ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) நிலப்பகுதிக்குள் மொராக்கோவிலிருந்து (Maroc) ஒரே நாளில் 60,000 குடியேறிகள் அத்துமீறி நுழைந்த நிகழ்வு, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான மாபெரும் அரசியல் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. எல்லையை உடைத்து நடந்த இந்த மாபெரும் ஊடுருவலை, தமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான “தாக்குதல்” என ஸ்பெயின் அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
சியூட்டா உள்ளூர் அரசின் தலைவர் யுவான் விவாஸ் (Juan Vivas) நேற்று வெள்ளிக்கிழமை அளித்த செவ்வியில், “சுமார் 60,000 பேர் எங்கள் நகருக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்; இது சியூட்டாவின் மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காடாகும்” என அதிர்ச்சியுடன் தெரிவித்தார். எல்லையைக் கடக்கும் இந்த ஆபத்தான முயற்சியில் 34 பேர் கடலில் மூழ்கியும், நெரிசலிலும் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வந்தவர்களில் பெரும்பாலானோர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இளைஞர்களும் பதின்ம வயதினரும் ஆவர். இருப்பினும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் மீண்டும் மொராக்கோவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாபெரும் குடியேற்ற அலை, ஐரோப்பாவின் வலதுசாரி மற்றும் அதிவலதுசாரி அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஷெங்கன்’ (Espace Schengen) எனப்படும் தடையற்ற ஐரோப்பியப் பயணப் பகுதியின் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கப் பல நாடுகள் வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன. குடியேறிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கப் பிரான்சும் தனது எல்லைக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
நெருக்கடியின் உச்சமாக, ஸ்பெயின் நாட்டுடனான எல்லையைத் தற்காலிகமாக மூடுவதாக இத்தாலி நேற்று வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக அறிவித்துள்ளது. வியாழக்கிழமையே இதற்கான முன்னறிவிப்பை வெளியிட்ட இத்தாலிக்கு , பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இத்தாலி எடுத்த இந்த முடிவை, “வெற்று அரசியல் நாடகம்” என ஸ்பெயின் கடுமையாகச் சாடியுள்ளது. இது ஒருபுறமிருக்க, தற்போதைய சட்ட வரைமுறைகளின்படி இத்தாலியின் இந்த எல்லை மூடல் அறிவிப்பை நடைமுறைப்படுத்துவது முற்றிலும் சாத்தியமற்றது எனச் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்காவின் நுழைவாயிலில் ஏற்பட்ட இந்தச் சிறு விரிசல், இன்று ஐரோப்பாவின் தடையற்ற பயணக் கனவுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது
