வாகப் பணி அனுபவம் கொண்ட சரிந்த வசந்த உனம்புவ (Sarinda Wasanth Unamboowe) என்பவரும் பணியாற்றியிருந்தார்.
ஆகவே, 2009 ஆம் ஆண்டு போருக்குப் பின்னரான சூழலில், இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளுடன் மறுசீரமைக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை மாத்திரமன்றி, தெல்லிப்பளை வைத்தியசாலையின் முழு நிர்வாகக் கட்டமைப்பையும் மத்திய அரசிடம் முழுமையாகக் கையளிப்பதற்கான இத்திட்டம், அரசியல் பின்னணி கொண்டது.
மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய தீர்மானங்களை எடுக்கத் தெரியவில்லை; அவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளைக் கூடத் திறம்பட நிர்வகிக்க ஆளுமை போதாது” போன்ற தவறான விம்பங்களைப் பொதுவெளியில் திட்டமிட்டு உருவாக்குவதன் பின்னணியில் பேரினவாத பொதுப் புத்தி இயங்கி வருகின்றது.
எட்டு வருடங்களுக்கும் மேலாகத் தேர்தல் நடத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் எஞ்சியிருக்கின்ற அதிகாரங்களையும் சட்ட பூர்வமாக மத்திய அரசிடம் மீளப் பறித்தெடுப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள பேரினவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே, தெல்லிப்பளை வைத்தியசாலை விவகாரம் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-
